இரு தளப் பேருந்து
இரு தளப் பேருந்து அல்லது இரட்டைத் தட்டுப் பேருந்து (Double-decker Bus) என்பது இரு தளங்களை அல்லது இரு மாடிகளையுடைய பேருந்து ஆகும்.[1] இலண்டனில் பாரிய அளவிலான போக்குவரத்துக்குச் சிவப்பு நிற இரு தளப் பேருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. ஐரோப்பா, ஆசியா, முந்திய பிரித்தானியக் குடியேற்றங்களிலும் ஆங்காங்கு, சிங்கப்பூர், கனடா போன்ற காப்பரசுகளிலும் உள்ள ஏனைய நகரங்களிலும் இரு தளப் பேருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
பெரும்பாலும் அனைத்து இரு தளப் பேருந்துகளும் ஒரு வளையாத தனி அடித்தட்டைக் கொண்டிருக்கும்.
இந்த வகைப் பேருந்தானது பாரிய அளவிலான போக்குவரத்தைக் காட்டிலுஞ் சுற்றுலாவிற்கே அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.
பயன்படுத்தப்படும் இடங்கள்
[தொகு]ஐரோப்பா
[தொகு]பிரித்தானியா
[தொகு]பிரித்தானியாவில் இரு தளப் பேருந்துகள் பொதுப் பயன்பாட்டில் உள்ளன. பிரித்தானியாவிலுள்ள பெரும்பாலான இரு தளப் பேருந்துகள் 9.5 மீற்றருக்கும் 11 மீற்றருக்கும் இடைப்பட்ட நீளத்தைக் கொண்டவை.
1941இல் பிரித்தானியாவில் இரு தள ஊர்தி ஒன்றைச் செலுத்துவதற்கான ஒப்புதற்பத்திரத்தைப் பிலிசு தாம்சன் பெற்றுக் கொண்டார்.[2] இரு தள ஊர்தியொன்றைச் செலுத்துவதற்கான ஒப்புதற்பத்திரத்தைப் பிரித்தானியாவில் பெற்ற முதற்பெண் இவராவார்.[3]
இலண்டனில் உள்ள பேருந்துகளில் அதிகமானவை இரு தளப் பேருந்துகளாகும். 2007இல் இலண்டன் பேருந்துத் தெரு 141இல் கலப்பு இரு தளப் பேருந்து அறிமுகப்படுத்தப்பட்டது.[4]
அயர்லாந்து
[தொகு]அயர்லாந்தில் இடப்லினைச் சூழவுள்ள இடங்களில் இடப்லின் பேருந்தால் இயக்கப்படும் பேருந்துகளில் பெரும்பாலானவை இரு தளப் பேருந்துகளாகும்.
செருமனி
[தொகு]செருமனியில் பெர்லினிலுள்ள இரு தளப் பேருந்துகள் பெர்லினெர் வெர்கெர்சுபெட்ரியெபெயால் இயக்கப்படுகின்றன.[5] 2002இல் இயக்கப்பட்ட இரு தளப் பேருந்துகள் 13.5 மீற்றர் நீளமாகவும் 95 பயணிகளைக் கொண்டு செல்லக் கூடியதாகவும் இருந்தன. பின்னர், அவை நாமன் பேருந்தால் வழங்கப்பட்ட இரு தளப் பேருந்துகள் மூலம் மாற்றீடு செய்யப்பட்டன. இப்புதிய பேருந்துகள் 128 பயணிகளைக் கொண்டு செல்லக்கூடிய விதத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
மாக்கடோனியக் குடியரசு
[தொகு]மாக்கடோனியக் குடியரசின் தலைநகரான இசுப்கோப்சேயில் போக்குவரத்துச் செய்வதற்காக அரசாங்கம் 220 இரு தளப் பேருந்துகளை வாங்கியுள்ளது.[6] இப்பேருந்துகள் 80 பயணிகளைக் கொண்டு செல்லக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன.
துருக்கி
[தொகு]துருக்கியில் இசுத்தான்புல் பொதுமக்கட்போக்குவரத்து அமைப்பு நீண்ட தொலைவுப் பயணங்களுக்காக 89 இரு தளப் பேருந்துகளைப் பயன்பாட்டில் ஈடுபடுத்தியுள்ளது.
பிரான்சு
[தொகு]முதலாவது இரு தளப் பேருந்து 1853இல் பாரிசில் கண்டுபிடிக்கப்பட்டது. அவ்விரு தளப் பேருந்து குதிரைகளின் மூலம் இழுக்கப்பட்டது. அதனுடைய மேற்றளம் பெரும்பாலும் மூடப்படாமலேயே இருந்தது.
