அசிசியின் பிரான்சிசு
அசிசியின் புனித பிரான்சிசு Saint Francis of Assisi | |
---|---|
புனித பிரான்சிசு | |
மறைப்பணியாளர்; துறவி; சபை நிறுவுநர் | |
பிறப்பு | 1181/1182 அசிசி, இத்தாலி |
இறப்பு | அக்டோபர் 3, 1226 அசிசி, இத்தாலி |
ஏற்கும் சபை/சமயங்கள் | கத்தோலிக்க திருச்சபை; ஆங்கிலிக்கம்; லூதரனியம் |
புனிதர் பட்டம் | சூலை 16, 1228, அசிசி by திருத்தந்தை ஒன்பதாம் கிரகோரி |
முக்கிய திருத்தலங்கள் | அசிசி நகர் பிரான்சிசு பெருங்கோவில் |
திருவிழா | செப்டெம்பர் 17 அக்டோபர் 4 |
சித்தரிக்கப்படும் வகை | சிலுவை, புறா, பறவைகள், விலங்குகள், காலருகில் ஓநாய், "அமைதியும் நன்மையும்", ஐந்து காயங்கள், "T" வடிவ சிலுவை. |
பாதுகாவல் | விலங்குகள், கத்தோலிக்க சேவை, சுற்றுச்சூழல், வணிகர், மேய்க்காவுயான் நகரம் (பிலிப்பீன்சு), இத்தாலி, பிலிப்பீன்சு, அடைக்கலம் தேடிப் பயணம் செய்வோர். |
அசிசியின் பிரான்சிசு (Francis of Assisi, 1181/1182 – அக்டோபர் 3, 1226) ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவத் திருத்தொண்டரும், பிரான்சிஸ்கு சபை என்னும் கிறிஸ்தவ துறவற அமைப்பை நிறுவியவரும் ஆவார்[1]. அவர் பிறந்த ஆண்டு கி.பி.1181 அல்லது கி.பி.1182 என்று கூறுவர். அவர் இறந்த ஆண்டும் நாளும் உறுதியாகத் தெரிவதால் அதிலிருந்து பின்னோக்கிக் கணித்து அவரது பிறந்த ஆண்டை வரலாற்றாசிரியர்கள் நிர்ணயிக்கின்றனர். பிரான்சிசு திருத்தொண்டராகப் பட்டம் பெற்ற பின் 'குருப்பட்டம்' பெற தாம் தகுதியற்றவர் என்று தாழ்ச்சி உணர்வுடையவராக, அப்பட்டத்தைப் பெற முன்வரவில்லை.
வரலாற்று ஆதாரங்கள்
[தொகு]புனித அசிசி பிரான்சிசின் வாழ்க்கை வரலாறுபற்றிய தகவல்களுக்குப் பல சான்றுகள் உள்ளன. 12-13ஆம் நூற்றாண்டுகளில் அவர் வாழ்ந்திருந்த போதிலும் அவர் உரைத்த சொற்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் நிறுவிய சபைக்கு அவர் வழங்கிய ஒழுங்குகள் உள்ளன. அவர் எழுதிய இறுதி சாசனம் உள்ளது. அவர் எழுதிய கடிதங்கள், கவிதைகள், வழிபாடுபற்றிய எழுத்துப்படையல்கள் போன்றவையும் உள்ளன.
பிரான்சிசு இறந்த இருபது ஆண்டுகளுக்குள்ளாக அவரைப் பற்றிய வாழ்க்கை வரலாற்று ஏடுகள் தோன்றலாயின. அவரைப் பின்பற்றிய அவர்தம் சீடர்கள் பலர் அவரது வரலாற்றை எழுதினர். அவர்களுள் சகோதரர்கள் செலானோ தோமா, லியோ, ஆஞ்செலொ, ருஃபீனோ ஆகியோரைக் குறிப்பிடலாம். மேலும் பல பிரான்சிஸ்கன் துறவியர் பிரான்சிசோடு தமக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், அவரது போதனை, வாழ்க்கை நிகழ்வுகளையும் சேர்த்தனர்.
இத்தகைய வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் புனித பிரான்சிசு பற்றிய பல விவரங்கள் உறுதியாகத் தெரிகின்றன. பிரான்சிசு வாழ்ந்த 12-13ஆம் நூற்றாண்டுகளிலும் அதற்குப் பின்னும் இன்று வரை எண்ணிறந்த மனிதர்கள் இந்த "அசிசியின் ஏழை மனிதரின்" (Poor Man of Assisi) எளிய வாழ்க்கையையும், இயற்கை அன்பையும், கடவுள் பக்தியையும் போற்றி வந்துள்ளனர்.
கத்தோலிக்க திருச்சபை தவிர புரடஸ்தாந்து குறிப்பாகஆங்கிலிக்கம், லூதரனியம் சபைகளும், எல்லா சமயத்தவரும் இவரை மாபெரும் மனிதராகவும் புனிதராகவும் ஏற்கின்றனர்.
பிரான்சிசு என்னும் பெயர் எழுந்த வரலாறு
[தொகு]பிரான்சிசு, இவரது பெற்றோருக்குப் பிறந்த ஏழு பிள்ளைகளுள் ஒருவர். இவரது தந்தையார் பியேட்ரோ டி பெர்னார்டோனே (Pietro di Bernardone) ஒரு செல்வந்தரான துணி வணிகர் ஆவார். இவரது தாயார் பிக்கா பூர்லமோ (Pica Bourlemont) குறித்து அதிகம் தெரிய வராவிட்டாலும், அவர் பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர் என்று தெரிகின்றது[2].
பிரான்சிசு பிறந்தபோது அவர்தம் தந்தை பியேட்ரோ வணிக அலுவலுக்காகப் பிரான்சு சென்றிருந்தார். பிரான்சிசின் தாயார் அவருக்கு, "திருமுழுக்கு யோவான்" என்னும் கிறித்தவப் புனிதரின் பெயரைத் தழுவி, ஜொவானி டி பேர்னார்டோனே என்னும் பெயரில் திருமுழுக்கு வழங்க ஏற்பாடு செய்தார். பிரான்சிசு வளர்ந்து ஒரு சமயப் பெரியார் ஆக வேண்டும் என்னும் எண்ணத்திலேயே அவர் அவ்வாறு செய்தார்.
பிரான்சிசின் தந்தை அசிசிக்குத் திரும்பியதும் இதையிட்டுக் கோபம் அடைந்தார். அவருக்குத் தனது மகன் ஒரு சமயத் தலைவராக இருப்பதில் விருப்பமில்லை. இதனால் அவர் தன் மகனைப் பிரான்செஸ்கோ என்று பெயரிட்டு அழைத்தார். அப்பெயருக்கு "பிரான்சு நாட்டோடு தொடர்புடைய" என்பது பொருள். அதுவே ஆங்கிலத்தில் "பிரான்சிசு" (Francis) என்றானது. பிரான்சு தொடர்பிலான தமது வணிக வெற்றியை நினைவுகூரவும், பிரான்சு தொடர்பான எல்லாவற்றிலும் அவருக்கிருந்த பற்றினாலுமே இப்பெயரை அவர் விரும்பினார். அப்பெயரே வரலாற்றில் நிலைத்துவிட்டது. ஆனால் பிரான்சிசு தம் தந்தையின் கனவைப் பொய்யாக்கித் துறவறம் பூண்டார்.
