இசுடாம்போர்டு இராஃபிள்சு
சர் தாமசு இசுடாம்போர்டு இராபிள்சு | |
---|---|
பிறப்பு | 6 சூலை 1781[1] மோரண்ட் துறைமுகம் ஜமேக்கா |
இறப்பு | 5 சூலை 1826 (அகவை 44) இலண்டன், இங்கிலாந்து |
பணி | பிரித்தானிய குடியேற்றவாத அலுவலர் |
அறியப்படுவது | பிரித்தானிய சிங்கப்பூரை நிறுவியவர் |
சமயம் | ஆங்கிலிக்கம் |
வாழ்க்கைத் துணை | 1. ஒலீவியா மாரியெம்னே தெவெனிசு மணம்: 1805; முறிவு: 1814 2. சோபியா ஹல் மணம்: 1817 |
சர் தாமசு இசுடாம்போர்டு இராபிள்சு, (எப்ஆர்எஸ் (FRS)|எப்ஆர்ஏஎஸ் (FRAS); (Sir Thomas Stamford Raffles); என்பவர் பிரித்தானிய அரசியலாளர்; டச்சுக் கிழக்கிந்திய நிர்வாகத்தில் துணைநிலை ஆளுநர் (1811–1815); பிரித்தானிய பென்கூலன் ஆளுநர் (1817–1822); சிங்கப்பூரை நிறுவியவர்.
நெப்போலியப் போர்களின் அங்கமாக டச்சு, பிரான்சியப் படைகளிடமிருந்து இந்தோனேசியத் தீவான சாவகத்தைக் கைப்பற்றி பிரித்தானியப் பேரரசை விரிவாக்குவதில் பெரும் பங்காற்றியவரும் ஆவார். சாவகத்தின் வரலாறு (The History of Java) எனும் நூலை எழுதியுள்ளார்.
இளமைக்காலம்
[தொகு]இராபிள்சு ஜமேக்காவின் மோரான்ட் துறைமுகத்தில் ஆன் (Ann) என்ற கப்பலில்; கப்பல் தலைவர் பெஞ்சமின் இராபிள்சுக்கும் (Captain Benjamin Raffles), ஆன் ராபிள்சுக்கும் (Anne Raffles) சூலை 6, 1781-இல் பிறந்தார். பெஞ்சமின் இராபிள்சு யார்க்சையர் நகரைச் சேர்ந்தவர்.
அமெரிக்கப் புரட்சியின் போது மேற்கிந்தியத் தீவுகளில் வணிகம் செய்ய முற்பட்ட பெஞ்சமினின் முயற்சி தோல்வி அடைந்தது. அவரின் குடும்பம் வறுமையில் வாடியது. இருப்பினும் குறைந்த வருமானத்திலும் இராபிள்சின் கல்வி தொடர்ந்தது. தங்குபள்ளி ஒன்றில் கல்வி கற்றார்.
அலுவலக உதவியாளர் பணி
[தொகு]1795-இல், அவரின் 14-ஆவது அகவையில், இலண்டனில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தில் அலுவலக உதவியாளராகப் பணிக்குச் சேர்ந்தார். 1805-இல் மலேசியா. பினாங்கு நகருக்கு அனுப்பப் பட்டார்.
அந்தக் காலத்தில் வேல்சு இளவரசர் தீவு (Prince of Wales Island) என அழைக்கப்பட்ட பினாங்கு தீவில் தம்முடைய தென்கிழக்காசிய வாழ்க்கையைத் தொடங்கினார். அந்தக் காலக் கட்டத்தில் பினாங்கின் ஆளுநராக பிலிப் துண்டாசு (Philip Dundas) என்பவர் இருந்தார். அவரின் கீழ் ராபிள்சு பணி புரிந்தார்.
திருமண வாழ்க்கை
[தொகு]1805-இல் புதிய ஆளுநருக்கு துணைச் செயலராக நியமிக்கப்பட்டார். அந்த ஆண்டு ஒலீவியா மாரியம்னெ தெவெனிசு (Olivia Mariamne Devenish) என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். சென்னையில் துணை அறுவை மருத்துவராக இருந்த பேன்கோர்ட் (Jacob Cassivelaun Fancourt) என்பவரை மணம் புரிந்திருந்த ஒலீவியா, அவரின் மறைவிற்குப் பிறகு ராபிள்சை மணம் புரிந்தார்.
ராபிள்சு மலாய் மொழி நன்கு அறிந்தவர். அத்துடன் அவரின் பேச்சுத் திறமையால் ஈர்க்கப்பட்ட இந்தியத் தலைமை ஆளுநர், மிண்டோ பிரபு இவரை மலாக்காவிற்கு அனுப்பினார். 1811-இல் நெப்போலியப் போர்களின் போது பிரான்சு நாடு, ஆலந்து நாட்டை கைப்பற்றியது. அதனால் இராபிள்சு இந்தோனேசியா நாட்டை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று.