பின்னர், பாரிசில் விசைப் பொறி மூலம் இயங்கும் முதலாவது இரு தளப் பேருந்து 1906இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆசியா
[தொகு]இலங்கை
[தொகு]முதலாவது இரட்டைத்தட்டுப் பேருந்து 1946 பெப்ரவரி 20 இல் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டது.[7] 1950களில் தென்மேற்குப் பேருந்து நிறுவனத்தின் இரு தளப் பேருந்துகள் இலங்கையின் காலித் தெருவில் பயன்பாட்டுக்கு விடப்பட்டன. பின்னர், 1958-இல் அனைத்துப் பேருந்துச் சேவைகளும் தேசியமயமாக்கப்பட்டபோது இப்பேருந்துகளை இலங்கை போக்குவரத்து சபை பெற்றுக் கொண்டது.[8]
ஆங்கொங்
[தொகு]ஆங்கொங்கில் 1949இல் கௌலூன் விசைப் பொறிப் பேருந்து நிறுவனத்தால் இரு தளப் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன.[9]
மக்காவு
[தொகு]மக்காவில் 1970களின் தொடக்கத்திலிருந்து 1980களின் பிற்பகுதி வரை இரண்டாங்கையான இரு தளப் பேருந்துகள் பயன்படுத்தப்பட்டன.
இந்தியா
[தொகு]1937இலிருந்து மும்பையில் இரு தளப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை, கொச்சி, திருவனந்தபுரம், கொல்கத்தா, ஐதராபாக்கம் ஆகிய இடங்களிலும் இரு தளப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவை இலண்டன் இரு தளப் பேருந்துகளின் வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் பெரும்பாலும் அசோக்கு இலேலண்டின் இரு தளப் பேருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
வட அமெரிக்கா
[தொகு]கனடா
[தொகு]கனடாவில் 2000இலிருந்து பொதுப் போக்குவரத்து அமைப்புகளில் நவீன இரு தளப் பேருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை பிரித்தானியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
ஐக்கிய அமெரிக்கா
[தொகு]ஐக்கிய அமெரிக்காவில் மாணவர்களால் நடாத்தப்படும் பேருந்து நிறுவனமொன்று இலண்டனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆறு இரு தளப் பேருந்துகளைச் சேவையில் ஈடுபடுத்துகிறது.
மெகாவசு என்ற தனியார் நிறுவனமும் இரு தளப் பேருந்துகளை இயக்கி வருகிறது.[10]
பாதுகாப்பு
[தொகு]இரு தளப் பேருந்துகள் தாழ்வாக உள்ள அணைகளுடன் மோதி இடிபட்டும் உள்ளன. செப்டெம்பர், 2010இல் மெகாவசு இடிபாடு இவ்வாறே ஏற்பட்டது.[11]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ இரு தளப் பேருந்து (ஆங்கில மொழியில்)
- ↑ பேருந்துகளின் பொற்காலம் (ஆங்கில மொழியில்)
- ↑ ["பிலிசு தாம்சன் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-05-27. பார்க்கப்பட்ட நாள் 2012-05-06. பிலிசு தாம்சன் (ஆங்கில மொழியில்)]
- ↑ ["உலகின் முதல் இரு தளக் கலப்புப் பேருந்து இலண்டனில் சேவைக்குச் செல்கிறது (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-04-25. பார்க்கப்பட்ட நாள் 2012-05-06. உலகின் முதல் இரு தளக் கலப்புப் பேருந்து இலண்டனில் சேவைக்குச் செல்கிறது (ஆங்கில மொழியில்)]
- ↑ ["பேருந்து முறைமை (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-05-15. பார்க்கப்பட்ட நாள் 2012-05-06. பேருந்து முறைமை (ஆங்கில மொழியில்)]
- ↑ இரு தளப் பேருந்துகளுக்கு இசுக்கோப்சே தயாராகிறது (ஆங்கில மொழியில்)
- ↑ "Principal Ceylon Events, 1946". Ferguson's Ceylon Directory, Colombo. 1947.
- ↑ இலங்கை போக்குவரத்து சபை (இ. போ. ச.) (ஆங்கில மொழியில்)
- ↑ பேருந்துச் சேவைகள் (ஆங்கில மொழியில்)
- ↑ ["மெகாவசைப் பற்றி (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-05-10. பார்க்கப்பட்ட நாள் 2012-05-06. மெகாவசைப் பற்றி (ஆங்கில மொழியில்)]
- ↑ மெகாவசு இடிபாடு: நீங்கள் அமர்ந்த இடத்திலேயே உயிர் வாழ்தல் தங்கியிருந்தது (ஆங்கில மொழியில்)