இளமைப் பருவம்
[தொகு]இளைஞராக இருந்தபோது பிரான்சிசுக்கு பிரெஞ்சு மொழியில் கவிஞராக வேண்டும் என்ற ஆசை இருந்ததாகச் சிலர் கூறுகின்றனர். அசிசியில் புனித ஜோர்ஜ் பங்குக்கோவிலில் அவர் சிறிது கல்வி பயின்றார். ஆனால் அவர் படிப்பில் மிகுந்த ஆர்வம் காட்டவில்லை, தம் தந்தையின் தொழிலாகிய வாணிகத்தில் மனதார ஈடுபடவுமில்லை. இவரது வரலாற்றை எழுதியவர்கள் இவரது பகட்டான உடைகள், பணக்கார நண்பர்கள், தெருச் சண்டைகள், உலகப் போக்கை விரும்பும் இயல்பு ஆகியவை பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றனர். மேல்தட்டு இளைஞர்களோடு சுற்றித் திரிவதிலும், வீர சாகசம் புரிவதிலும் ஆர்வம் காட்டினார். நடுத்தர வர்க்கமாகிய வணிகர் பிரிவைச் சார்ந்த பிரான்சிசு உயர்குடி மக்களைப் போல ஆடம்பர வாழ்க்கை நடத்த விருப்பமுடையவராய் இருந்தார்.பிரான்சிசு இளவயதில் வீரனாக வாழ்ந்து தளபதி பட்டம் பெற அதிகம் ஆவல் கொண்டார். அண்டை நகராகிய பெரூஜியா (Perugia) நகருக்கும் அசிசி நகருக்கும் இடையே நீண்டகாலப் பகைமை இருந்துவந்தது. அந்த இரு நகரங்களுக்கும் இடையே போர் நிகழ்ந்தபோது, இருபது வயதே நிறைந்த பிரான்சிசும் படையில் சேர்ந்தார். எதிரிகளால் சிறைப்படுத்தப்பட்டு, ஓராண்டு சிறை வாசம் அனுபவித்தார்.[3]. சிறையிலிருந்தபோது பல துன்பங்களுக்கு ஆளானார். ஆயுதம் தாங்கிப் போர் செய்வது முறையாகுமா என்ற கேள்வியும் அவர் உள்ளத்தில் அப்போது எழுந்தது. சிறையிலிருந்து வீடு திரும்பியபின், புனித தமியானோ கோவிலில் சிலுவையிலிருந்து ஒலித்த இயேசுவின் குரலைக் கேட்ட இவர் தம் வாழ்வுப் பாதையையே மாற்றியமைத்தார். ஆனால் அதே நேரத்தில் இளம் வயதிலேயே இவருக்கு உலகியல் வாழ்வில் வெறுப்பு ஏற்பட்டதோடு ஏழைகள் மட்டில் பரிவும் தோன்றியது. பெரூஜியாவில் ஓராண்டு சிறையில் இருந்தபோது, அவரோடு கூட இருந்த ஒரு கைதியைப் பிற கைதிகள் கொடுமைப்படுத்தியபோது, பிரான்சிசு அவருக்கு ஆதரவாகப் பேசினார்.
பிரான்சிசு மனமாற்றம் அடைந்த வரலாறு
[தொகு]1201ஆம் ஆண்டில் பெரூஜியா நகருக்கு எதிராகப் போரிடும்படி பிரான்சிசு படையில் சேர்ந்தார். காலெஸ்ட்ராடாவில் நடந்த போரில் எதிரிகளிடம் பிடிபட்ட இவர் ஓராண்டு கைதியாக இருக்க நேரிட்டது[4]. இந்த அனுபவத்தில் இருந்தே படிப்படியாகப் பிரான்சிசுக்குத் ஆன்மிக மாற்றம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.[4]. எனினும், 1203ஆம் ஆண்டில் அசிசிக்குத் திரும்பிய பிரான்சிசு மீண்டும் தனது பழைய வாழ்க்கைமுறைக்கே திரும்பினார்[1][5]. 1205ஆம் ஆண்டிலும் அவருக்கு ஓர் ஆன்மிக அனுபவம் கிடைத்ததாகத் தெரிகிறது.அதன்பின், பிரான்சிசு தம் பழைய வாழ்க்கை முறையை மாற்றத் தொடங்கினார். விளையாட்டுகளும் விழாக்களும் அவருக்கு வெறுப்பையே ஊட்டின. அவருடைய முன்னாள் நண்பர்களை அவர் தவிர்க்கத் தொடங்கினார். அவர்கள், வேடிக்கையாக அவரைப் பார்த்து, "திருமணம் செய்துகொள்ளப் போகிறீரோ?" என்று கேட்டனர். அதற்குப் பிரான்சிசு, "ஆம், நீங்கள் பார்த்திராத அழகுமிக்க ஒரு பெண்ணை நான் மணம் செய்துகொள்ளப் போகிறேன்" என்று பதிலிறுத்தாராம். அவர் குறிப்பிட்ட பெண் "ஏழ்மை" என்னும் இலட்சியமே. இயேசுவைப் பின்பற்றி, பிரான்சிசும் ஓர் ஏழை மனிதராக வாழ விரும்பினார். பிரான்சிசு தனிமையை நாடிச் சென்று நீண்ட நேரம் செலவிட்டார். கடவுளை நோக்கி வேண்டல் செய்து, தம் உள்ளத்தில் இறை ஒளியைப் பாய்ச்ச வேண்டும் என்று மன்றாடினார்.
குரல் கேட்டல்
[தொகு]பிரான்சிசின் வரலாற்றில் வருகின்ற பிச்சைக்காரனின் கதையிலிருந்து உலகப்பற்றை அவர் வெறுத்தது குறித்து அறியலாம்[2]. இதன்படி, தந்தைக்குப் பதிலாக இவர் சந்தையில் ஒருநாள் துணி விற்றுக்கொண்டிருந்தார். அப்போது, ஒரு பிச்சைக்காரன் இவரிடம் பிச்சை கேட்டான். இவர் அப்போது வாடிக்கையாளருடன் வணிகத்தில் ஈடுபட்டிருந்தார். அது முடிந்ததுமே, தனது பொருட்களை அப்படியே விட்டுவிட்டு பிச்சைக்காரனைத் தேடி ஓடினார். அவனைக் கண்டதும், தன்னிடம் இருந்த எல்லாவற்றையுமே அவனிடம் கொடுத்துவிட்டார். இச்செயலை முன்னிட்டு இவரது நண்பர்கள் பிரான்சிசைக் குறைகூறினர். வீட்டுக்குச் சென்றதும் பிரான்சிசின் தந்தை மிகவும் கோபம் கொண்டு அவரைக் கண்டித்தார்.
1204 இல் பிரான்சிசு நோய் வாய்ப்பட்டதைத் தொடர்ந்து, தம் வாழ்க்கையின் பொருள்பற்றி ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கினார். 1205 இல் பூலியா (Puglia) என்னும் இடம் நோக்கிப் பயணமான அவர் அங்கே வால்ட்டர் என்னும் பெயர் கொண்ட பிரியேன் கவுண்ட்டின் (Count of Brienne) படையில் சேரத் துணிந்தார். வழியில் அவர் அதிசயமானதொரு காட்சி காணும் பேறு பெற்றார். அதில் ஒரு பெரிய மண்டபத்தில் பல வகையான போர்க்கருவிகள் இருந்தன. அவற்றின் மீது சிலுவைச் சின்னம் வரையப்பட்டிருந்தது. அப்போது ஒரு குரல் "இந்த ஆயுதங்கள் உனக்கும் உன் போர் வீரர்களுக்கும் உள்ளன" என்று கூறியது. உடனே பிரான்சிசு மிகுந்த உற்சாகத்துடன், "அப்படி என்றால் நான் புகழ்மிக்க இளவரசன் ஆவேன்" என்றார்.
ஆனால் வழியில் அவர் நோய்வாய்ப்பட்டார். மேலும் ஒரு காட்சியில் ஒரு குரல் அவரை மீண்டும் அசிசி நகருக்குத் திரும்பிப் போகக் கூறியது. "நீ தலைவருக்கு (கடவுளுக்கு) வேலை செய்யவேண்டுமே ஒழிய, பணியாளருக்கு (உலக அதிகாரிகள்) அல்ல" என்று கூறிய அக்குரலைக் கேட்ட பிரான்சிசு அசிசி நகருக்குத் திரும்பிச் சென்றார். 1205ஆம் ஆண்டில் பிரான்சிசுக்கு இந்த ஆன்மிக அனுபவம் ஏற்பட்டது என்று அவரது வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
புனித தமியானோ கோவிலில் பிரான்சிசு பெற்ற இறையனுபவம்
[தொகு]1206ஆம் ஆண்டில் ஒருநாள் பிரான்சிசு அசிசி நகர்ப் பள்ளத்தாக்கில் அமைந்திருந்த புனித தமியானோ கோவிலுக்குள் நுழைந்து இறைவேண்டல் செய்யச் சென்றார். அக்கோவில் பெரிதும் பழுதுபட்டு, பாழடைந்த நிலையில் இருந்தது. கோவிலின் உள்ளே சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் திருவுருவம் சித்தரிக்கப்பட்ட ஒரு திருவோவியம் இருந்தது. அது பிசான்சிய-இத்தாலியக் கலைப் பாணியில் 12ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஓவியம்.
