உள்ளடக்கத்துக்குச் செல்

தவக் காலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தவக் காலம் (Lent)[1][2] என்பது கிறித்தவர்களின் வழிபாட்டு ஆண்டில் ஒரு முக்கியமான கால கட்டம் ஆகும். இது சாம்பல் புதன் என்றும் திருநீற்றுப் புதன் என்றும் வழங்கப்படுகின்ற நாளிலிருந்து கிறிஸ்து சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்த நிகழ்வைக் கொண்டாடும் உயிர்த்தெழுதல் ஞாயிறு வரை நீடிக்கின்ற நாற்பது நாள் காலத்தைக் குறிக்கும்.

தவக் காலத்தின் நோக்கம்

[தொகு]

தவக் காலத்தின்போது கிறித்தவர்கள் இறைவேண்டல், தவ முயற்சிகள், தருமம் செய்தல், தன்னொறுத்தல் போன்ற நற்செயல்கள் புரிய ஊக்குவிக்கப்படுகிறார்கள் (காண்க: மத்தேயு 6:1-18). இயேசு துன்பங்கள் அனுபவித்து, மனிதரின் மீட்புக்காகச் சிலுவையில் இறந்தார் என்பதால் அவர் அனுபவித்த துன்பங்களில் தாமும் பங்குபெற கிறித்தவர்கள் தவக் காலத்தின்போது முன்வருகிறார்கள். சிலுவையே வாழ்வுக்கு வழி என்னும் நம்பிக்கையிலிருந்து இச்செயல் பிறக்கிறது.

மேலும், பிறருக்குத் தம்மால் இயன்ற உதவி செய்து, பிறரன்புப் பணிகளில் ஈடுபடவும் கிறித்தவர்கள் தவக் காலத்தின்போது தம்மையே ஈடுபடுத்துகிறார்கள்.

திருவழிபாட்டு ஆண்டு
(கத்தோலிக்கம்)
திருவழிபாட்டுக் காலங்கள்
முக்கியப் பெருவிழாக்கள்

தவக் காலத்திற்கான விவிலிய அடிப்படை

[தொகு]

மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய நற்செய்தியாளர்கள் இயேசு பாலைநிலத்தில் நாற்பது நாள்கள் இரவும் பகலும் நோன்பிருந்தார் என்னும் தகவலைத் தருகின்றனர் (காண்க: மத் 4:1-11; மாற் 1:12-13; லூக் 4:1-13). இவ்வாறு இயேசு நோன்பிருந்ததைக் கிறித்தவர்களும் தம் வாழ்வில் கடைப்பிடிக்க அழைக்கப்படுகிறார்கள்.

இயேசு நோன்பிருந்தபோது அலகை அவரைச் சோதித்தான். தம் பசியை ஆற்ற இயேசு கல்லை அப்பமாக மாற்றலாம் என்றும், தன்னை வணங்கினால் உலக அரசுகளை அவருக்குக் கொடுப்பதாகவும், எருசலேம் கோவிலின் உச்சியிலிருந்து கீழே குதித்தாலும் அவருக்குத் தீங்குநிகழாமல் கடவுள் காப்பார் என்றும் கூறி, மூன்று முறை அலகை இயேசுவைச் சோதித்தான். இயேசு தம்மை மாயாஜாலம் நிகழ்த்துபவர் போல ஆக்கலாம் என்றும், கடவுளை மறுத்து அலகையை வணங்கலாம் என்றும், கடவுளின் வல்லமைக்குச் சவால் விடலாம் என்றும் வந்த சோதனைகளுக்கு இடம் கொடாமல், அவற்றை முறியடித்து, அலகையை வென்றார் என்று நற்செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறே கிறித்தவர்களும் அலகையின் சோதனையை முறியடிக்க தவக் காலம் ஒரு வாய்ப்பாக அமைகிறது.

