ஆன் பிராங்க்
ஆன் பிராங்க் | |
---|---|
பிறப்பு | ஆன்னலீசி மேரி பிராங்க் 12 சூன் 1929 பிராங்க்ஃபுர்ட், செருமனி |
இறப்பு | 1945 மார்ச்சின் முற்பகுதியில் (வயது 15) பேர்கன்-பெல்சன் வதைமுகாம், கீழ் சாக்சனி, நாட்சி ஜெர்மனி |
தேசியம் | செருமானியர் 1941 வரை நாடற்றவர் 1941 முதல் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | இளம் பெண்ணொருத்தியின் நாட்குறிப்பு (1947) |
ஆன் பிராங்க் (Anne Frank) (1929 சூன் 12-1945 சனவரி 6)[1] இரண்டாம் உலகப்போரின் காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு யூதச் சிறுமி. இவர் தான் எழுதிய நாட்குறிப்புகளுக்காக அறியப்படுகிறார். இவரது குடும்பம் நெதர்லாந்தில் வசித்து வந்தது. இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியின் நாசிப்படைகளால் யூதர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டு வந்ததால் இவர்களது குடும்பம் ஒரு மறைவிடத்தில் இரண்டு ஆண்டுகளாக வசித்து வந்தது. பின்னர் அடையாளம் தெரியாத ஒருவரால் காட்டிக்கொடுக்கப்பட்டு இவர்கள் முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர். அங்கு இச்சிறுமி இறந்து விட்டார்.
மறைந்து வாழ்ந்த போது இவர் எழுதிய நாட்குறிப்புகள், இவர் இறந்த பின் இவரது தந்தையால் நூலாக வெளியிடப்பட்டது. இந்நூல் இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் யூதர்கள் பட்ட அவலங்களை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.
ஆன் பிராங்கின் தந்தையார் ஓட்டோ பிராங்க். இவர் ஒரு வணிகராக இருந்தார். ஆன்னுக்கு மர்காட் என்ற தமக்கை இருந்தார். இவர்கள் மறைவிடத்தில் வாழ்ந்த போது இவர்களுடன் இன்னொரு யூதக்குடும்பமும் வசித்து வந்தது. பின்னாளில் மேலும் ஒரு பல் மருத்துவரான யூதரும் வந்து சேர்ந்தார். மொத்தம் இந்த எட்டு பேரும் ஏறத்தாழ இரண்டாண்டுகள் இவ்வாறு மறைந்து வாழ்ந்தனர்.
பின்னர் யாரோ ஒருவரால் காட்டிக்கொடுக்கப்பட்டு இவர்கள் வதைமுகாம்களில் அடைக்கப்பட்டனர். வதைமுகாமில் ஆன்பிராங்க், அவரது தமக்கை, தாய் ஆகியோர் இறந்து விட்டனர். பின்னர் நேசநாடுகள் ஜெர்மனியை வெற்றிகொள்ளத்துவங்கிய நேரத்தில் ஆன்னின் அப்பா இருந்த வதைமுகாமினை ஜெர்மானியப் படைகள் கைவிட்டுச் சென்றன. இதனால் ஓட்டோ பிராங்க் பிழைத்தார். இவருக்கு தனது மகள் எழுதிய நாட்குறிப்பு கிடைத்தது. இதனை இவர் தனது நட்புவட்டாரங்களில் தனது மகளின் நினைவாக சில படிகள் எடுத்து படிக்கக் கொடுத்தார். பின்னர் இது நூலாகவும் வெளியிடப்பட்டது. பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.[2]
ஆன் பிராங்க் மறைந்து வாழ்ந்த கட்டிடம் இப்போது அவரது நினைவிடமாக மாற்றப்பட்டுள்ளது.