கோவிலின் உள்ளே நுழைந்த பிரான்சிசு இயேசுவின் திருச்சிலுவைத் திருவோவியத்தின் முன் மண்டியிட்டு உருக்கமாக வேண்டிக்கொண்டிருந்தார். அவர் ஏறிட்டு இயேசுவின் திருமுகத்தைப் பார்த்தபோது ஓர் அதிசயம் நிகழ்ந்ததைக் கண்டார். இயேசுவின் உதடுகள் அசைவதுபோலத் தெரிந்தது. இயேசுவின் குரல் தெளிவாகப் பிரான்சிசின் காதுகளிலும் உள்ளத்திலும் ஒலித்தது:
“ | பிரான்சிசு, என் வீடு பாழடைந்து கிடப்பதைப் பார்க்கிறாய் அல்லவா, எழுந்து சென்று அதைச் செப்பனிடு! | ” |
இச்சொற்களைக் கேட்ட பிரான்சிசுக்கு ஒரே அதிர்ச்சி. அக்குரல் எங்கிருந்து வந்தது என்று அறிவதற்காகக் கோவிலில் சுற்றுமுற்றும் பார்த்தார். இயேசுவே தம்மிடம் பேசுகிறார் என்பதை உணர்ந்ததும் பிரான்சிசு, "அப்படியே செய்கிறேன், ஆண்டவரே" என்று உற்சாகத்தோடு பதிலிறுத்தார்[1][6].
புனித தமியானோ கோவிலில் பிரான்சிசுக்கு ஏற்பட்ட அனுபவம் அவரது இறையனுபவத்தின் ஓர் உச்சக்கட்டமாக வரலாற்றாசிரியர்களால் கருதப்படுகிறது. பிரான்சிசு தம் வாழ்க்கை முழுவதையும் கடவுளுக்குப் பணிபுரிவதிலேயே செலவழிக்கப் போவதாக உறுதிபூண்டார். முதலில் புனித தமியானோ கோவிலைச் செப்பனிடுவது பற்றித்தான் சிலுவையில் தொங்கிய இயேசு தம்மிடம் கேட்டதாகப் பிரான்சிசு நினைத்தார். ஆனால் நாள் போகப் போக, தம்மிடம் இயேசு செய்யக் கேட்ட பணி விரிவான ஒன்று என்பதை அவர் உணர்ந்தார். இயேசுவின் பெயரால் கூடுகின்ற சமூகமாகிய திருச்சபையைச் சீரமைக்கவே இயேசு தம்மிடம் கேட்டார் என்பதைப் புரிந்துகொண்ட பிரான்சிசு ஒரு புதிய வாழ்க்கை முறையைத் தழுவலானார்.
முதலில் அவர் தம் வீட்டுக்கு விரைந்து சென்று, தம் தந்தையின் துணிக்கடையில் இருந்த விலையுயர்ந்த துணிகள் பலவற்றை எடுத்து மூட்டையாகக் கட்டி தம் குதிரைமீது ஏற்றினார். அசிசி நகருக்கு அருகே இருந்த ஃபொலீனோ (Foligno) என்னும் நகரச் சந்தைக்குச் சென்று துணிகளையும் அவற்றோடு குதிரையையும் விலைபேசி விற்றுவிட்டு, கிடைத்த பணத்தை வாங்கிக்கொண்டு புனித தமியானோ கோவிலுக்குத் திரும்பிச் சென்றார்.
கோவில் குருவிடம் பணத்தைக் கொடுத்து, அக்கோவிலைச் செப்பனிடுமாறு கேட்டார். ஆனால் பணம் எங்கிருந்து வந்தது என்பதை அறிந்ததும் குரு அதை வாங்க மறுத்துவிட்டார். பிரான்சிசு பணத்தை அங்கேயே போட்டுவிட்டு, தம் தந்தைக்கு அஞ்சி ஓரிடத்தில் போய் ஒளிந்து கொண்டார்.
இதற்கிடையில், தம் மகன் துணிகளையும் குதிரையையும் விற்றதையும் அப்பணத்தைக் கோவில் குருவிடம் கொடுக்க முயன்றதையும் கேள்வியுற்ற பியேட்ரோ விரைந்து புனித தமியானோ கோவிலுக்கு வந்தார். அங்கு பிரான்சிசைத் தேடிப்பார்த்தும் காணாததால் ஏமாற்றத்தோடு வீடு திரும்பினார்.
ஒரு மாதத்திற்குப் பிறகு ஒளிவிடத்திலிருந்து வெளியே வந்த பிரான்சிசு வீடு திரும்பினார். பசியால் வாடி மெலிந்துபோயிருந்த அவர் கந்தைத் துணிகளோடு தெருவில் நடந்து போனதைக் கண்ட சிறுவர்கள் சிலர் அவரைப் பைத்தியம் என்று எள்ளி நகையாடியதோடு அவர்மீது கல்லெறிந்தனர். அவருடைய தந்தை பியேட்ரோ பெர்னார்டோனே பிரான்சிசை வீட்டுக்கு இழுத்துக்கொண்டுபோய், நையப்புடைத்து, அவரது கால்களில் சங்கிலியைக் கட்டி, அவரை ஓர் அறையில் அடைத்துப் போட்டார். பியேட்ரோ வீட்டில் இல்லாத நேரம் பார்த்துப் பிரான்சிசின் தாய் மகன்மீது இரக்கம் கொண்டு அவரை விடுவித்தார். பிரான்சிசு மீண்டும் புனித தமியான் கோவிலுக்குச் சென்று, தம் நாட்களை இறைவேண்டலில் கழித்தார்.
துறவற சபைகளை நிறுவுதல்
[தொகு]பின்னர் பிரான்சிசு உரோமை நகருக்குத் திருப்பயணமாகச் சென்றார். அங்கு புனித பேதுரு பேராலயத்தின் அருகே பிச்சையெடுத்துக் கொண்டு இருந்தவர்களோடு தாமும் போய் அமர்ந்துகொண்டு, ஒரு பிச்சைக்காரராக மாறினார். இந்த அனுபவம் அவருக்கு ஏழ்மையின் பொருளை ஆழ்ந்த விதத்தில் உணர்த்திற்று. வாழ்நாள் முழுவதும் ஏழ்மையிலேயே கழிக்க வேண்டும் என்று பிரான்சிசு உறுதி பூண்டார்.
பிரான்சிசு வீடு திரும்பியதும், அசிசி நகரின் தெருக்களில் இறங்கி நடந்து சென்று, இயேசுவைப் பற்றிப் போதிக்கலானார். அவர் கூறியதைக் கேட்டு ஒரு சிலர் அவருக்குச் சீடர்களாக மாறினர்.1209 ஆம் ஆண்டு 12 இளையோருடன், "சிறு சகோதரர்கள்" என்ற சபையை ஆரம்பித்தார். பிரான்சிசு திருத்தந்தை மூன்றாம் இன்னசண்டை அணுகித் தம் குழுவை ஒரு துறவற சபையாக அங்கீகரித்து ஏற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். திருத்தந்தை 1210இல் பிரான்சிஸ்கன் சபைக்கு அதிகாரப்பூர்வமான இசைவு வழங்கினார்.
பின்னர், பிரான்சிசு 1212 இல் கிளாரா என்ற பெண்மணியோடு சேர்ந்து பெண்களுக்கான ஒரு துறவற சபையையும், 1221இல் மேலும் தவ முயற்சிகளை மேற்கொள்ளும் பொதுநிலை சகோதர சகோதரிகளுக்கென்று "மூன்றாம் சபை" என்று அழைக்கப்பட்ட ஒரு அமைப்பையும் ஆரம்பித்தார்[7].