நாற்பது நாள் நோன்பு என்பதற்குப் பழைய ஏற்பாட்டிலும் சில குறிப்புகள் உண்டு. இசுரயேல் மக்களைப் பாலைநிலத்தில் வழிநடத்திய மோசே சீனாய் மலையில் நாற்பது நாள்கள் கடவுளோடு இருந்தார் என விடுதலைப் பயணம் நூல் கூறுகிறது (காண்க: விப 24:18). அதுபோலவே எலியா இறைவாக்கினர் நாற்பது பகலும் நாற்பது இரவும் நடந்து, ஓரேபு என்ற கடவுளின் மலையை அடைந்தார் (காண்க: 1 அரசர்கள் 19:8).

வாக்களிக்கப்பட்ட நாட்டை நோக்கி இசுரயேல் மக்கள் நாற்பது ஆண்டுகள் வழிநடந்தனர் (காண்க: எண்ணிக்கை 14:33). நினிவே மக்கள் மனம் மாறி நல்வழிக்குத் திரும்புவதற்கு யோனா இறைவாக்கினர் நாற்பது நாள் கெடு கொடுத்தார் (காண்க: யோனா 3:4).

தவக் காலம் தோன்றிய வரலாறு

[தொகு]

தொடக்க காலத் திருச்சபையில் இயேசுவின் உயிர்த்தெழுதல் திருவிழா மைய இடம் பெற்றது. அந்த விழாவை மகிழ்ச்சியோடும் ஆரவாரத்தோடும் கொண்டாடுவதற்கு முன்னால், குறிப்பாக அந்நாளில் திருமுழுக்குப் பெறுவதற்கு முன் ஓரிரு நாள்கள் கிறித்தவர் நோன்பு இருந்தனர். உயிர்த்தெழுதல் ஞாயிறுக்கு முந்திய ஞாயிறு பாடுகளின் ஞாயிறு எனக் கடைப்பிடிக்கப்பட்டது. அந்த வாரத்தின் புதன், வெள்ளி ஆகிய நாள்களில் நற்கருணைக் கொண்டாட்டம் நிகழ்த்தப்படவில்லை (5ஆம் நூற்றாண்டு).

பெரிய குற்றம் செய்தவர்கள் கடவுளோடும் திருச்சபையோடும் மீண்டும் நல்லுறவு கொள்வதற்குத் தயாரிப்புக் காலமாக ஆறு வாரங்கள் ஒதுக்கும் வழக்கம் உருவானது. தவத்திற்கு அடையாளமாக உடல்மீது சாம்பல் பூசிக்கொண்டு, சாக்குத் துணி உடுத்துவதும் வழக்கமானது.

5ஆம் நூற்றாண்டுக்குப் பின் எல்லாக் கிறித்தவர்களும் உயிர்த்தெழுதல் திருவிழாவுக்கு நாற்பது நாள்களுக்கு முன் திருநீற்றுப் புதனன்று சாம்பல் பூசத் தொடங்கினர். கடவுள் முன்னிலையில் எல்லாருமே பாவிகளே என்னும் உண்மையை அது உணர்த்தலாயிற்று.

இன்று தவக் காலம் கடைப்பிடிக்கப்படும் முறை

[தொகு]

மேற்கூறிய விவிலிய அடிப்படையிலும், திருச்சபையின் மரபுப் பின்னணியிலும் தவக் காலம் நாற்பது நாள் நோன்புக் காலமாகக் கருதப்பட்டு வந்துள்ளது. நாற்பது நாள் கணக்கிடுவதில் கிறித்தவ சபைகளிடையே சில வேறுபாடுகள் உள்ளன. மேற்குத் திருச்சபையில் பொதுவாக தவக் காலம் சாம்பல் புதனிலிருந்து தொடங்கி, புனித சனி வரை நீடிக்கும். இடையில் வருகின்ற ஆறு ஞாயிறுகளும் தவ நாட்களாகக் கருதப்படுவதில்லை. ஏனென்றால் ஞாயிற்றுக் கிழமை இயேசு உயிர்பெற்றெழுந்த நாள் ஆதலால் அது விழாக் கொண்டாடும் தருணமேயன்றி நோன்பு கடைப்பிடிக்கும் நேரம் அல்ல.

