உள்ளடக்கத்துக்குச் செல்

உருசியாவின் முதலாம் பேதுரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரஷ்யாவின் முதலாம் பேதுரு
பேரரசரும் சர்வாதிகாரியும்
எஸ்தோனியாவினதும் லிவோனியாவினதும் டியூக்
ஆட்சிக்காலம் மே 7, 1682 - பெப்ரவரி 8, 1725
முடிசூடல் ஜூன் 25, 1682
முன்னிருந்தோர் ரஷ்யாவின் மூன்றாம் பியோதர்
பின்வந்தோர் ரஷ்யாவின் முதலாம் காத்தரீன்
Consort இயுடொக்சியா லோபுகினா
ரஷ்யாவின் முதலாம் கத்தரீன் மார்த்தா ஸ்கவ்ரோன்ஸ்காயா
பிள்ளைகள்
அலெக்சி பெட்ரோவிச், ரஷ்யாவின் இளவரசர்
அலெக்சாண்டர் பெத்ரோவிச் எனும் பெரிய டியூக் அலெக்சாண்டர்
பெரிய டியூச்சஸ் ரஷ்யாவின் அன்னா பெத்ரோவ்னா
ரஷ்யாவின் எலிசபெத்
நத்தாலியா பெத்ரோவ்னா - பெரிய டியூச்சஸ் நத்தாலியா
நத்தாலியா பெத்ரோவ்னா (1718-1725) எனப்படும் பெரிய டியூச்சஸ் நத்தாலியா
தந்தை ரஷ்யாவின் அலெக்சிஸ் I
தாய் நத்தாலியா நரிஷ்கினா
பிறப்பு (1672-06-09)9 சூன் 1672
மாஸ்கோ
இறப்பு 8 பெப்ரவரி 1725(1725-02-08) (அகவை 52)

முதலாம் பேதுரு அல்லது பியோத்தர் அலெக்சியேவிச் ரொமானோவ் அல்லது முதலாம் பியோத்தர் (ரஷ்ய மொழியில்: Пётр Алексе́евич Рома́нов, Пётр I, அல்லது Пётр Вели́кий, அல்லது பியோட்டர் வெலிகிய்; (9 ஜூன் [யூ.நா. 30 மே ] 1672 முதல் பெப்ரவரி 8 [யூ.நா. ஜனவரி 28] 1725)[1] இறக்கும்வரை ரஷ்யாவையும் பின்னர் ரஷ்யப் பேரரசையும் ஆண்டவர். 1696ஆம் ஆண்டிற்கு முன் இவர் தனது தந்தையின் இன்னொரு மனைவிக்குப் பிறந்தவரும் நோய் வாய்ப்பட்டவருமான சகோதரர் ஐந்தாம் இவானுடன் கூட்டாக ஆட்சி நடத்தினார். பீட்டர் ரஷ்யாவை மேற்கத்திய மயமாக்கும் கொள்கையையும், நாட்டை விரிவாக்கும் கொள்கையையும் கடைப்பிடித்து வந்தார். இக் கொள்கை ரஷ்யச் சாரகத்தை (Tsardom) 3 பில்லியன் ஏக்கர் பரப்பளவு கொண்டதும் ஐரோப்பாவின் முக்கிய வல்லரசுமான ரஷ்யப் பேரரசாக மாற்றியது. இவர் 17 ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய அரசராகக் கணிக்கப்படுவதுடன், சீனத்துச் சிங் பேரரசின் பேரரசர் காங்சி, பிரான்சின் பதினான்காம் லூயிஸ் ஆகியோருக்குச் சமமாக வைத்து எண்ணப்படுகிறார்.

வரலாறு

[தொகு]

பேதுரு 1672 ஆம் ஆண்டு ரஷ்யாவின் முதலாம் அலெக்சிஸ் அரசருக்கும் அவரது இரண்டாவது மனைவியான நத்தாலியா கிரிலோவ்னா நரிஷ்கினாவுக்கும் மாஸ்கோவில் பிறந்தார். 1676 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் நாள் முதலாம் அலெக்சிஸ் இறக்க அரசுரிமை அலெக்சிசின் முதல் மனைவியின் மகனும் பீட்டருக்கு மூத்தவருமான மூன்றாம் பியோடோருக்குக் கிடைத்தது. ஆனால் பியோடோர் வலுவற்றவராகவும், நோயாளியாகவும் இருந்தார். இவர் 6 ஆண்டுகளுக்குப் பின்னர் 1682 ஆம் ஆண்டு இறந்தார்.