சிலுவைப் போரில் பங்காற்றுதல்
[தொகு]திருத்தந்தை மூன்றாம் இன்னசெண்ட் விடுத்த அழைப்பை ஏற்று, பிரான்சிசு 1219 இல் சிலுவைப் போர் வீரர்களோடு சேர்ந்து எகிப்து செல்லப் பயணமானார். அங்கு இயேசு பிறந்து வளர்ந்து இறந்த திருநாட்டை மீட்க போரிடும்போது இறக்க நேர்ந்தால் தம் கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டு மறைச்சாட்சியாக உயிர்துறக்கலாம் என்னும் எதிர்பார்ப்பு அவரிடம் இருந்தது. மேலும், கிறித்தவர்களும் இசுலாமியர்களும் நட்புடன் வாழ்வதற்குப் போர் தவிர வேறு வழிகள் உண்டு என்பதிலும் அவருக்கு நம்பிக்கை இருந்தது.
இதற்கிடையில் பிரான்சிஸ்கு சபை மிகப் பெரியதாக வளர்ந்தது. எனவே சபையை ஒழுங்கமைப்பதற்காகப் பிரான்சிசு முயற்சிகள் மேற்கொண்டார். சபையின் ஒழுங்குகள் திருத்தந்தையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர், பிரான்சிசு நிர்வாகப் பொறுப்பில் அதிகம் ஈடுபடவில்லை.
பிரான்சிசு ஒரு தொழுநோயாளரை அரவணைத்த நிகழ்ச்சி
[தொகு]உலகப் போக்கை விடுத்து, ஆன்மிக வாழ்வை மேற்கொள்ளத் துணிந்த பிரான்சிசுவின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியைப் பல வரலாற்று ஆசிரியர்களும் குறிப்பிடுகின்றனர். அது பிரான்சிசு ஏழைகளிடமும் சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டோர்களிடமும் காட்டிய அன்பை எடுத்துரைக்கிறது.
ஒருநாள் பிரான்சிசு அசிசி பள்ளத்தாக்கில் குதிரைமீது பயணமாகச் சென்றுகொண்டிருந்தார். அப்போது உடலெல்லாம் புண் நிறைந்த ஒரு தொழுநோயாளியைத் தொலையில் கண்டார். செல்வத்தில் பிறந்து வீர சாகசங்கள் புரிவதில் ஆர்வம் கொண்டு வளர்ந்த பிரான்சிசுக்கு தொழுநோய் என்றாலே வெறுப்பு. அருவருக்கத் தக்க அந்த நோய் யாரைத் தொற்றியதோ அவர்களை அணுகவே அவருக்குப் பிடிக்காமல் இருந்தது. தமக்கு இயல்பாக இருந்த உணர்வுகளை அடக்கிக் கொண்டு, பிரான்சிசு குதிரையிலிருந்து வேகமாக இறங்கினார். ஓடிச் சென்று அந்தத் தொழுநோயாளியைக் கட்டிப் பிடித்து அரவணைத்து முத்தமிட்டார்.
அருவருக்கத் தக்க நோயால் பீடிக்கப்பட்டாலும் மனிதர்கள் எல்லாரும் கடவுளின் சாயலாக உருவாக்கப்பட்டவர்களே என்னும் ஆழ்ந்த உண்மையைப் பிரான்சிசு உணர்ந்தார். அதன் பின், அசிசி நகரின் எல்லைக்கு வெளியே அமைந்திருந்த தொழுநோயாளர் இல்லத்திற்குச் சென்று, அவர்களுக்குப் பணிபுரிவதில் அவர் மகிழ்ச்சி கண்டார். சமுதாயத்தால் ஒதுக்கப்பட்ட மக்களில் துன்புற்ற இயேசுவின் சாயலை அவர் கண்டார்.
உரோமை நகருக்குத் திருப்பயணமாகச் சென்றபோது, அங்கு கோவில் படிகளில் அமர்ந்து ஏழைகளுக்காகப் பிச்சைகேட்டார். ஏழைகளோடு ஏழையாகத் தம்மையே இணைத்துக்கொண்டார்.
பிரான்சிசு தாம் உடுத்திருந்த உடையையும் துறந்த நிகழ்ச்சி
[தொகு]பிரான்சிசின் தந்தை தம் மகன் மனம்போன போக்கில் போவதாக உணர்ந்ததால் தமியானோ கோவிலில் அவரைச் சந்தித்து, உடனடியாக வீட்டுக்குத் திரும்பும்படி பணித்தார். தாம் சொன்னதுபோல் செய்யாவிட்டால் பிரான்சிசு தம் வாரிசுச் சொத்தை இழக்க வேண்டிவரும் என்று மிரட்டினார். அதோடு, தம்மிடமிருந்து எடுத்துக்கொண்ட பணத்தையும் திருப்பித் தர வேண்டும் என்று கேட்டார். அதற்குப் பதில்மொழியாக, பிரான்சிசு தமக்குத் தந்தையின் சொத்து தேவையில்லை என்று கூறவே, நகர அதிகாரிகளுக்கு முன்னிலையில் நீதிமன்றத்திடம் கொண்டுபோவதாகத் தந்தை கூறினார்.
ஆனால், பிரான்சிசு தமது சொத்தைத் துறந்துவிட்டு, தம்மைக் கடவுளின் பணிக்கு அர்ப்பணித்துவிட்டதால் நகர அதிகாரிகளுக்கு முன் போக முடியாது என்று மறுத்துவிட்டார். எனவே வழக்கு அசிசி ஆயரின் நீதிமன்றத்தின் முன் கொண்டு வரப்பட்டது.
அசிசி நகரின் ஆயர் குயிதோ (Guido) பிரான்சிசிடம் தந்தைக்குரிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கும்படி கூறினார். தவறான வழியில் பெறப்பட்ட பணம் கடவுளுக்கோ திருச்சபைக்கோ தேவையில்லை என்று ஆயர் கூறியதும், பிரான்சிசு பணத்தைத் தந்தையிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்.
பின் பிரான்சிசு தாம் உடுத்திருந்த ஆடையைக் களைந்து, தம் தந்தையின் முன்னிலையில் அதை வைத்துவிட்டு, "இதோ, என் உடையையும் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்" என்று கூறினார். பிரான்சிசு,
“ | இதுவரை நான் பியேட்ரோ பெர்னார்டோனே என்பவரை அப்பா என்று அழைத்து வந்தேன். இன்றிலிருந்து எனக்கு அப்பா 'வானகத்திலிருக்கும் நம் தந்தையே' | ” |
என்றுரைத்து, அனைவர் முன்னிலையிலும் நிர்வாணமாக நின்றார். அதைக் கண்ட ஆயர் குயிதோ தம் மேலாடையை எடுத்துப் பிரான்சிசிடம் கொடுத்துப் போர்த்திக்கொள்ளச் சொன்னார். பின்னர், சாதாரண ஒரு ஆடை பிரான்சிசுக்குக் கொடுக்கப்பட்டது. அவர் அதை வாங்கி, அதில் சிலுவை அடையாளத்தை வரைந்து போர்த்திக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியை விமர்சித்த இத்தாலியக் கவிஞர் தாந்தே (Dante) கூறுவது போல, பிரான்சிசு "ஏழ்மை" என்னும் பெண்ணைத் தம் வாழ்க்கைத் துணையாக ஏற்று, தம் வாழ்வு முழுவதையும் கடவுளுக்கு அர்ப்பணித்துவிட்டார்.
அசிசியின் ஏழை மனிதர் பிரான்சிசு
[தொகு]கடவுள் பணிக்குத் தம்மை அர்ப்பணித்து, இயேசுவை முழுமையாகப் பின்பற்றத் துணிந்துவிட்ட பிரான்சிசு தம் நகராகிய அசிசியின் மலைப்பகுதிகளில் நடந்து, இறைவனின் புகழைப் பாடிச் சென்றார். ஒருநாள் வழிப்பறித் திருடர்கள் சிலர் அவரை நிறுத்தி, "நீ யார்?" என்று கேட்டதற்கு பிரான்சிசு பதில்மொழியாக, "நான் மாபெரும் அரசரின் தூதுவன்" என்றுரைத்தார். அவர்கள் அவரை இகழ்ச்சியோடு நோக்கி, அவரிடமிருந்ததைப் பிடுங்கிக்கொண்டு, அவரை அருகிலிருந்த குழியில் தள்ளிவிட்டுச் சென்றனர். அரைநிர்வாணமாகக் குளிரில் வாடிய பிரான்சிசு அண்மையிலிருந்த ஒரு துறவியர் இல்லத்தை அடைந்து, அங்கு கொஞ்சநாள் அடுக்களை வேலை செய்தார். அங்கிருந்து கூபியோ (Gubbio) என்னும் ஊருக்குச் சென்றார். அவருடைய நண்பர்கள் சிலர் அவர்மீது இரங்கி, அவருக்கு ஒரு மேலாடை, கச்சை, ஊன்றுகோல் ஆகியவற்றைக் கொடுத்தனர்.