இரண்டாம் வத்திக்கான் சங்கம் (1962-1965) நிகழ்ந்த பின், கத்தோலிக்க திருச்சபை இயேசு இறுதி இரா உணவு உண்டு, தம் சீடரின் காலடிகளைக் கழுவி (புனித வியாழன் மாலை), துன்புற்று சிலுவையில் இறந்து (பெரிய வெள்ளி), கல்லறையில் துயில்கொண்டு (புனித சனி), சாவினின்று உயிர்த்தெழுந்த ஞாயிறு மாலை வரை உள்ள மூன்று நாள்களையும் இணைத்து முந்நாள் விழா (Holy Triduum) எனக் கொண்டாடுகிறது. இந்த முந்நாள் விழாவரை நாற்பது நாள்கள் தவக் காலமாகக் கருதப்படுகிறது.

திருநீற்றுப் புதனன்று கிறித்தவர்கள் தவக் காலத்தைத் தொடங்குகின்றனர். அன்று கோவில் சென்று வழிபட்டு, தம் தலையில் (நெற்றியில்) சாம்பல் பூசப்பெறுகின்றனர். விவிலியத்தில் அடங்கியுள்ள கடவுளின் வார்த்தையைக் கவனமாக வாசிப்பதும், வாசிக்கக் கேட்பதும், அந்த வார்த்தைக்கு ஏற்ப வாழ்வதும் தவக் காலத்தில் பொருத்தமானது. தாம் செய்த பாவங்களுக்குக் கடவுளிடம் மன்னிப்புக் கேட்பதும், அதே மன்னிப்பைப் பிறருக்கு வழங்குவதும் தவக் காலத்தின் சிறப்பாகும்.

கத்தோலிக்க சபையில் நிலவும் பழக்கங்கள்

[தொகு]

தவக் காலத்தின்போது கத்தோலிக்க திருச்சபை நோன்பு, இறைவேண்டல், தர்மம் செய்தல் ஆகியவற்றை வலியுறுத்துகிறது (காண்க: மத்தேயு 6:1-18). சாம்பல் புதனன்றும் புனித வெள்ளியன்றும் கிறித்தவர் நோன்பு இருப்பர் (fasting). வழக்கமாக உண்ணும் உணவைக் குறைத்துக் கொள்வர். வெள்ளிக் கிழமைகளில் இறைச்சி உண்பதைத் தவிர்ப்பர் (abstinence).

பொதுவாகவே இறைச்சி உண்ணாதவர்களும், ஓரளவே உண்பவர்களும் வேறு விதங்களிலும் நோன்பு கடைப்பிடிக்கலாம். இறைவேண்டலுக்குக் கூடுதல் நேரம் ஒதுக்குவதும், ஏழைகளுக்கும் பிறருக்கும் தர்மம் செய்து அன்புப் பணி புரிவதில் அதிக கவனம் செலுத்துவதும் தவக் காலப் பண்பு ஆகும். உலகின் சில பகுதிகளில் தவக் காலத்தின் போது சிறப்புக் காணிக்கைகள் பிரிக்கப்பட்டு ஏழை நாடுகளில் அவதியுறுவோரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக நன்கொடையாகக் கொடுப்பதும் உண்டு.

இந்நற்செயல்கள் எல்லாம் உள்ளத்தின் ஆழத்தில் ஒரு மாற்றம் கொணரவேண்டும். இறைவனோடும் பிறரோடும் உறவை ஆழப்படுத்த வேண்டும்.

உண்மையான நோன்பு

[தொகு]

விவிலிய நூலாகிய யோவேல்:2:12-13 உண்மையான நோன்பு பற்றிக் கீழ்வருமாறு கூறுகிறது:

குறிப்புகள்

[தொகு]