பின்னடைவானது (மரபியல்)
மரபியலில் பின்னடைவானது (Recessive) என்றால், ஒரு தனி மரபணுவில் இருக்கக்கூடிய இரு வடிவங்களில் அல்லது மாற்றுருக்களில் ஒன்று, மற்றைய வடிவம் அல்லது மாற்றுருவினால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு, அந்த மரபணுவினால் கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதாகும். இதனால் குறிப்பிட்ட பின்னடைவான இயல்பின் தோற்றவமைப்பு வெளித்தெரிய வேண்டுமாயின், பின்னடைவான மாற்றுருக்கள் சமநுக அமைப்பில் இருக்க வேண்டியது அவசியமாகும். அப்படியல்லாமல் இதரநுக அமைப்பில் இருக்குமாயின், பின்னடைவான மாற்றுருவுக்குரிய தோற்றவமைப்பு மற்றைய ஆட்சியுடைய மாற்றுருவினால் மறைக்கப்பட்டு விடும்.
இரு மாற்றுருக்களைக் கொண்ட ஒரு இயல்பின் எளிமையான ஒரு முன்மாதிரியைப் பார்ப்போம். B,b என்பன பூவின் நிறத்திற்குக் காரணமான மரபணுவில் உள்ள இரு மாற்றுருக்கள் எனக் கொண்டால், அங்கே BB, Bb, bb என்னும் மூன்று வகையான மரபணுவமைப்புக்கள் தோன்றலாம். b மாற்றுருவானது, B மாற்றுருவுக்குப் பின்னடைவானதாயின், Bb என்ற மரபணுவமைப்பில் b க்குரிய வெள்ளை நிறம் வெளிக்காட்டப்படாது. பதிலாக ஊதா நிறமே வெளித்தெரியும். ஆனால் bb மரபணுவமைப்பானது வெள்ளை நிறப் பூவைத் தரும். நடைமுறையில் ஆட்சியுடைய அலகானது ஆங்கில எழுத்தாலும், பின்னடைவான அலகானது ஆங்கில சிறிய எழுத்தாலும் குறிக்கப்படுகின்றது.
மனிதரில், பால்குறி நிறப்புரிகளில் இணைந்திருக்கும் சில மரபணுக்களில், பின்னடைவான மாற்றுருக்கள் காரணமாக மரபு வழியாகக் கடத்தப்படும் சில நோய் நிலைகள் காணப்படுகின்றன. எ.கா:
- குருதி உறையாமை - X பாலின நிறப்புரியில் இணைந்திருக்கும் ஒரு பின்னடைவான எதிருரு காரணமாகின்றது.
- நிறக்குருடு - X பாலின நிறப்புரியில் இணைந்திருக்கும் ஒரு பின்னடைவான எதிருரு காரணமாகின்றது.