உள்ளடக்கத்துக்குச் செல்

கொரியப் பிரிவினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொரிய எல்லைப் பிரிவினையின் வரைபடம்
கொரியா 1945 முதல் 1950 வரை 38-ஆவது வடக்கு சமாந்தரம் வழியாகவும், 1953 முதல் இற்றை வரை இராணுவ எல்லைப் பிரிவினை மூலமும் பிரிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப்போரின் முடிவில் கொரியாவை ஆண்டுவந்த ஜப்பான் நாடு தோல்வியுற்றது. இதனையடுத்து கொரியா, ஐக்கிய அமெரிக்காவினாலும் உருசியாவினாலும் ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் இரண்டாக பிரிக்கப்பட்டது. நாளடைவில் இந்தப் பிரிவினை நிரந்தரமானது.[1]

வரலாற்று பின்னணி

[தொகு]

ஜப்பான் ஆட்சி

[தொகு]

கொரிய மற்றும் மஞ்சூரிய பிரதேசங்களை தங்களது ஏகாதிபத்தியத்தின் கீழ் கொண்டுவரும் முயற்சியில் ஜப்பானுக்கும் உருசியாவுக்கும் போர் மூண்டது. இந்த போர் 1905 இல் ஜப்பானின் வெற்றியில் நிறைவு பெற்றது.[2]

ஆகவே, 1910 ஆம் ஆண்டு வாக்கில் கொரியா முழுமையும் ஜப்பானிய ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது. அப்போதைய கொரிய அரசர் கோஜாங் பதவியிறக்கப்பட்டார். கொரியாவின் சுதந்திர போராட்டங்களுக்கு மத்தியில் ஜப்பானிய ஆட்சி நடைபெற்று வந்தது.

இரண்டாம் உலகப் போர்

[தொகு]

இரண்டாம் உலகப் போர் 1939 இல் தொடங்கி 1945 வரை நீண்டது. 1943 இல் கைரோ மாநாட்டில் ஜப்பான் தன்னகத்தே உள்ள பிரதேசங்கள் அனைத்தையும் விடுவித்தாக வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.[3]

ஆகத்து 8 1945 ஆம் ஆண்டு ஹிரோஷிமாவில் அணுகுண்டு இறக்கியது ஆமெரிக்கா. அதே சமயத்தில் உருசியா ஜப்பானின் மீது போர் தொடுப்பதாக அறிவித்து இருந்தது. இந்த அறிவிப்பால் அமெரிக்கா எச்சரிக்கை அடைந்தது.

ஜப்பானை ஆளும் நாட்டிற்கு கொரியாவும் சொந்தமாகும் என்று உணர்ந்த அமெரிக்கா, சியோலை மையமாகக் கொண்ட தென் கொரியாவில் தன் படைகளை நிலை நிறுத்தியது. கொரியாவை இரண்டாகப் பிரித்தாள உருசியாவிடம் ஒப்பந்தம் போட விழைந்தது. உருசியாவும் ஒப்புக் கொண்டது.[4]

போரின் பின்விளைவுகள்

[தொகு]

பிரிவினை ஒப்பந்தம்

[தொகு]
வரவேற்பு விழாவில் எடுத்த புகைப்படம்

சுமார் ஒரு கோடியே ஐம்பது இலட்சம் கொரியர்கள் சியோலின் பால் அமெரிக்காவின் பிடியிலும் தொன்னூறு இலட்சம் கொரியர்கள் பியாங்யாங்ஙின் பால் உருசுயாவின் பிடியிலும் அகப்பட்டனர். 14 ஆகத்து 1945 ஆம் ஆண்டு முதன் முறையாக வடகொரியாவின் மிகப்பெரிய நகரமான பியாங்யாங்ஙில் உருசியப்படைகள் அணிவகுத்தன. வரவேற்பு விழா ஒன்றும் கொண்டாடப்பட்டது.[5]

உருசியாவின் ஆக்கிரமிப்புக்கு அஞ்சி அமெரிக்கா தன் கொள்கைகளை அதிவேகமாகத் தென்கொரியாவில் கட்டமைத்தது. இதற்கிடையே அமெரிக்கா மற்றும் உருசியாவின் இந்தத் துண்டாட்ட ஒப்பந்தம் (நம்பிக்கைக் கூட்டணி என்று அழைக்கப்பட்டது) கொரியர்களால் அவ்வப்போது எதிர்க்கப்பட்டு வந்தது. இத்தகைய போராட்டங்கள் உடனடியாக ஒடுக்கப்பட்டன.[6]

திசம்பர் 1945 இல் அமெரிக்க உருசிய ஒப்பந்தத்திற்கு எதிராக தென் கொரியர்கள் நடத்திய போராட்டம்

மாஸ்கோ மாநாடு

[தொகு]

திசம்பர் 1945 இல் மாஸ்கோ மாநாட்டில் வடகொரியாவை உருசியாவும் சீனாவும் ஐந்து ஆண்டுகளுக்கு கூட்டாள்வதென்றும் தென்கொரியாவை அமெரிக்காவும் பிரிட்டனும் ஐந்து ஆண்டுகளுக்கு கூட்டாள்வது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையே, அமெரிக்காவுக்கும் உருசியாவுக்குமான பனிப்போர் முற்றி இருந்தது.

