மீக்கா (நூல்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
விவிலியத்தின் |
பழைய ஏற்பாட்டு நூல்கள் |
---|
கிறித்தவம் வலைவாசல் விவிலியம் வலைவாசல் |
மீக்கா (Micah) என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும்.
பெயர்
[தொகு]மீக்கா என்னும் நூல் மூல மொழியாகிய எபிரேயத்தில் מִיכָה (Mikha, Mîḵā) என்று அழைக்கப்படுகிறது. கிரேக்கத்தில் இந்நூல் Μιχαίας, (Michaías) என்றும் இலத்தீனில் Michaeas என்றும் உள்ளது.
இப்பெயரின் பொருள் "கடவுளுக்கு இணையாவார் யார்?" என்பதாகும். மிக்கேல் (Michael) என்பது இப்பெயரின் வேறொரு வடிவம்.
தோன்றிய காலம்
[தொகு]மீக்கா இறைவாக்கு உரைத்த காலம் கி.மு. 737-690 ஆகும். அதுவே யோத்தாம், ஆகாசு, எசேக்கியா ஆகிய மன்னர்களின் ஆட்சிக்காலமும்கூட. மீக்கா யூதாவில் உள்ள நாட்டுப்புற நகர் ஒன்றில் தோன்றியவர். ஓசேயா, எசாயா ஆகியோர் வாழ்ந்து பணியாற்றிய காலமும் அதுவே.
எரேமியா இறைவாக்கினரின் நூலில் 26:18 கூறுவதுபோல, "யூதாவின் அரசரான எசேக்கியாவின் காலத்தில் மோரசேத்தைச் சார்ந்த மீக்கா இறைவாக்கு உரைத்துக் கொண்டிருந்தார்."
மீக்கா நூல் முழுவதுமே அப்பெயர் கொண்ட இறைவாக்கினரால் எழுதப்பட்டதா என்பது குறித்து அறிஞரிடையே ஒத்த கருத்து இல்லை. நூலின் முதல் மூன்று அதிகாரங்களும் (2:12-13 தவிர) அவர் எழுதியவையே எனத் தெரிகிறது. எஞ்சிய நான்கு அதிகாரங்களும் பதிப்பாசிரியர்களின் இணைப்பாக இருக்கலாம்.
வழங்கும் செய்தி
[தொகு]மீக்கா நூலில் சமூக நீதி பற்றிய சிறப்பான கருத்துகள் உள்ளன. அவை ஆமோஸ் இறைவாக்கினர் அறிவித்த செய்தியோடு ஒத்திருக்கின்றன. நாட்டில் செல்வம் கொழித்த போதிலும் ஏழை எளியவர்கள் நசுக்கப்பட்டார்கள். அவர்களைக் கொடுமைப்படுத்துவோர் கடவுளுக்கு உண்மையான வழிபாடு நல்கவில்லை. எனவே, கடவுளை அன்புசெய்வோர் தம்மை அடுத்திருப்போரையும் அன்புசெய்ய வேண்டும் என்று மீக்கா வலியுறுத்துகிறார்.
இசுரயேல் மக்கள் நேர்மையற்று நடந்தனர்; அநீதிக்குத் தலைவணங்கினர்; தீச்செயல்கள் பல புரிந்தனர்; ஏழைகளை ஏமாற்றினர்; அனாதைகளை நசுக்கினர். தென்னாட்டினரான யூதா மக்களும் இதுபோன்றே வாழ்ந்து வந்தனர். எனவே இசுரயேல் மக்களுக்கு ஆமோஸ் இறைவாக்கினர் முன்னறிவித்த தண்டனைத் தீர்ப்பு தம் நாட்டினர் மீதும் வரும் என்று மீக்காவும் முன்னறிவித்தார். அதே நேரத்தில் மீட்புப் பற்றியும் முன்னறிவித்தார்.
நூலிலிருந்து சில பகுதிகள்
[தொகு]மீக்கா 2:1-3
"தங்கள் படுக்கைகளின்மேல் சாய்ந்து
தீச்செயல் புரியத் திட்டமிட்டுக்
கொடுமை செல்ல முயல்பவர்களுக்கு ஐயோ கேடு!
பொழுது புலர்ந்தவுடன் தங்கள் கைவலிமையினால்
அவர்கள் அதைச் செய்து முடிக்கின்றார்கள்.
வயல் வெளிகள் மீது ஆசை கொண்டு,
அவற்றைப் பறித்துக் கொள்கின்றார்கள்;
வீடுகள்மேல் இச்சை கொண்டு
அவற்றைக் கைப்பற்றிக் கொள்கின்றார்கள்...
ஆதாலால் ஆண்டவர் கூறுவது இதுவே:
'இந்த இனத்தாருக்கு எதிராகத்
தீமை செய்யத் திட்டமிடுகிறேன்'"
மீக்கா 6:6-8
"ஆண்டவரின் திருமுன் வரும்போது
உன்னதரான கடவுளாகிய அவருக்கு எதைக் கொண்டுவந்து பணிந்து நிற்பேன்?
எரிபலிகளோடும் ஒரு வயதுக் கன்றுகளோடும் அவர் முன்னிலையில் வர வேண்டுமா?
ஆயிரக்கணக்கான ஆட்டுக்கிடாய்கள் மேலும்
பல்லயிரக்கணக்கான ஆறுகளாய்ப் பெருக்கெடுத்தோடும் எண்ணெய் மேலும்
ஆண்டவர் விருப்பம் கொள்வாரோ?
என் குற்றத்தை அகற்ற என் தலைப்பிள்ளையையும்,
என் பாவத்தைப் போக்க நான் பெற்ற குழந்தையையும் பலி கொடுக்க வேண்டுமா?
ஓ மானிடா, நல்லது எது என அவர் உனக்குக் காட்டியிருக்கின்றாரே!
நேர்மையைக் கடைப்பிடித்தலையும்,
இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும்
உன் கடவுளுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்துகொள்வதையும் தவிர
வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்?"
உட்பிரிவுகள்
[தொகு]பொருளடக்கம் | நூல் அதிகாரங்கள் மற்றும் வசன வரிசை | 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை |
---|---|---|
1. இசுரயேல்மீது தண்டனைத் தீர்ப்பு | 1:1 - 3:12 | 1362 -1365 |
2. மீட்பும் அமைதியும் | 4:1 - 5:15 | 1365 - 1368 |
3. எச்சரிக்கையும் வருங்கால நம்பிக்கையும் | 6:1 - 7:20 | 1368 - 1371 |