பின்னர் பிரான்சிசு அசிசி நகருக்குத் திரும்பினார். தெருவெல்லாம் நடந்துசென்று, மக்களிடம் புனித தமியானோ கோவிலைச் செப்பனிடுவதற்குக் கற்கள் தருமாறு வேண்டினார். கிடைத்த கற்களைச் சுமந்து, கோவிலுக்குக் கொண்டுபோய், தம் கைகளாலேயே அதைச் செப்பனிட்டார். அதுபோலவே, கைவிடப்பட்ட நிலையில் கிடந்த வேறு இரண்டு கோவில்களையும் அவர் செப்பனிட்டார். அவை புனித பேதுரு கோவிலும், வானதூதர்களின் அன்னை மரியா (Saint Mary of the Angels) கோவிலும் ஆகும். மரியா கோவிலுக்குப் "போர்சியுங்குலா" (Portiuncula = "சிறுநிலம்") என்னும் பெயரும் உண்டு.
அக்காலத்தில் பிரான்சிசு பிறரன்புப் பணியிலும், குறிப்பாகத் தொழுநோயாளருக்குப் பணிபுரிவதிலும் ஈடுபட்டார். வானதூதர்களின் அன்னை மரியா கோவிலின் அருகே ஒரு சிறு குடிசை அமைத்து அதில் தங்கினார்.[6].
பிரான்சிசு இயேசுவின் சீடராகும் அழைத்தலை ஏற்றல்
[தொகு]1208ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் நாள் புனித மத்தியா திருநாள். அன்று பிரான்சிசு வானதூதர்களின் அன்னை மரியா கோவிலில் திருப்பலியில் பங்கேற்றுக்கொண்டிருந்தபோது வாசிக்கப்பட்ட நற்செய்தி மத்தேயு 10:7-10:
“ | இயேசு பன்னிரு திருத்தூதர்களையும் அனுப்பியபோது கூறியது: 'விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது' எனப் பறைசாற்றுங்கள்...பொன், வெள்ளி, செப்புக் காசு எதையும் உங்கள் இடைக் கச்சைகளில் வைத்துக் கொள்ள வேண்டாம். பயணத்திற்காகப் பையோ, இரண்டு அங்கிகளோ, மிதியடிகளோ, கைத்தடியோ எடுத்துக்கொண்டு போக வேண்டாம்... | ” |
இச்சொற்கள் பிரான்சிசின் உள்ளத்தில் வாள்போல் ஊடுருவின. இயேசு கூறும் சொற்கள் தமக்கே கூறப்பட்டன என்று பிரான்சிசு புரிந்துகொண்டார். உடனே அவர் அக்காலக் குடியானவர்களின் சாதாரண உடையே தனக்கும் உடையாகும் என்று தேர்ந்தெடுத்து அணிந்திருந்த தம் அங்கியின்மேல் இடுப்பில் கட்டியிருந்த தோற்கச்சையைக் களைந்துவிட்டு ஒரு சாதாரண நூற்கச்சையைக் கட்டிக்கொண்டார். மிதியடிகளைக் களைந்தார். கைத்தடியையும் கைவிட்டார். பின்னர் தம் முதுகுப்புறம் அங்கியில் சுண்ணாம்பு கொண்டு ஒரு சிலுவை அடையாளம் வரைந்துகொண்டார். இயேசுவின் சிலுவையே தமக்குப் பாதுகாப்பு என்று காட்டவும், இயேசுவின் "போர்வீரனாக" தம்மை அர்ப்பணிக்கவும் இவ்வாறு செய்தார்.
இயேசுவின் சீடர்களைப் போலத் தாமும் "நடமாடும் போதகராக", கடவுளின் பராமரிப்பில் நம்பிக்கை கொண்டு நற்செய்திப் பணிபுரிய வேண்டும் என்று உறுதிகொண்டார். தெருத்தெருவாகச் சென்று, மக்கள் போர் செய்வதைத் தவிர்த்து அமைதியாகவும் ஒருவர் ஒருவர்மீது அன்புடையவர்களாக வாழ வேண்டும் என்று போதித்தார். தவறான வழிகளைவிட்டு மனமாற்றம் அடைய வேண்டும் என்று வேண்டினார்.
முன்னால் பிரான்சிசை வெறுப்போடு பார்த்தவர்கள் இப்போது அவரது வாழ்க்கைப் பாணியைக் கண்டு வியப்படைந்தார்கள். ஒரு சிலர் அவரைப் போல எளிய வாழ்க்கை நடத்த முன்வந்தார்கள். அசிசியில் பெரும் செல்வராய் இருந்த பெர்னார்து (Bernard of Quintavalle) என்பவர் பிரான்சிசைப் பின்தொடர்ந்த முதல் "சீடர்" ஆவார். அதன் பிறகு கத்தானெயோ பேதுரு (Peter of Cattaneo) என்பவர் வந்தார்.
அனைத்தையும் துறந்துவிட வேண்டும் என்று இயேசு கூறிய சொற்களை எழுத்துக்கு எழுத்து கடைப்பிடிக்க முன்வந்தார் பிரான்சிசு. தம் தோழர்களைப் பார்த்து, "இதுவே நாம் பின்பற்ற வேண்டிய கட்டளை" என்றார். அவர்களும் தங்கள் சொத்துக்களை விற்று, கிடைத்த பணத்தை ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுத்தார்கள்.
படிப்படியாகப் பதினொரு "சீடர்கள்" பிரான்சிசோடு சேர்ந்தார்கள். அவரும் தம் சிறு குழுவுக்கு ஒரு ஒழுங்கமைப்பு உருவாக்கினார். அது நற்செய்தி நூல்களில் இயேசு கூறிய போதனைச் சுருக்கமே.[1]. இயேசுவின் போதனைகளைக் கடைப்பிடித்து, அவரைப் பின்பற்றுதலே அடிப்படையான தேவை என்று பிரான்சிசு தம் தோழருக்கு அறிவுறுத்தினார்.
பிரான்சிசு திருத்தந்தை மூன்றாம் இன்னசெண்டை சந்தித்தல்
[தொகு]பிரான்சிசும் தோழர்களும் தெருத்தெருவாகச் சென்று இயேசுவின் போதனையைச் சாதாரண மக்களுக்கு அறிவித்தது அக்கால வழக்கத்துக்கு மாறாகவே இருந்தது[7]. தம் சிறு குழுவுக்குப் பிரான்சிசு "அசிசி தவசிகள்" (Penitents of Assisi) என்று பெயர் கொடுத்தார். திருச்சபையோடு இணைந்து பணிசெய்ய வேண்டும் என்பதில் பிரான்சிசு கருத்தாயிருந்தார்.
எனவே, 1208 வசந்த காலத்தில் பிரான்சிசு தம் குழுவினரை அழைத்துக்கொண்டு உரோமை நகருக்குப் புறப்பட்டார். அங்கு திருத்தந்தை மூன்றாம் இன்னசெண்டை சந்தித்து, தாம் தொடங்கிய குழுவுக்கும், தமது பணிக்கும் திருத்தந்தை அங்கீகாரம் நல்க வேண்டும் என்று கேட்பதற்காக அவர் சென்றார்.