மாஸ்கோ மாநாட்டில் உருவாக்கப்பட்ட அமெரிக்க உருசிய கலந்தாய்வுக் கழகம் 1946 மற்றும் 1947 இல் சந்திக்க, இரண்டு சந்திப்புகளும் தோல்வியில் முடிவடைந்தன. இதனை அடுத்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அமெரிக்கா இந்த பிரச்சனையை முன்னெடுத்துச் சென்றது.[7]

ஐக்கிய நாடுகளின் தலையீடு

[தொகு]

14 நவம்பர் 1947 அன்று கொரியாவில் இருந்து அயல்நாட்டு இராணுவங்கள் வெளியேற வேண்டும் என்றும் வாக்கெடுப்பு நடத்தப்பெற்று கொரிய அரசாங்கங்கள் தோற்றுவிக்கப்பட வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகளின் அவை அறிவித்தது. இந்த மாற்றத்தை நிர்வகிக்க ஐக்கிய நாடுகளின் தற்காலிக கொரியக் கழகம் உருவாக்கப்பட்டது.

சோவியத் கூட்டணி இந்த அறிவிப்பை முற்றிலுமாக புறக்கணித்தது. ஐக்கிய நாடுகள் நடத்தும் வாக்கெடுப்பில் நம்பிக்கை இல்லை என்று அறிவித்தது. எனவே தென்கொரியாவில் மட்டும் முதன்முதலாக வாக்கெடுப்பு நடைபெற்றது.[8]

10 மே 1948 இல் தென் கொரியாவில் நடைபெற்ற வாக்கெடுப்பு

பல்வேறு கொரிய சங்கங்கள் இந்த வாக்கெடுப்பை முற்றிலுமாக எதிர்த்தன. இந்த வாக்கெடுப்பு கொரிய மண்ணை நிரந்தரமாக பிரித்துவிடும் என்று அவர்கள் அஞ்சினர். ஆனால் எதிர்ப்புகளை மீறி தேர்தல் நடைப்பெற்றது.[9]

கொரியப் போர்

[தொகு]

சுமார் ஆயிரம் ஆண்டு காலமாக ஒரே இனமாக ஒரே மொழி பேசி ஒன்றாக வாழ்ந்து வந்த கொரியர்கள் இரண்டாம் உலகப் போரின் பிறகு இரண்டாக பிரிக்கப்பட்டார்கள். இந்தப் பிரிவினை வரலாற்றின் மிகவும் சர்ச்சைக்குரிய பகுதிகளில் ஒன்றாகும். அதுவும் பிரிக்கப்பட்ட இரு பிரிவுகள் இருவேறு கொள்கைகளை ஏற்பக் கொண்டது கருத்தியல் வேறுபாடுகளுக்கு வித்திட்டது.

விளைவாக 1950ஆம் ஆண்டு வடகொரிய படைகள் தென்கொரியாவை ஆக்கிரமிக்க முற்றுகையிட்டன. ஐக்கிய அமெரிக்க படைகள் உடனடியாக விரைந்து போரைத் தடுத்தன. 1951 இல் ஐக்கிய நாடுகள் அவையின் வழிக்காட்டுதலின் படி எல்லைகள் கடல்நீள பிரிக்கப்பட்டன. தற்காலிக பிரிவு நிரந்தர பிரிவானது.[10]

தற்போதைய நிலை

[தொகு]
கிம் ஜாங் உன்னும் மூன் ஜே இன்னும் ஒற்றுமையை உணர்த்தும் விதமாக கைகுலுக்கிக் கொள்ளும் புகைப்படம்

கொரிய போருக்குப் பின்பு மீண்டும் கொரியாவை ஒரு நாடாக்குதல் என்பது கனவாகி போனது. இரண்டு நாடுகளின் அடுத்தடுத்த தலைவர்கள் முயற்சிகள் மேற்கொண்டாலும் அவை பலனளிக்கவில்லை.

ஏப்ரல் 27 2018 அன்று வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் தென் கொரிய குடியரசுத் தலைவர் மூன் ஜே இன்னும் சந்தித்து எல்லையில் இராணுவ படைகளைத் தளர்த்திக் கொள்ளுவதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர் [11]. கொரியாவின் இணைப்பு வெகு தொலைவில் இல்லை என்று கூறியுள்ளனர்[12]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "கொரியப் பிரிவினைக் குறித்த நேஷனல் ஜியோகிராபியின் வரலாற்றுக் கட்டுரை [ஆங்கிலம்]".
  2. "உருசிய ஜப்பானிய போர் - ஆங்கில விக்கிப்பீடியா".
  3. "ஜப்பானை பயன்படுத்திக் கொண்ட நாடுகள் - ஆங்கிலக் கட்டுரை".
  4. "இரண்டாம் உலகப் போரும் கொரியாவும் - ஆங்கில வலைத்தளக் கட்டுரை".
  5. "வடகொரிய வரலாறு - என். கே. நியூஸ் ஆங்கிலக் கட்டுரை".
  6. "ஏ ஹிஸ்டரி ஆஃப் கொரியா - கூகுள் புக்ஸ்".
  7. "மாஸ்கோ மாநாடு - ஆங்கிலக் கட்டுரை".
  8. "கொரியா - இருபதாம் நூற்றாண்டின் ஒடிசி - கட்டுரை".
  9. "கொரியாவில் வன்முறை - தி கொரியன் டைம்ஸ்". Archived from the original on 2013-04-07. பார்க்கப்பட்ட நாள் 2021-12-19.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  10. "கொரியப் போர் - ஆங்கில விக்கிப்பீடியா".
  11. "கொரிய ஒப்பந்தம் - தி வாஷிங்டன் போஸ்ட்".
  12. "கொரியப் பேரிணைப்பு - ஆங்கிலச் செய்தி".