உள்ளடக்கத்துக்குச் செல்

அத்வைத வேதாந்த தத்துவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆதிசங்கரருடன், சீடர்கள் பத்ம பாதர், சுரேஷ்வரர், அஸ்தாமலகர் மற்றும் தோடகர்

அத்வைத வேதாந்த தத்துவம் ஆதிசங்கரர் உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம் மற்றும் பகவத் கீதை ஆகிய வேதாந்த சாத்திரங்களுக்கு தமது விளக்கவுரைகளை மையப்படுத்தி நிறுவப்பட்ட தத்துவமாகும்.[1]

இது உருவமும் குணமும் அற்ற பிரம்மம் எவ்வாறு உருவம் உடைய உலகமாகவும் உயிரினங்களாகவும் தோன்றியது என்பதை விளக்குவதற்கான முயற்சியே. மேலும் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் வேறுபடாத ஒன்றே என்ற அத்வைத கருத்தை வலியுறுத்துவது. பிரம்மம் நிலையானது; பிரபஞ்சம் மற்றும் சீவராசிகள் நிலையற்றது என்ற கொள்கையைக் கொண்டது. விசிட்டாத்துவைதம், துவைதம் போன்ற மற்ற வேதாந்த தத்துவங்களைப் போன்று இதுவும் ஒரு வேதாந்த தத்துவப் பிரிவு.

அத்வைத தத்தவப் பிரிவுகள்

[தொகு]

சங்கரரின் அத்வைத வேதாந்த தத்துவம் காலப்போக்கில் பல பிரிவுகளாகப் பிரிந்தது. பொ.ஊ. 16-17 நூற்றாண்டில் வாழ்ந்த அப்பய்ய தீக்ஷிதர் எழுதிய சித்தாந்த லேச சங்க்ரகம் என்ற நூலின்படி அத்வைத வேதாந்த தத்துவத்தில் பத்திற்கும் மேற்பட்ட பிரிவுகள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் முக்கியமான மூன்று பிரிவுகள்;

விவரணம்

[தொகு]

சங்கரரின் பிரம்ம சூத்திர பாஷ்யத்திற்கு (விளக்கவுரை), அவரது சீடரான பத்மபாதர் பாஞ்சபாதிகா என்ற மிக விரிவான விளக்கவுரை எழுதினார். அதற்கு பிரகாசாத்ம யதி என்பவர் (பொ.ஊ. ஒன்பதாம் நூற்றாண்டு) எழுதிய விளக்கவுரையைப் பின்பற்றி எழுந்த விவரணம் அத்வைத வேதாந்த தத்துவப் பிரிவு இது. அத்வைத வேதாந்த தத்துவ பிரிவுகளில் முக்கியப் பிரிவாக இது கருதப்படுகிறது.

பிரகாசாத்ம யதியின் நூலைத் தொடர்ந்து அகண்டானந்தர், சித்சுகர், ஆனந்தா பூரணர் போன்றோர் பல அத்வைத வேதாந்த தத்துவ நூல்களை இயற்றி இந்தப் பிரிவை வளப்படுத்தினர்.

பாமதி

[தொகு]

சங்கரரின் பிரம்ம சூத்திரத்திற்கு விளக்க உரைக்கு, ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த வாசஸ்பதி மிஸ்ரர் என்பவர் பாமதி என்ற விளக்கவுரையைப் (டீகா) பின்பற்றி எழுந்த பிரிவுதான் “பாமதி” அத்வைத வேதாந்த தத்துவப் பிரிவு.

வார்த்திகம்

[தொகு]

பிரகதாரண்யக உபநிடதத்திற்கு சங்கரர் எழுதிய விளக்க உரைக்கு, அவரது சீடரான சுரேஷ்வரர் என்பவர் “பிரகதாரண்யக பாஷ்ய வார்த்திகம்” என்ற விளக்க உரை (வார்த்திகம்) என்ற நூலை எழுதினார். இந்நூலின் கொள்கையை பின்பற்றி எழுந்தது வார்த்திக அத்வைத வேதாந்த தத்துவப் பிரிவு. சுரேஷ்வரரின் கருத்துக்களை பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த சர்வஜ்ஞாத முனி தொகுத்து வார்த்திகம் எனும் அத்வைத வேதாந்த தத்துவத்தைப் பிரிவை பரப்பினார்.

புதிய அத்வைத வேதாந்த பிரிவு

[தொகு]

தற்காலத்தில் இராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் மற்றும் இரமண மகரிசி போன்ற மகான்கள் தங்கள் கருத்துக்களை அத்வைதம் என்ற ஊடகத்தின் வாயிலாகவே வெளியிட்டனர். இவர்களின் கருத்துக்கள் சங்கரரின் கருத்துக்களை அடியொற்றி இருந்தாலும் பல இடங்களில் நுண்ணிய வேறுபாடுகளைக் காணலாம்.

கருவி நூல்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]