இயேசு பிறந்து, வளர்ந்து, இறந்த நிலப்பகுதிகளை (திருநாடு) மீட்டெடுப்பதற்காக 1202-1204 ஆண்டுகளில் நான்காம் சிலுவைப் போர் நடந்திருந்தது. அது கிறித்தவர்களுக்குத் தோல்வியில் முடிந்தது. திருச்சபையில் சீர்திருத்தம் கொணர்வதற்காகத் திருத்தந்தை மூன்றாம் இன்னசெண்ட் ஒரு பொதுச்சங்கத்தைக் கூட்ட முடிவுசெய்தார். அச்சங்கம் இலாத்தரன் அரண்மனையில் 1215இல் கூடியது.
இப்பின்னணியில்தான் பிரான்சிசு திருத்தந்தையைச் சந்தித்தார். அச்சந்திப்பு குறித்து பிரான்சிசின் வரலாற்றாளர்கள் சற்றே மாறுபட்ட தகவல்களைத் தருகின்றனர். உறுதியாகத் தெரிகின்ற தகவல்கள் இவை: திருத்தந்தை மூன்றாம் இன்னசெண்ட் நடுக்காலத்தில் திருச்சபை உயர்ந்த நிலை அடைய வழிவகுத்தார். அதிகாரம் பெரும்பாலும் திருத்தந்தையை மையமாகக் கொண்டு அமைந்தது. இவரே முதன்முறையாக "கிறிஸ்துவின் பதிலாள்" (Vicar of Christ) என்னும் அடைமொழியைத் திருத்தந்தைக்கு உரியதாகக் கொண்டார்.
எளிய உடை உடுத்திக்கொண்டு திருத்தந்தையின் இலாத்தரன் அரண்மனைக்குச் சென்ற பிரான்சிசையும் தோழர்களையும் சந்திக்க திருத்தந்தை இன்னசெண்ட் மறுத்துவிட்டார் என்றும், இரவில் அவர் கண்ட கனவுக்குப் பின் அவர்களைச் சந்தித்தார் என்றும் ஒரு மரபு உள்ளது. கனவில் இலாத்தரன் பெருங்கோவில் இடிந்துவிழுவதுபோல் தோன்றியதாம். அது கீழே விழுந்துவிடாமல் ஓர் ஏழை மனிதர் தோள்கொடுத்து அதைத் தாங்கிக்கொண்டாராம். விழித்தெழுந்த திருத்தந்தை கனவின் பொருள் யாதென உணர்ந்தார். அதாவது, திருச்சபை அழிந்து போகாமல் காப்பதற்காகக் கடவுள் பிரான்சிசு என்னும் ஏழை மனிதரைத் தேர்ந்தெடுத்துள்ளார். அவரையும் அவர் தொடங்கிய இயக்கத்தையும் தடுப்பது சரியல்ல என்னும் உணர்வு திருத்தந்தையின் உள்ளத்தில் எழத்தொடங்கியது.
திருத்தந்தையின் ஆலோசகர்களாக இருந்த சில கர்தினால்கள் பிரான்சிசின் இயக்கத்தை முளையிலேயே கிள்ளிவிட வேண்டும் என்று கருதினார்கள். பிரான்சு நாட்டின் தென்பகுதியில் லியோன் நகரில் இவ்வாறே ஏழ்மையை வலியுறுத்திப் பீட்டர் வால்டோ (Peter Waldo)[8] உருவாக்கிய வால்டேன்சியர் இயக்கம்[9] திருச்சபையின் அதிகாரத்தை மதிக்காமல், விவிலியத்தைத் தம் சொந்த விருப்புவெறுப்புகளுக்கு ஏற்ப விளக்கியுரைத்து, குருக்களின் அனுமதியின்றி தெருத்தெருவாகப் போதிக்கச் சென்று திருச்சபையில் குழப்பம் ஏற்படுத்தியதையும் பின்னர் திருச்சபையிலிருந்து பிரிந்துசென்றதையும் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.
ஆனால், பிரான்சிசு அத்தகைய குழப்பக்காரர் அல்லவென்றும், திருச்சபையின் ஒழுங்குமுறைகளை மதித்துச் செயல்படுவரே என்றும் பிரான்சிசின் ஆயர் குயிதோ எடுத்துக்கூறினார். அவரது நண்பர் புனித பவுலின் யோவான் (John of St. Paul) எனனும் கர்தினால் பிரான்சிசுக்காகப் பரிந்து பேசினார். ஏழ்மையைத் தழுவிய வாழ்வையே இயேசு கடைப்பிடித்தார்; அந்த வாழ்க்கைமுறையை ஏற்று, மக்கள் மனமாற்றம் அடைய வேண்டும் என்று போதிக்கவே பிரான்சிசும் அவர்தம் குழுவினரும் விரும்புகிறார்கள்; இதைத் தடைசெய்வது நற்செய்தியின் போதனைக்கு எதிராகப் போவதாகும் என்று அவர் திருத்தந்தைக்கு நினைவூட்டினார். இறுதியில் திருத்தந்தை மூன்றாம் இன்னசெண்ட் பிரான்சிசு சமர்ப்பித்த ஒழுங்குமுறையை ஏற்பதாக வாக்களித்து, பிரான்சிசும் அவர்தம் குழுவினரும் மக்களிடையே சென்று கிறிஸ்துவைப் பற்றிப் போதிக்க அனுமதி வழங்கினார். அவர்கள் திருப்பணி ஆற்றுவதற்குத் தொடக்கமாக முடிமழிப்பு (tonsure) பட்டம் பெற்றனர். அத்தருணத்தில் பிரான்சிசுக்குத் திருத்தொண்டர் (deacon) பட்டம் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.
சபையின் தோற்றம்
[தொகு]பிரான்சிசும் தோழர்களும் அசிசிக்குத் திரும்பினார்கள். பிரான்சிசு தம் குழுவுக்கு "சிறிய சகோதரர்கள்" (Friars Minor) என்று பெயர் கொடுத்தார். இப்பெயரை அவர் தெரிந்துகொண்டதற்கு இரு வகையான விளக்கங்கள் உள்ளன. முதல் விளக்கத்தின்படி, அக்காலத்தில் நிலவிய வகுப்பு வேறுபாட்டின் காரணமாகச் சமூகத்தில் "பெரியோர்" (Major), "சிறியோர்" (Minor) என்னும் பாகுபாடு இருந்தது. மேல்மட்டத்தைச் சார்ந்தவர்கள் பிரபுக்களும் நிலவுடைமையாளர்களும் ஆட்சியாளர்களும்; கீழ்மட்டத்தைச் சார்ந்தவர்கள் குடியானவர்கள், கூலிவேலை செய்தோர் போன்றவர்கள்.
இத்தகைய வேறுபாடு நிலவிய சமூகத்தில் பிரான்சிசு தம் குழுவினர் "சிறியோர்" பிரிவைப் போலத் தாழ்நிலையில் உள்ளவர்கள் என்பதற்காக "சிறிய சகோதரர்கள்" என்னும் பெயரைத் தெரிந்திருக்கலாம்.
மற்றொரு விளக்கப்படி, நற்செய்தியில் இயேசு "சிறிய சகோதரர்கள்" பற்றிக் கூறுவதின் அடிப்படையில் பிரான்சிசு தம் குழுவுக்குப் பெயரிட்டார். மத்தேயு 25:40-45 பகுதியில் உலக முடிவில் கடவுள் மனிதரைத் தீர்ப்பிடும்போது அவர்கள் "மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுக்கு" எதைச் செய்தார்களோ அதைத் தமக்கே செய்ததாக மானிட மகன் கூறுவார் என்னும் கூற்றின் பின்னணியில் பிரான்சிசு தம் குழுவை "சிறிய சகோதரர்கள்" என்று அழைத்தார்.
உலகத்தில் துன்பத்தில் உழல்கின்ற எந்த மனிதரும் கடவுளின் சாயலாக இருப்பதால் அவர்களுக்கு நாம் உதவி செய்யும்போது அவர்களில் கடவுளையே காண வேண்டும் என்பது பிரான்சிசின் உறுதிப்பாடு. எனவே தமது குழுவினர் இந்த உணர்வுடையோராய் வாழ்ந்திட வேண்டும் என்பதை அவர்களுக்கு நினைவூட்டவும், அவர்கள் ஏழைகள் மட்டில் கரிசனையுடையோராய் வாழ வேண்டும், தாழ்ச்சியைப் பிரதிபலிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவும் "சிறிய சகோதரர்" என்னும் பெயரால் பிரான்சிசு தம் குழுவை அழைத்தார்.