அரசுரிமைப் பிணக்கு

[தொகு]

பியோடோருக்குப் பிள்ளைகள் இல்லாததால் அரசுரிமை குறித்து நரிஸ்கின் குடும்பத்துக்கும், மிலோலவ்ஸ்கி குடும்பத்துக்கும் இடையே பிணக்கு ஏற்பட்டது. பீட்டரின் இன்னொரு அரைச் சகோதரரான ஐந்தாம் இவான் வாரிசு உரிமைப்படி அடுத்த இடத்தில் இருந்தார். ஆனால் அவரும் நோய்வாய்ப்பட்டு இருந்ததோடு உறுதியற்ற மனநிலை கொண்டவராகவும் இருந்தார். முடிவில் போயர் டூமா எனப்படும் ரஷ்யப் பிரபுக்கள் அவை 10 வயதேயான பீட்டரை அரசராகத் தெரிவு செய்தது. பீட்டரின் தாயார் பீட்டருக்காக அரசைக் கவனித்துக் கொண்டார். ஆனால் அலெக்சியின் முதல் மனைவியின் மகளான சோபியா அலெக்சேயெவ்னா என்பவர் ஸ்ட்ரெல்சி எனப்படும் ரஷ்யச் சிறப்புப் படையணியின் உதவியுடன் கலகம் விளைவித்தார். பீட்டரின் உறவினர் சிலரும், நண்பர்கள் சிலரும் இதில் கொல்லப்பட்டனர். இந்த வன்முறைகள் சிலவற்றைப் பீட்டரும் கண்டார்.

சோபியாவின் வெற்றி

[தொகு]

இக் கலகத்தின் விளைவாக 1682 ஆம் ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் சோபியாவும் அவரது ஆதரவாளர்களும், பீட்டருடன், இவானையும் இணை அரசர்களாக ஏற்றுக் கொள்வதில் வெற்றி கண்டனர். சோபியா பராயம் அடையாத அரசர்களுக்காக ஆட்சிப் பொறுப்பைக் கவனிக்க நியமிக்கப்பட்டார். ஏழு ஆண்டுகள் சோபியா, அளவற்ற அதிகாரத்துடன் ஆட்சி நடத்தினார்.

அரச ஆடை அணிகளுடன் இளம் பீட்டர்.

தன்னுடைய பெயரில் பிறர் ஆட்சி நடத்துவது பற்றி பீட்டர் அவ்வளவாக அலட்டிக் கொள்ளவில்லை. அவர் கப்பல் கட்டுதல், கப்பலோட்டுதல், விளையாட்டுப் படைகளுடன் போர் விளையாட்டு விளையாடுதல் என்று பொழுதைக் கழித்து வந்தார். பீட்டரின் தாயார் அவரை முறையான அணுகு முறைகளைக் கையாளுமாறு வற்புறுத்தியதுடன், இயுடொக்சியா லோபுகினா என்பவரை 1689 ஆம் ஆண்டில் பீட்டருக்கு மணம் செய்தும் வைத்தார். இந்தத் திருமணம் தோல்வியில் முடிந்தது. 10 ஆண்டுகளுக்குப் பின் தனது மனைவியை கிறிஸ்தவத் துறவியாக்கித் திருமணப் பிணைப்பில் இருந்து விடுபட்டார்.

சோபியாவின் வீழ்ச்சி

[தொகு]

1689 ஆம் ஆண்டு கோடையில், தனது அரைச் சகோதரி சோபியாவிடம் இருந்து அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள பீட்டர் திட்டமிட்டார். கிரீமியாவில் இரண்டு படை நடவடிக்கைகள் வெற்றி பெறாததால் சோபியாவின் நிலை வலுக் குறைந்து இருந்தது. பீட்டரின் திட்டத்தை அறிந்த சோபியா "ஸ்ட்ரெல்சி"யின் தலைவர்களுடன் சேர்ந்து சதி செய்து மன்னருக்கு எதிராகக் குழப்பங்களை ஏற்படுத்தினார். இவரது திட்டங்களை முன்னரே அறிந்து கொண்ட பீட்டர் இரவோடிரவாக டிரொயிட்ஸ்கி (Troitsky) துறவி மடத்துக்குத் தப்பிச் சென்றார். அங்கிருந்தபடியே சிறிது சிறிதாக ஆதரவாளர்களைத் திரட்டிய பீட்டர் சோபியாவை அதிகாரத்திலிருந்து தூக்கியெறிந்தார். எனினும், பீட்டர், தொடர்ந்தும் இவானுடன் சேர்ந்து ஆட்சி நடத்தி வந்தார். பீட்டர், சோபியாவைக் கட்டாயப்படுத்தி பெண் துறவியர் மடத்தில் சேர்த்தார். அங்கே, அரச குடும்பத்துக்குரிய பெயர், நிலை அனைத்தையுமே விட்டுக் கொடுக்கவேண்டி ஏற்பட்டது.

