தாய்ப்பலகை
தாய்ப்பலகை (Motherboard) என்பது ஒரு தனியாள் கணினியில் உள்ள ஒரு அச்சிடப்பட்ட சுற்று பலகை ஆகும். இது கணினியின் பல அத்தியாவசிய மின்னனு பாகங்களான மையச் செயற்பகுதி (CPU), நினைவகம் (Memory), கணிப்பி (processor) மற்றும் பிற பாகங்களுக்கான இணைப்பிகளையும் கொண்டுள்ளது. இது கேபினட் எனப்படும் பெட்டகத்துக்குள் அடங்கியுள்ளது. தாய்ப்பலகை எனும் பெயருக்கு ஏற்ப இது தன்னோடு இணைக்கப் பட்டுள்ள கூறுகளான, ஒலி அட்டை (sound card), காணொளி அட்டை (video card), பிணைய அட்டை (network card), வன் தட்டு (hard drive) முதலியவற்றிற்கு தாயாகவே உள்ளது. (பிரதானப் பலகை (main board), என்பது ஒரு ஒற்றை பலகை அதில் கட்டுப்பாட்டு இணைப்புகள் எதுவும் இருக்காது, எ.கா: தொலைக்காட்சி, துவைப்பொறி முதலியவை.)
வரலாறு (History)
[தொகு]நுண்கணிப்பியின் (microprocessor) முந்துறுவுக்கு(invention) முன்னர் கணினியில், பல்வேறு அச்சிடப்பட்ட சுற்று பலகைகள் ஒன்றோடொன்று ஒரு பின் தட்டில்(backplate) இணைக்கப்பட்டு இருந்தது. மிக பழைமையான வடிவமைப்புகளில் கம்பிகள் அட்டை இணைப்பு முற்களுடன் சுற்றபட்டு இருந்தன. அதன் பின்னர் அச்சிடப்பட்ட சுற்று பலகைகளே புழக்கத்தில் உள்ளன. மையச் செயற்பகுதி, நினைவகம் மற்றும் பிற பாகங்கள் தனியாக ஒரு அச்சிடப்பட்ட சுற்று பலகைகளில் வைக்கப்பட்டு, பின்தட்டில் இணைக்கப்பட்டது. 1980, 1990களின் பிற்பகுதியில் செயல் பாகங்களை தாய்ப்பலகையுடன் இணைப்பது சிக்கனமானதாக இருந்தது. 1980களின் இறுதியில் தனியாள் கணினி தாய்ப்பலகைகள், ஒற்றை ஒருங்கினைந்த சுற்று சில்லுகளை கொண்டிருந்தன அவை குறைவேக பாகங்களான விசைப்பலகை, சுட்டெலி முதலியவற்றிற்கு போதுமானதாக இருந்தது. 1990களின் இறுதியில் தனியாள் கணினி தாய்ப்பலகைகள் முழுமையாக ஒலி, ஒளி, நினைவகம், இணைய செயல்பாடுகள் முதலியவற்றை பின்தட்டின் உதவியில்லாமல் ஆதரித்தன. துல்லியமான முப்பரிமாண விளையட்டுகளுக்கு மட்டும் தனியாக ஒரு காணொளி/ வரைகலை(graphics) அட்டை பொருத்தப்பட வேண்டி இருந்தது. மிக பிரபல கணினிகளான Apple II மற்றும் IBM PC முதலியவை திட்ட வரைபடங்களை வெளியிட்டன இவை விரைவான பின்னோக்கு பொறியியலுக்கு (reverse-engineering) அனுமதித்தன, இதனால் தாய்ப்பலகைகளில் பயனாளின் வசதிக்கேற்ப மேலும் பல சிறப்பம்சங்களை சேர்க்கலாம்.
வடிவமைப்பு (Design)
[தொகு]தாய்ப்பலகை, ஒரு கணினி பிற பாகங்களுடன் தொடர்பு கொள்ள உதவுகிறது. ஒரு மேசை கணினியில், நுண்கணிப்பி, முக்கிய நினைவகம், புறநினைவகம், ஒலி, ஒளி கட்டுபடுத்தி மற்றும் பிற பாகங்கள் அனைத்தும் ஒரே தாய்ப்பலகையில் ஒருங்கிணைக்க படக்கூடியது. தாய்ப்பலகையின் முக்கியமான பாகம்: சில்லுக்கணம்(chipset) எனப்படும் நுண்ணிய சில்லு, இதுவே ஒரு தாய்ப்பலகையின் திறன்களை தீர்மானிக்கிறது. நவீன தாய்ப்பலகையானது ஸாகெட்கள் (Socket) எனப்படும் பொருத்திகளை கொண்டுள்ளது. இதில் தான் பல்வேறு பாகங்களும் இணைக்கப்படுகிறது. இந்த மின்குதைகுழிகளில் முக்கிய பாகமான நுண்ணிய சில்லு, நினைவகம் முதலியவற்றை நிறுவலாம். மேலும் அவை விசைத்தட்டு, சுட்டெலி, அச்சு இயந்திரம், திரை முதலியவற்றை இணைக்கும் சீரியல் போர்ட்ஸ் (serial ports) எனப்படும் தொடர் புறைகளையும் உள்ளடக்கியுள்ளது. ஒருங்கிணைந்த சாதனங்களாக பிணைய அட்டை, முப்பரிமான காட்சிகளை காண உதவும் காணொளி அட்டை, நினைவகத்தை கட்டுபடுத்தும் பகுதி, கம்பியில்லா தொடர்பாடல்(wireless communication), வெப்பம், மின்னழுத்தம், மற்றும் கணினியின் பாகங்களை கண்கானிக்கும் சாதனம், USB எனப்படும் புறை(port) முதலியவற்றை கொண்டுள்ளது.