பிரான்சிசின் முதல் துறவற இல்லம்
[தொகு]அசிசிக்குத் திரும்பிய பிரான்சிசும் அவரது குழுவும் பாழடைந்த ஒரு குடிசையில் குடியேறினார்கள். ஆனால் அப்பகுதியில் வாழ்ந்த ஒரு வேளாண்மைத் தொழிலாளர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் அங்கிருந்து இடம்பெயர்ந்தார்கள். 1211இல் அசிசிக்கு அருகே சுபாசியோ மலைப் பகுதியில் புனித பெனடிக்டு சபைத் துறவியர் "சிறுநிலம்" ("Portiuncula") என்று அழைக்கப்பட்ட "வானதூதர்களின் அன்னை மரியா" சிற்றாலயத்தை பிரான்சிசுக்குக் கொடுத்தார்கள். அச்சிறு கோவிலின் அருகே, களிமண், வைக்கோல், கம்புகள் ஆகியவற்றைக் கொண்டு சில குடிசைகளைக் கட்டி பிரான்சிசும் குழுவினரும் வாழ்ந்தார்கள். இவ்வாறு பிரான்சிஸ்கன் சபையின் தாய் இல்லம் உருவாயிற்று. அங்கிருந்து "சிறிய சகோதரர்கள்" இருவர் இருவராகப் புறப்பட்டுச் சென்று, மக்களுக்கு நற்செய்தி அறிவித்து, அவர்கள் மனமாற்றம் அடைந்து, அறவாழ்வு நடத்த வேண்டும் என்று போதித்தார்கள்.
தெருக்களில் சென்றபோது சிறிய சகோதரர்கள் மகிழ்ச்சியோடு கடவுளின் புகழைப் பாடிப் பரவினார்கள். பரந்து விரிந்த உலகம் அவர்களது துறவற இல்லமாக மாறியது. வைக்கோல் போர் வைக்கப்பட்ட களங்கள், குகைகள், கோவில் படி என்று பாராமல் கிடைத்த இடத்தில் இரவைக் கழித்தார்கள். வயல்களில் வேலைசெய்து அன்றாட உணவைப் பெற்றார்கள். சில சமயங்களில் மக்களிடம் பிச்சை கேட்டுப் பிழைப்பு நடத்தினார்கள்.
சிறிய சகோதரர்களின் ஆர்வத்தைக் கண்ட பலர் அவர்களுடைய வாழ்க்கை முறையால் ஈர்க்கப்பட்டார்கள். அவ்வாறு பிரான்சிசோடு சேர்ந்த "மூன்று தோழர்கள்" பின்னர் அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதினார்கள். தங்கிரேடி ஆஞ்சலோ என்னும் போர்வீரர், பிரான்சிசுக்கு செயலராகவும் ஆன்ம குருவாகவும் மாறிய லியோ, மற்றும் ருஃபீனோ ஆகிய மூவரோடு, ஜூனிப்பர் என்பவரும் பிரான்சிசின் குழுவில் சேர்ந்தனர்.[10]
பிரான்சிஸ்கன் பெண்கள் சபை
[தொகு]1212ஆம் ஆண்டு, தவக்காலத்தின்போது பிரான்சிசின் சபையில் சேரும் எண்ணத்தோடு ஒரு இளம்பெண் அவரை அணுகினார். அதுவரை பிரான்சிசு ஆண்களை மட்டுமே சபை உறுப்பினராகச் சேர்த்திருந்தார். ஆனால் அவரைத் தேடி செல்வம் படைத்த உயர்குடும்பத்தைச் சேர்ந்த 18 வயது நிரம்பிய கிளாரா என்னும் இளம்பெண் வந்து, துறவறம் புக விரும்பியதால், பிரான்சிசு அவருக்கு அறிவுரை கூறி அனுப்பினார். குருத்து ஞாயிறு மாலையில் (1211, மார்ச்சு 28) கிளாரா வேறு இரு பெண்களோடு பிரான்சிசு குழுவினர் தங்கியிருந்த "சிறுநிலம்" சென்றார். அங்கே பிரான்சிசு குழுவினர் பவனியாகச் சென்று அவர்களைச் சந்தித்து வரவேற்றனர்.
பிரான்சிசு கிளாராவுக்கு முடிமழித்தல் செய்து, தவத்தின் அடையாளமான உடை அணிவித்து, அடைப்பிடம் (cloister) சார்ந்த ஏழ்மை வாழ்வுக்குப் புகுவித்தார்.[10]
பெனடிக்டு சபைக் கன்னியரோடு கொஞ்ச நாட்கள் தங்கியிருந்தபின், கிளாரா தம் உடன்பிறந்த சகோதரி ஆக்னெஸ் மற்றும் பிற பெண்களோடு புனித தமியானோ கோவிலின் அருகே பிரான்சிசு தம் கைகளாலேயே கட்டிய சிற்றாலயத்தின் அருகே குடியேறினர்.[7] பிரான்சிசின் ஆன்மிகப் பிள்ளைகளாக வந்துசேர்ந்த அப்பெண்களின் முதல் துறவற இல்லம் அதுவாயிற்று. இவ்வாறு, பிரான்சிஸ்கன் இரண்டாம் சபை தோன்றலாயிற்று.
அச்சபையை அசிசி நகர் கிளாரா, பிரான்சிசின் துணையோடு தொடங்கினார் எனலாம். "ஏழைப் பெண்கள் சபை" (Order of Poor Ladies) என்று முதலில் அழைக்கப்பட்ட அச்சபை பின்னர் "புனித தமியானோ சபை" என்றும், கிளாராவின் இறப்புக்குப் பின், அவர் புனிதராக அறிவிக்கப்பட்ட பிறகு "ஏழை கிளாரா சகோதரிகள் சபை" (Order of Poor Clares) என்றும் பெயர்பெற்றது.
கிறித்தவத்தைப் பரப்பப் பிரான்சிசு மேற்கொண்ட பயணங்கள்
[தொகு]பிரான்சிசு பெற்ற இறையழைத்தலில் இரு முக்கிய கூறுகள் அடங்கியிருந்தன. முதல் கூறு "ஏழ்மை". இரண்டாவது கூறு "நற்செய்தி அறிவித்தல்." குடும்பத்தையும் உடைமைகளையும் துறந்த பிரான்சிசு இயேசு அறிவித்த நற்செய்தியைத் தாமும் பிறருக்கு அறிவிக்க வேண்டும் என்பதில் கருத்தாயிருந்தார். அதே வேளையில் கிறிஸ்துவுக்காகத் தம் உயிரையே பலியாக்கவும் அவர் முன்வந்தார்.
இச்சிந்தனைகளோடு பிரான்சிசு 1212-இல் இலையுதிர் காலத்தில் சிரியா பகுதிக்குப் புறப்பட்டுச் சென்று, அங்கு இசுலாம் சமயத்தைத் தழுவியிருந்த சாரசீனியர்[11] நடுவே கிறித்தவ மதத்தைப் பரப்ப முனைந்தார். ஆனால், சுலோவேனியா கடற்கரையில் அவர் பயணம் செய்த கப்பல் சேதமுற்றதால் அவரால் பயணத்தைத் தொடரமுடியாமல் இத்தாலியின் அங்கோணா நகரத்திற்குத் திரும்பினார். நடு இத்தாலியில் கிறித்தவ நற்செய்தியைப் போதித்தார்.
1214-இல் பிரான்சிசு மீண்டும் ஒருமுறை நற்செய்திப் பயணம் மேற்கொண்டார். ஆப்பிரிக்காவின் வடகரையில் அமைந்துள்ள மொரோக்கோ நாட்டுக்குச் சென்று அங்கு இசுலாமியரிடையே கிறித்தவத்தைப் பரப்ப வேண்டும் என்னும் ஆர்வத்தில் பிரான்சிசு முதலில் எசுப்பானியா போய்ச் சேர்ந்தார். அங்கு கடின நோய்வாய்ப்பட்டதால் மொரோக்கோவுக்குப் பயணத்தைத் தொடர முடியவில்லை.