பீட்டர் முழு அதிகாரம் பெறல்

[தொகு]
பீட்டர் பால்ட்டிக் கடலைப் பார்த்துக் கொண்டிருக்கும் காட்சி.

இத்தனைக்குப் பின்னரும் பீட்டரால் அரசின் கட்டுப்பாட்டைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. பீட்டரின் தாயே ஆட்சியை நடத்தி வந்தார். 1694ல் பீட்டரின் தாய் இறந்த பின்னரே பீட்டரின் கையில் முழுமையான ஆட்சிப் பொறுப்புக் கிடைத்தது. எனினும், செயற்திறன் இல்லாதிருந்தாலும், இவானும் இணையரசனாகவே இருந்து வந்தார். 1696 ஆம் ஆண்டில் இவான் இறக்க ஆட்சிப் பொறுப்பு முழுமையாகப் பீட்டரிடம் வந்தது.

உடல் தோற்றம்

[தொகு]

பேதுரு மிகவும் உயரமானவராக இருந்தார் 6'8" (200 சமீ) உயரம் கொண்டிருந்த அவர் சமகாலத்து ஐரோப்பிய அரசர்கள் அனைவரையும்விட உயரமானவர். எனினும் அவரது உடல் முறையான அளவு விகிதங்களைக் கொண்டிருக்கவில்லை. இவரது கைகளும் பாதங்களும் சிறியனவாக இருந்தன. உயரத்துக்குப் பொருத்தமில்லாத வகையில் தோள் ஒடுங்கியிருந்தது. தலையும் சிறிதாக இருந்தது. இவற்றுடன் இவரது முகத்தில் தசை நடுக்கமும் காணப்பட்டது. இவற்றை வைத்துப் பார்க்கும்போது பீட்டருக்கு "பெட்டி மல்" எனப்படும் ஒருவகை வலிப்புநோய் இருந்திருக்கக் கூடும் எனச் சொல்லப்படுகிறது.

உடல் வலிமை

[தொகு]

பேதுரு ஒரு அறிவாளியின் மூளையையும், இராட்சத உடல் வலிமையையும் கொண்டிருந்ததாக அறியப்படுகிறது. ஒருமுறை வெள்ளித் தட்டொன்றைக் கடதாசியைப் போல் மிக இலகுவாக சுருட்டிக் கசக்கிய நிகழ்வை அவரது வலிமைக்கு எடுத்துக் காட்டாகச் சொல்வர். இவரை யாராவது கோபப்படுத்தினால் அவரது அடியில் கோபப்படுத்தியவர் மயக்கம் அடைவார் என்றும் சொல்லப்படுகிறது.

திருமணங்கள் மற்றும் குடும்பம்

[தொகு]
முதலாம் பீட்டர் அவரது மகன் அலெக்ஸியை விசாரித்தார், வரைகலை: நிக்கோலய் ஜெய் ( Nikolai Ge1871)

மகா பீட்டருக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர். அவருக்கு பதினான்கு குழந்தைகள் இருந்தனர். இவர்களில் மூன்று பேர் நீண்ட நாள் வாழ்ந்தனர். 1689 இல் மேன்மையான பெருந்தகைகளின் ஆலோசனையுடன் பேதுருவின் தாயார் முதல் மனைவி யூடோக்ஸியா லோபகினியாவை தேர்ந்தெடுத்தார்.[2]

இது பெருந்தகையின் மகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் முந்தைய ரோமனோவ் மரபுகளுடன் ஒத்திருப்பதாக உணர்ந்தார். இந்த நடவடிக்கையானது, உன்னத குடும்பங்களுக்கு இடையே ஏற்படும் குழப்பஙளைத் தடுப்பதோடு, குடும்பத்தில் புதிய இரத்தத்தை கொண்டு வரவும் வழி செய்யப்பட்டது.[3]

அவருக்கு ஜேர்மனியில் அண்ணா மோன்ஸ் என்று மற்றொறு மனைவி இருந்தார்.[2] 1698 ல் ஐரோப்பிய சுற்றுப்பயணத்திலிருந்து திரும்பியபின், பேதுரு தனது மகிழ்ச்சியற்ற திருமணத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார். அவர் த்ஸாரிஸ்தாவை (Tsaritsa) விவாகரத்து செய்து, அவரை ஒரு மழலையர் பள்ளியில் சேருமாறு கட்டாயப்படுத்தினார்.[2] த்ஸாரிஸ்தாவுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர். ஒருவர் குழந்தைப் பருவத்திலேயே இறந்துவிட்டார். அலெக்ஸி பெட்ரோவிச், த்ஸாரிவிச் (Tsarevich) ஆகியோர் ரஷ்யாவில் வாழ்ந்தனர்.

