உள்ளடக்கத்துக்குச் செல்

டி. ஈ. லாரன்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டி. ஈ. லாரன்ஸ்
பட்டப்பெயர்(கள்)லாரன்ஸ் ஆஃப் அரேபியா, எல் ஆரென்ஸ்
சார்புஐக்கிய இராச்சியம் ஐக்கிய இராச்சியம்
ஹாஷிம் குல அரபுகள்
சேவை/கிளை பிரிட்டானியத் தரைப்படை
வேந்திய வான்படை
சேவைக்காலம்1914–1918
1923–1935
தரம்லெப்டினன்ட் கர்னல் மற்றும் ஏர்கிராஃப்ட்மேன்
போர்கள்/யுத்தங்கள்முதல் உலகப் போர்
  • அரபுப் புரட்சி
  • மதீனா முற்றுகை
  • ஃவேலியா சண்டை
  • அபா எல் லிசான் சண்டை
  • அக்கபா சண்டை
  • டாலிஃபே சண்டை
  • டெரா சண்டை
  • தமாஸ்கசின் வீழ்ச்சி
  • மெகிடோ சண்டை
விருதுகள்கம்பானியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி பாத்
டிஷ்டிங்கிவிஷ்ட் செர்விஸ் ஆர்டர்
செவாலியே லீஜியன் டி ஹானூர்
கிராஸ் டி கெர்

டி. ஈ. லாரன்ஸ் (Thomas Edward Lawrence, ஆகஸ்ட் 16, 1888 – மே 19, 1935) என்பவர் ஒரு பிரிட்டானியப் போர் வீரர், தூதுவர், ராஜதந்திரி மற்றும் எழுத்தாளர் ஆவார். முதல் உலகப் போரில் ஒத்தமான் பேரரசுக்கு எதிராக ஏற்பட்ட அரபுப் புரட்சியில் பிரிட்டனின் தூதுவராகவும் ராஜதந்திரியாகவும் செயல் புரிந்ததற்காக லாரன்ஸ் ஆஃப் அரேபியா (அரேபியாவின் லாரன்ஸ், Lawrence of Arabia) என்று பரவலாக அறியப்படுகிறார்.

வேல்சில் பிறந்த லாரன்ஸ் தன் இளமைக் காலத்தில் களத் தொல்லியளாராக பணிபுரிந்தார். மத்திய கிழக்கு ஆசியாவின் பல மொழிகளை லாரன்ஸ் அறிந்திருந்ததால் பாலஸ்தீனத்தின் நெகேவ் பாலைவனத்தை ஆய்வு செய்ய பிரிட்டானிய ராணுவத்தால் வேலைக்கு அமர்த்தப்பட்டார். முதல் உலகப் போர் மூண்ட பின்னர் முறைப்படி பிரிட்டானிய தரைப்படையில் சேர்ந்தார். துருக்கியைத் தலைமையாகக் கொண்டு ஆட்சிபுரிந்த ஒத்தமானியப் பேரரசின் கட்டுப்பாட்டுக்குள் இன்றைய பெரும்பாலான அரபு வளைகுடா பகுதிகள் இருந்த காலகட்டத்தில் ஒத்தமான் பேரரசை வீழ்த்தத் திட்டமிட்ட பிரிட்டனும் ஏனைய நேச நாடுகளும் அரபுப் பாலைவனப் பகுதிகளில் வாழ்ந்து வந்த பழங்குடியினரை ஒத்தமான் அரசுக்கு எதிராகப் புரட்சி செய்யுமாறு தூண்டினர். அதன் விளைவாக உருவான அரபுப் புரட்சியின் போது பிரிட்டனின் சார்பாக அரபுப் பாலைவனப் பழங்குடிகளுக்குத் தூதுவராகவும் ஆலோசகராகவும் லாரன்ஸ் அனுப்பப்பட்டார்.

ஓத்தமான் பேரரசின் முக்கிய நகரங்களான அக்கபா மற்றும் தமாஸ்கஸ் போன்றவற்றை கைப்பற்றும் முயற்சிகளில் அரபுப் படைகளுடன் இணைந்து பங்கேற்றார் லாரன்ஸ். துருக்கியிலிருந்து மதீனா வரை அமைக்கப்பட்டிருந்த ஹிஜாஸ் ரயில்வேயின் தண்டவாளங்களை அரபுப் போராளிகளின் உதவியுடன் குண்டு வைத்துத் தகர்த்தார் லாரன்ஸ். இதனால் மக்கா மற்றும் மதீனாவுடனான ஒத்தமான் பேரரசின் சரக்கு மற்றும் போர்வீரர் போக்குவரத்து பாதிக்கப்பட்டதன் மூலம் இந்தப் பகுதியின் மீதான ஒத்தமான் பேரரசின் கட்டுப்பாடு குலைக்கப்பட்டு இப்பகுதியின் அதிகாரம் உள்ளூர் அரபுத் தலைவர்களின் வசம் வந்தது.

முதலாம் உலகப்போரில் லாரன்ஸ் ஆற்றிய பணிகளுக்காக பிரிட்டானிய அரசு அவருக்கு பல உயரிய பதக்கங்களை வழங்கி லெப்டினன்ட் கர்னலாகப் பதவி உயர்வு அளித்தது.

போர் முடிந்து ஒத்தமான் பேரரசு வலுவிழந்த பின்னர் ஒரு சுதந்திரமான அரபு நாட்டை அமைப்பதற்காக சவூத் குடும்பத்தின் அரபுத் தலைவரான எமிர் ஃபைசலின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார் லாரன்ஸ். இக்காலகட்டத்தில் வெளியான இவரது செவன் பில்லர்ஸ் ஆஃப் விஸ்டம் என்ற நூலும் அமெரிக்கப் பத்திரிக்கையாளர் லோவல் தாமசின் இவரைப்பற்றிய 'திட்டமிடப்பட்டு மிகைப்படுத்தப்பட்ட' செய்திக் குறிப்புகளும் மேற்குலகில் இவருக்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்தன. அவருக்கு 'அரேபியாவின் லாரன்ஸ்' என்ற பெயர் உருவானது.

1922இல் பிரிட்டானிய வான்படையில் சேர்ந்து பல ஆண்டுகள் பணிபுரிந்தார் லாரன்ஸ். விசையுந்து (மோட்டார் பைக்) ஆர்வலரான லாரன்ஸ் 1935ஆம் ஆண்டு ஒரு விசையுந்து விபத்தில் மரணமடைந்தார். இவரது வாழ்க்கையைப் பற்றி பல திரைப்படங்களும் நாடகங்களும் வெளியாகியுள்ளன. 1962இல் வெளியான லாரன்ஸ் ஆஃப் அரேபியா என்ற ஹாலிவுட் படம் உலகெங்கும் லாரன்சின் புகழைப் பரவச் செய்தது.

வெளி இணைப்புகள்

[தொகு]