வெப்ப மேலாண்மை
[தொகு]தாய்ப்பலகையானது குறிப்பிட்ட நேர உபயோகத்திற்கு பின் வெப்பமடைய வாய்ப்புள்ளது, எனவே இவை (heat sinks) ஹீட் சிங்க்ஸ் எனப்படும் குளிர்ச்சி படுத்தக்கூடிய வெப்ப மூழ்கியுடன் வருகின்றது. தாய்ப்பலகை முறையாக குளிர்ச்சி படுத்தபடவில்லை எனில் அது இணைக்கப்பட்டுள்ள பாகங்களை சேதப்படுத்த வாய்ப்புள்ளது. 1990களின் இறுதி வரை ஒரு சிறிய விசிறியின் மூலம் CPUவின் வெப்பம் தணிக்கப்பட்டு வந்தது. அதன் பிறகு அதிக க்ளாக் ஸ்பீட் மற்றும் மின் நுகர்வால் விசிறிகள் வெப்ப மூழ்கிகளின் மீதே அமர்த்தப்பட்டது. சில தாய்ப்பலகைகள் கூடுதல் விசிறி பொருத்தவும் இடம் கொண்டுள்ளது. புதிய தாய்ப்பலகைகள் தமக்குள்ளகவே வெப்பத்தை அளக்கும் உணரிகளை(sensor) கொண்டுள்ளது இதனால் விசிறியின் வேகத்தை கூட்டவும், குறைக்கவும் முடியும். அதிக திறன் கொண்ட கணினிகளில் மிக அதிக செயல் திறன் கொண்ட நுண்கணிப்பிகள், அதிக அளவு RAM மற்றும் அதிசெயல் திறன் கொண்ட காணொளி/ வரைகலை அட்டைகளை கொண்டிருந்தால் அவை விசிறிக்கு பதில் நீரை கொண்டு குளிர்விக்கப் படுகின்றன. சில சிறிய ரக கணினிகள் அமைதி மற்றும் மின் சிக்கனமுடையதாக இருக்க விசிறி இல்லா வடிவமைப்பை கொண்டுள்ளன. இதில் வெப்ப மூழ்கிகள் மிகுந்த கவனத்துடன் பொருத்தப்பட்டுள்ளன. 2003 ஆய்வில் கணினிகள் சில குறிப்பிட்ட நேரம் செயலற்று போனது, திரையில் சில பட சிதைவுகள், என சில தடங்களுக்கு உள்ளான போது அவை வன்பொருள்(hardware) அல்லது மென்பொருளின்(software) கோளாறன்று அவை அதிகம் உபயோகமான தாய்ப்பலகை மற்றும் கொள்ளியால்(capacitor) ஏற்படுகின்றன என அறியப்பட்டது. நாட்களாக, நாட்களாக கொள்ளியில் உள்ள எலக்ட்ரோலைட் எனப்படும் நீரை அடிப்படையாக கொண்ட மின்பகுளி ஆவியாகின்றது இது தாய்ப்பலகையின் செயல்பாடுகளை பாதிப்பதோடு மட்டுமல்லாமல் மின்னழுத்ததில் மாற்றங்களை ஏற்படுத்தி கணினியை செயலற்று போக வைக்கின்றன என கண்டறியப்பட்டது. பொதுவாக கொள்ளிகள் 2000 மணி நேரம் 105°C வெப்பத்தை தாங்கும் வண்ணம் உருவாக்கப்படுகிறது. இதை விட குறைவான வெப்பத்துடன் அதாவது 45°C வெப்பத்தில் ஒரு தாய்ப்பலகை செயல்பட்டால் அவையின் வாழ்நாள் 15 வருடங்கள் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. ஆனால் பல உற்பத்தியாளர்கள் செலவை குறைக்க தரமில்லாத கொள்ளிகளை பொருத்தி விடுவதால் தாய்ப்பலகையின் வாழ்நாள் குறைந்து போகிறது. தாய்ப்பலகையில் உள்ள கொள்ளிகள் மாற்றக்கூடியவை என்றாலும் அவை அதிக நேரத்தை எடுத்து கொள்ளும் ஒரு செயலாக இருக்கும்.
இந்தியாவிலும், சீனாவிலும் அதிக அளவில் தாய்ப்பலகை வெகு விரைவில் செயலற்று போவதற்கு காரணம் மின் உற்பத்தி செய்யும் போது வெளிவரும் காற்றில் அதிக அளவு கந்தகம் கலந்துள்ளதால் தான் என இண்டெல் (Intel) ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேற்கோள்கள்
[தொகு]- "Golden Oldies: 1993 mainboards". Retrieved 2007-06-27.
- W1zzard (2005-04-06). "Pinout of the PCI-Express Power Connector". techPowerUp. Retrieved 2013-10-02.
- "RS485M-M (V1.0)". Retrieved 2007-06-27.
- c't Magazine, vol. 21, pp. 216-221. 2003.
- Chiu, Yu-Tzu; Moore, Samuel K. (2003-01-31). "Faults & Failures: Leaking Capacitors Muck up Motherboards". IEEE Spectrum. Archived from the original on 2003-02-03. Retrieved 2013-10-02.
- "Capacitor lifetime formula" பரணிடப்பட்டது 2013-09-15 at the வந்தவழி இயந்திரம். Low-esr.com. Retrieved 2013-10-02.
- Carey Holzman The healthy PC: preventive care and home remedies for your computer McGraw-Hill Professional, 2003 ISBN 0-07-222923-3 page 174
- "Scientists studying pollution damage to computers". Missoulian. 2013-10-27. Retrieved 2013-10-27.
இவற்றையும் பார்க்கவும்