1702 மற்றும் 1704 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் மார்த்தா ஸ்கவரோன்ஸ்கயா (Skavronskaya) என்ற ஒரு விவசாயப் பெண்மணியை மனைவியாக்கிக் கொண்டார்.[4] மார்தா ரஷ்ய பழமைக் கோட்பாடு சார்ந்த தேவாலயத்தில் சேர்ந்து தன் பெயரை கேதரின்[5] என்று மாற்றிக் கொண்டார். பதிவுகள் எதுவும் இல்லை என்றாலும், கேத்தரின் மற்றும் பீட்டர் ஆகியோர் 23 அக்டோபர் 1706 முதல் 01 டிசம்பர் 1707 வரையிலான காலத்திற்குள் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இரகசியமாக திருமணம் செய்துகொண்டதாக விவரிக்கப்பட்டுள்ளது. 1712ஆம் ஆண்டு பிப்ரவரி 9 இல் பேதுரு, கேத்தரினுக்கு உரிய மதிப்பளித்து மீண்டும் அவரை அதிகாரப்பூர்வமாக புனித பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள புனித ஐசாக் கதீட்ரல் தேவாலயத்தில் திருமணம் செய்து கொண்டார்.[6]

அவரது மூத்த குழந்தை மற்றும் வாரிசான, அலெக்ஸி (Alexei), தான் பேரரசராக வேண்டும் என்பதற்காக சதித் திட்டத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. அலெக்ஸி மதச்சார்பற்ற நீதிமன்றத்தால் நடத்தப்பட்ட விசாரணையின்போது சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.[7] அவர் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். பேதுருவின் அங்கீகாரத்துடன் தண்டனை நிறைவேற்றப்பட்டது. அலெக்ஸி சிறைச்சாலையில் இறந்துவிட்டார். பெரும்பாலும் சித்திரவதையின் போது பாதிக்கப்பட்ட காயங்களின் விளைவாக அலெக்ஸியின் மரணம் நிகழ்ந்திருக்கும். அலெக்ஸியின் தாய் யுடோக்ஸியாவும் தண்டிக்கப்பட்டார். 1704-ல் பேதுருவின் முந்தைய மனைவியான அன்னா மோன்ஸ், இதே போன்று தண்டிக்கப்பட்டார்.

1724-ல் பேதுரு தனது இரண்டாவது மனைவியான கேதரினை, பேரரசியாக நியமித்தார். ரஷ்யாவின் உண்மையான ஆட்சியாளராக இருந்தார். பேதுருவின் ஆண் குழந்தைகளும் இறந்திருந்தார்கள்.

பிள்ளைகள்

[தொகு]

பேதுருக்கு இரண்டு மனைவியரும் அவர்கள் வாயிலாகப் பதினொரு பிள்ளைகளும் இருந்தனர். இவர்களில் மூத்தவனும், முடிக்கு உரியவனுமான அலெக்சிஸ், தந்தையைப் பதவியில் இருந்து தூக்கியெறியச் சதி செய்ததாக ஐயுறவு ஏற்பட்டது. இதனால் சிறையிடப்பட்ட அவன் சிறையிலேயே மர்மமான முறையில் இறந்துவிட்டான்.

வாரிசு விவகாரம்

[தொகு]

அவருடைய இரண்டு மனைவிகள் மூலம் அவருக்கு பதினான்கு குழந்தைகள் பிறந்தனர். இவர்களுள், பவெல் என்றழைக்கப்பட்ட மூன்று மகன்களும், பீட்டர் என்றழைக்கப்பட்ட மூன்று மகன்களும் அடக்கம். இவர்கள் குழந்தைப் பருவத்திலேயே இறந்துவிட்டனர்.