துணைநிலை ஆளுநர் பதவி
[தொகு]டச்சு, பிரான்சியப் படைகளுக்கு எதிராக இந்தோனேசியாவின் சாவகத் தீவில் (ஜாவா தீவு) நடத்தப்பட்ட போரில் பங்கேற்றார். 45 நாட்கள் நடந்த போரில் சாவகத் தீவைக் கைப்பற்றியதை அடுத்து மிண்டோ பிரபு இராபிள்சை துணைநிலை ஆளுநராக நியமித்தார்.
எஞ்சியிருந்த எதிர்ப்பாளர்களிடம் அமைதிப் பேச்சு நடத்தி உள்ளூர் அரசர்களைப் பிரித்தானிய ஆட்சியை ஏற்க வைத்தார். சாவகத்தின் இரண்டு முதன்மையான உள்ளூர் அரசுகளில் ஒன்றான யோக்யாகார்த்தாவின் மீது தாக்குதல் நடத்தி கைப்பற்றினார்.[2]
சாவகப் போர்
[தொகு]பிரித்தானிய தாக்குதலை அடுத்து மத்திய சாவகத்தில் அமைதி திரும்பினாலும் நிலையற்றத் தன்மைக்கும் ஐரோப்பியர்களுக்கு எதிரான வெறுப்பிற்கும் வித்திட்டது; இது 1820-களில் சாவகப் போர் மூலக் காரணமாகவும் அமைந்தது.[3] சுமாத்திராவின் பலெம்பாங் பகுதியில் ஆண்டு வந்த உள்ளூர் சுல்தான் மகமது பகருதீனை (Mahmud Badaruddin II) வீழ்த்தி அருகிலிருந்த பங்கா தீவையும் (Bangka Island) கைப்பற்றி அப்பகுதியில் பிரித்தானிய ஆட்சியை நிறுவினார்.
அடிமைகள் வணிகம்
[தொகு]தாம் துணைநிலை ஆளுநராக இருந்த காலத்தில் ஆசியாவில் பிரித்தானியக் கொள்கைகளுக்கு ஏற்ப அடிமை வணிகத்தைக் கட்டுப் படுத்தினார். இருப்பினும் அடிமைகள் வணிகம் முற்றிலும் கட்டுப்படுத்தபடவில்லை; இராபிள்சின் மாளிகையிலேயே பல அடிமைகள் ஊழியம் செய்து வந்தனர்.[4]
இராபிள்சின் வழிகாட்டுதலில், சாவகத்தின் (ஜாவா (தீவு)) பல தொன்மையான கட்டிடங்கள் முதனமுதலாக ஆவணப் படுத்தப்பட்டன. காலின் மெக்கன்சீ (Colin Mackenzie) என்பவர் பிரம்பானான் கோயில் குறித்த ஆங்கில குறிப்புக்களை முதன்முதலில் தொகுத்தார்; எச்.சி. கார்னிலியசு என்பவர் போரோபுதூர் சூழ்ந்திருந்த காட்டுப் புதர்களை நீக்கினார்.[5]
நில மேலாண்மைக் கொள்கை
[தொகு]டச்சுக்காரர்கள் கடைபிடித்த கொள்கைகளுக்கு மாறாக பணம் சார்ந்த குத்தகை நில மேலாண்மைக் கொள்கையை வகுத்தார். தீவின் கடுமையான வாழ்நிலைக் காரணங்களால் அவரின் மனைவி ஒலீவியா நவம்பர் 26, 1814-இல் மறைந்தார். இந்த மறைவினால் மிகவும் பாதிக்கப்பட்ட இராபிள்சு இங்கிலாந்து திரும்பினார். நெப்போலியப் போர்களின் இறுதியில் ஏற்பட்ட உடன்பாடு காரணமாக சாவகம் (ஜாவா) நெதர்லாந்து நாட்டிற்கு வழங்கப்பட்டது.
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ "Sir Stamford Raffles's family". Singapore Infopedia. Singapore Government. பார்க்கப்பட்ட நாள் 13 December 2014.
- ↑ Ricklefs, M. C. A History of Modern Indonesia Since C. 1200, 4th Edition, Palgrave Macmillan, 2008
- ↑ Carey, Peter, The Power of Prophecy: Prince Dipanagara and the End of an Old Order in Java, 1785-1855, 2008
- ↑ Hahn, Emily, Raffles of Singapore, 1946
- ↑ Miksic, John, Borobudur: Golden Tales of the Buddhas, 1990
வெளி இணைப்புகள்
[தொகு]- Biography பரணிடப்பட்டது 2005-04-04 at the வந்தவழி இயந்திரம் at the Raffles Museum of Biodiversity Research
- Find-A-Grave profile for Sir Thomas Stamford Raffles
- The natural history of game birds by Sir William Jardine with a memoir on Sir Stamford Raffles
- The History of Java by Sir Stamford Raffles at the Internet Archive.
- Raffles and the Golden Opportunity, The Guardian, 5 December 2012