ஜியார்ஜ் ஸ்மூட்
பிறப்பு | பெப்ரவரி 20, 1945 புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா |
---|---|
வதிவு | ஐக்கிய அமெரிக்கா |
தேசியம் | அமெரிக்கா |
துறை | இயற்பியல் |
நிறுவனம் | Lawrence Berkeley National Laboratory |
Alma mater | Massachusetts Institute of Technology |
அறியப்பட்டது | Cosmic microwave background radiation |
பரிசுகள் | இயற்பியல் நோபல் பரிசு (2006) |
ஜியார்ஜ் ஃவிட்ஸ்ஜெரால்டு ஸ்மூட் III (George Fitzgerald Smoot) (பிறப்பு:பெப்ரவரி 20, 1945) ஒரு அமெரிக்க விண்மீனியல் அறிஞரும் (Astrophysicist) பேரண்டவியல் அறிஞரும் ஆவார். இவர் 2006 ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசை நாசாவைச் சேர்ந்த ஜான் மேத்தர் அவர்களுடன் சேர்ந்து பெற்றார். இவர் பெர்க்கிலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியராகப் பணி யாற்றுகிறார். இவர் அமெரிக்காவில் உள்ள மேரிலாந்தில் இருக்கும் நாசா (NASA) வைச் சேர்ந்த கோடார்டு விண்ணோச்சு நடுவணகத்தில் (Goddard Space Flight Center) பணிபுரியிம் ஜான் மேத்தர் அவர்களோடு சேர்ந்து கண்டுபிடித்த பேரண்ட விண்வெளியின் பின்புலத்தில் காணப்படும் நுண்ணலைக் கதிர்வீச்சின் பண்புகளைக் கொண்டு, பேரண்டத்தின் மூலப் பெரும்பிறக்கம் (பெருவெடி) (Bing-Bang) என்னும் கொள்கையை உறுதி செய்ய உதவியது என்பதற்காக நோபல் பரிசு அளிக்கப்படுகின்றது. அவர்கள் கண்டுபிடிப்புக்கு COBE என்னும் செயற்கைமதி (செயற்கைத் துணைக்கோள்) பெருந்துணையாய் இருந்தது.
வாழ்க்கையும் ஆய்வுகளும்
ஸ்மூட் அவர்கள் அமெரிக்காவில் உள்ள ஃவுளோரிடா (புளோரிடா) மாநிலத்தில் யூக்கான் (Yukon) என்னும் ஊரில் பெப்ருவரி 20, 1945ல் பிறந்தார். இவர் மாசாச்சுசெட்சு இன்ச்டிட்யூட் ஆஃவ் டெக்னாலஜி (எம் ஐ டி, MIT) யில் படித்து கணிதத்திலும் இயற்பியலிலும் 1966 ஆம் ஆண்டு பட்டம் பெற்றார். நான்கு ஆண்டுகள் கழித்து 1970ஆம் ஆண்டு அணுவுட்துகள்கள் பற்றிய ஆய்வுக்காக முனைவர் பட்டம் பெற்றர். அதன் பின்னர் தன் ஆய்வுத்துறையை மாற்றிக்கொண்டு பேரண்டம் பற்றி ஆராயத்தொடங்கினார். லாரன்ஸ் பெர்க்கிலி நாட்டு ஆய்வுச்சாலையில் 1968ல் நோபல் பரிசு பெற்ற லூயி ஆல்வாரஸ் என்னும் அறிஞருடன் கூட்டாக சேர்ந்து ஆய்வு நடத்தினார். அவ் ஆய்வானது நிலவுலகின் காற்றுமண்டலத்தின் மிகப்புறத்தே இருக்கும் மேலடுக்குப் பகுதிக்கு கருவிகள் பொருத்திய பலூன் (நொய்ம்பை) ஒன்றை அனுப்பி அதன் துணையால் எதிர்ப்பொருள் (antimatter) (பலூன்) இருக்கின்றதா என்பதைக் கண்டுபிடிப்பது பற்றியதாகும். அன்றிருந்த பேரண்டக் கொள்கைகள் அப்படி ஒரு நிலையைச் சுட்டியது.
பின்னர் ஸ்மூட் அவர்களின் ஆர்வம் பேரண்டப் பின்புல நுண்ணலைக் கதிர்வீச்சைப் (பே நு கவீ) (CMB) பற்றிய கருத்தில் வலுப்பெற்றது. பேரண்டத்தில் பின்புலமாக நுண்ணலைக் கதிர் வீச்சு இருப்பதை ஆர்னோ ஆலன் பென்சியாஸ் என்பவரும் ராபர்ட் வுட்ரோ வில்சன் என்பவரும் தற்செயலாய் 1964ல் கண்டு பிடித்தனர். இக்கண்டுபிடிப்புக்காக இவ்விரௌவர்ம் 1978ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசைப் பெற்றனர். இந்த பின்புல நுண்ணலைக் கதிர்வீச்சு ஒரே சீராக எல்லா திசைகளிலும் உள்ளனவா என்பது தெரியாமல் இருந்தது. பேரண்டத்தின் கட்டமைப்பும் அது சுழன்றுகொண்டு வருகின்றதா என்பதும் போன்ற அடிப்படையான கேள்விகளுக்கு விடை தெரியாமல் இருந்தது. பேரண்டத்தைப் பற்றிய கருத்துருக்களின் ஒன்று பேரண்டம் சுழலுவதாயின் இந்தப் பின்புல கதிர்வீச்சில் ஒருவர் காணும் திசைக்கு ஏறார்போல சிறு வேறுபாடுகள் இருக்குமெனவும், அதனைத் துல்லிய வெப்ப வேறுபாடுகளால் கண்டறியலாம் எனவும் அறிந்திருந்தனர். ஸ்மூட் அவர்கள் ஆல்வாரஸ், ரிச்சர்ட் முல்லர் ஆகியோரின் துணையுடன் 60 பாகை திசை வேறுபாட்டில் அறியக்கூடிய மிகத்துல்லிய நுண்ணலை வேறுபாட்டை அளக்கும் ரேடியோ அளவியைக் கண்டுபிடித்துப் பயன்படுத்தினர். அதன் விளைவாக பேரண்டத்தில் நுண்ணலை கதிர்வீச்சு ஒரே சீராக எல்லா திசையிலும் இல்லை என்று கண்டறிந்தனர். இக்கண்டுபிடிப்பு பேரண்டத்தின் ஆதிமூலத் தோற்றத்திற்குக் காரணமான பெரும்பிறக்கம் (Big Bang) (பெருவெடி) என்னும் கொள்கைக்கு வலு சேர்க்கும் அடிப்படையாக உள்ளதாகக் கண்டுள்ளனர்.