பெயர் பிறப்பு இறப்பு குறிப்பு
யூடோக்ஸியா லோபுகினா (Eudoxia Lopukhina) எழுதிய குறிப்புகளின்படி
அலெக்ஸி பெட்ரோவிச் (Alexei Petrovich), ருஷ்யாவின் ஸாரெவிச் (Tsarevich) 18 பிப்ரவரி 1690[8] 26 ஜூன் 1718[8] பிரன்ஸ்விக்-லூனெபர்கின் (Brunswick-Lüneburg) சார்லோட்டெ கிறிஸ்டின் உடன் 1711 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்; குழந்தைகள் இருந்தனர்
அலெக்ஸாண்டர் பெட்ரோவிச் (Alexander Petrovich) 13 அக்டோபர் 1691 14 மே 1692  
பவல் பெட்ரோவிச் (Pavel Petrovich) 1693 1693  
காதரின் I (Catherine I) எழுதிய குறிப்புகளின்படி
பீட்டர் பெட்ரோவிச் (Peter Petrovich) 1704[8] குழந்தைப் பருவம்[8]

அவரது பெற்றோரின் அதிகாரப்பூர்வ திருமணத்திற்கு முன் பிறந்தார். இறந்தார்.

பவுல் பெட்ரோவிச் (Paul Petrovich) 1705[8] குழந்தைப் பருவம்[8] அவரது பெற்றோரின் அதிகாரப்பூர்வ திருமணத்திற்கு முன் பிறந்தார். இறந்தார்.
காதரின் பெட்ரோவ்னா (Catherine Petrovna) டிசம்பர் 1706[8] ஜூன் 1708[8] அவரது பெற்றோரின் அதிகாரப்பூர்வ திருமணத்திற்கு முன் பிறந்தார். இறந்தார்.
அன்னா பெட்ரோவ்னா (Anna Petrovna) 27 சனவரி 1708 15 மே 1728 ஹோல்ஸ்டீன்-காட்டோர்ப் (Holstein-Gottorp) எனும் நிலப் பகுதியை ஆட்சிசெய்த கார்ல் ஃபிரடெரிக் (Karl Friedrich) எனப்படும் சார்லஸ் ஃபிரடெரிக் (Charles Frederick) என்பவரை 1725ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்; குழந்தைகள் இருந்தனர்
எலிசவெத்தா பெட்ரோவ்னா (Yelisaveta Petrovna),
பிற்காலத்தில் ரஷ்யப் பேரரசின் பேரரசி எலிஸபத் (Elizabeth) என்றழைக்கப்பட்டார்
29 டிசம்பர் 1709 5 சனவரி 1762 1742ஆம் ஆண்டு பிரசித்திப்பெற்ற வகையில் கௌன்ட் ரசுமோவ்ஸ்கியின் (Count Razumovsky) அலெக்சி கிரிகோரிவிச் (Alexei Grigorievich) என்பவருடன் திருமணம் நடைபெற்றது; குழந்தைகள் இல்லை
மரியா பெட்ரோவ்னா (Maria Petrovna 20 மார்ச்சு 1713 27 மே 1715  
மார்கரித்தா பெட்ரோவ்னா (Margarita Petrovna) 19 செப்டம்பர் 1714 7 ஜூன் 1715  
பீட்டர் பெட்ரோவிச் (Peter Petrovich) 15 நவம்பர் 1715 19 ஏப்ரல் 1719  
பவல் பெட்ரோவிச் (Pavel Petrovich) 13 ஜனவரி 1717 14 ஜனவரி 1717  
ரஷ்யாவின் மாபெரும் நிலப் பகுதியை ஆட்சி செய்த நடாலியா பெட்ராவ்னா (Natalia Petrovna) 31 ஆகஸ்டு 1718 15 மார்ச்சு 1725  
பீட்டர் பெட்ரோவிச் (Peter Petrovich) 7 அக்டோபர் 1723 7 அக்டோபர் 1723  

குறிப்புகளும் மேற்கோள்களும்

[தொகு]
  1. இங்கு யூ.நா. எனக் குறிப்பிடப்பட்டது பழைய நாட்காட்டி ஆகும். இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய தேதிகள் புதிய கிரெகொரியின் நாட்காட்டியில் தரப்பட்டுள்ளது.
  2. 2.0 2.1 2.2 Hughes 2004, ப. 134.
  3. Hughes 2004, ப. 133.
  4. Hughes 2004, ப. 131,134.
  5. Hughes 2004, ப. 131.
  6. Hughes 2004, ப. 136.
  7. Massie 1980, ப. 76,377,707.
  8. 8.0 8.1 8.2 8.3 8.4 8.5 8.6 8.7 Hughes 2004, ப. 135.