இத்தாலிக்குத் திரும்பியபின் பிரான்சிசு நிறுவிய துறவறக் குழுவில் மேலும் பலர் சேர்ந்தனர். அவர்களுள் தலைசிறந்த ஒருவர் செலானோ தோமா (Thomas of Celano) என்பர் ஆவார். இவரே முதன்முதலாகப் பிரான்சிசின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்.
கிபி 1215இல் திருத்தந்தை மூன்றாம் இன்னசெண்ட் நான்காம் இலாத்தரன் பொதுச்சங்கத்தைக் கூட்டினார். அச்சங்கத்தில் பிரான்சிசு கலந்திருக்கலாம் என்றொரு கருத்து உள்ளது. ஆயினும் அதுபற்றி உறுதியான தகவல் இல்லை.
1216, சூலை மாதம் திருத்தந்தை மூன்றாம் இன்னசெண்ட் பெரூஜியா நகரில் காலமானார். அப்போது பிரான்சிசு உடனிருந்தார்.
பிரான்சிசு குழுவினர் ஆற்றிய நற்செய்திப் பணி
[தொகு]அசிசி நகரில் அமைந்த "சிறுநிலம்" (Portiuncula) பகுதியில் பிரான்சிஸ்கு சபையின் முதல் பொது மன்றம் 1217 மே மாதம் நிகழ்ந்தது. சபையினர் பணியாற்ற வேண்டிய மாநிலங்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டன. டஸ்கனி, லொம்பார்டி, ப்ரோவென்சு, எசுப்பானியா, செருமனி ஆகிய ஐந்து மாநிலங்களில் பிரான்சிசின் ஐந்து தோழர்கள் நற்செய்திப் பணி ஆற்றச் செல்வதாகத் தீர்மானிக்கப்பட்டது. பிரான்சிசு அப்பணியைப் பிரான்சு நாட்டில் புரிய எண்ணம் கொண்டு பயணம் ஆனார். ஆனால் புளோரன்சு நகரில் அவர்தம் நண்பரும் சபைப் புரவலராகச் செயல்பட்டவருமான கர்தினால் ஊகோலீனோ (Cardinal Ugolino) பிரான்சிசு பிரான்சு நாடு செல்வதற்குப் பதிலாக இத்தாலியிலேயே பணிபுரியக் கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையில் பிரான்சிஸ்கு சபை நற்செய்தி அறிவித்த முறைபற்றி விமர்சனங்கள் எழுந்தன. தான் பின்பற்றிய முறை இயேசுவின் அணுகுமுறையே என்று விளக்கிச் சொல்வதற்காகப் பிரான்சிசு உரோமை சென்று திருத்தந்தையையும் கர்தினால்களையும் 1217-1218இல் சந்தித்தார். அப்போது பிரான்சிஸ்கன் சபை போலவே நற்செய்திப் பணியில் ஈடுபட்ட மற்றொரு சபையை நிறுவியிருந்த சாமிநாதர் என்ற டோமினிக்[12] என்பவரைப் பிரான்சிசு சந்தித்தார்.
1218இல் பிரான்சிசு இத்தாலியின் பல பகுதிகளில் நற்செய்தியைப் போதித்தார். பொது இடங்களிலும் கோவில் வெளிகளிலும், கோட்டை முற்றங்களிலும் அவர் போதித்தார். மக்கள் அவருடைய முன்மாதிரியால் கவர்ந்து இழுக்கப்பட்டனர். மக்கள் பேசிய வட்டார மொழியிலேயே பிரான்சிசு போதித்ததால் சாதரண மக்களும் அவர் கூறியதை ஆர்வத்தோடு கேட்டார்கள். அவர் சென்ற இடங்களில் கோவில் மணிகள் ஒலித்தன; குருக்களும் மக்களும் பவனியாகச் சென்று, பாட்டிசைத்து அவரை வரவேற்றனர்; நோயாளர்களை அவர்முன் கொண்டுவந்து அவர்களுக்காக இறைவேண்டல் செய்யுமாறு மக்கள் கேட்டனர்; அவர்தம் காலடி பட்ட இடத்தை முத்திசெய்தனர்; அவரது மேலாடையிலிருந்து சிறு துண்டுகளை வெட்டி எடுக்க முயன்றவர்களும் உண்டு.
பிரான்சிசு நீண்ட உரைகள் ஆற்றவில்லை. மாறாக, இயேசுவின் நற்செய்தியை உருக்கமாக, மக்களின் இதயத்தைத் தொடும் வகையில், எளிய சொற்களைக் கொண்டு அறிவித்தார். அவர் சென்ற கமாரா என்னும் கிராமத்து மக்கள் அனைவரும், அவருடைய போதனையைக் கேட்டபின், அவரை அணுகி, தங்களை ஒரு குழுவாகப் பிரான்சிஸ்கன் சபையில் சேர்க்குமாறு வேண்டினர்.
பிரான்சிஸ்கு மூன்றாம் சபை உருவாதல்
[தொகு]பிரான்சிஸ்கன் சபையில் ஆண்துறவிகளாகவோ, கிளாரா தொடங்கிய பெண்துறவியர் சபையில் உறுப்பினராகவோ சேராமல், குடும்ப உறவுகளைத் தக்கவைத்துக்கொண்டு, அதே நேரத்தில் நற்செய்திக்கு ஏற்ற வாழ்க்கைமுறையைப் பின்பற்ற விரும்பிய பொதுநிலையினருக்காகப் பிரான்சிசு ஒரு சபையை உருவாக்கினார். அதுவே பிரான்சிஸ்கன் மூன்றாம் சபை என்பதாகும்[13].
அக்குழுவில் சேர விரும்பியவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகளையும் பிரான்சிசு வகுத்துக் கொடுத்தார். அவ்வொழுங்குகளின்படி, போர் ஆயுதங்கள் தாங்குவதும், நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பதும் தடைசெய்யப்பட்டது.
இச்சபையை பிரான்சிசு 1221இல் உருவாக்கினார்.
பிரான்சிசு எகிப்து சுல்தானைச் சந்தித்தல்
[தொகு]பிரான்சிசின் வாழ்க்கையில் நடந்த ஒரு முக்கிய நிகழ்ச்சி அவர் 1219ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தில் எகிப்து நாட்டு சுல்தான் அல்-கமில் என்பவரைப் போர்க்களத்தில் சந்தித்து, அவரிடம் போர் செய்வதைக் கைவிட்டு அமைதிக்காகப் பரிந்து பேசியது ஆகும்.
இசுலாம் சமயத்தைத் தழுவியிருந்த சாரசீனியரோடு[11] போரிட்டு, அவர்களின் கட்டுப்பாட்டிலிருந்த திருநாட்டை மீட்டெடுக்க கிறித்தவர்கள் ஐந்தாம் சிலுவைப் போரைத் தொடங்க திருத்தந்தை மூன்றாம் இன்னசெண்ட் தலைமையில் கூடிய நான்காம் இலாத்தரன் பொதுச்சங்கம் தீர்மானித்தது.[14]
சிலுவைப் போரில் பங்கேற்க பிரான்சிசு பதினொரு தோழர்களோடு புறப்பட்டார். அவர்களுள் சகோதரர் இல்லுமினாட்டோ, மற்றும் பீட்டர் கத்தானெயோ என்பவரும் அடங்குவர். அவர்கள் இத்தாலியின் அங்கோணா துறைமுகத்திலிருந்து புறப்பட்டனர். எகிப்தில் நைல் கரையில் அமைந்த டாமியேட்டா (Damietta) என்னும் நகர் முற்றுகையிடப்பட்டுக் கைப்பற்றப்பட்டபோது பிரான்சிசும் இருந்தார். அங்கே கூடியிருந்த கிறித்தவ வீரர்களுக்குப் போதித்துவிட்டு, பிரான்சிசு எதிரியின் பாசறைக்குள் நுழைந்தார். அங்கே அவரைக் கைதியாகப் பிடித்து, சுல்தான் முன்னிலையில் கொண்டு நிறுத்தினார்கள்.
சுல்தான் அல்-கமில் பிரான்சிசை நன்மனதோடு வரவேற்றார். பிரான்சிசு சுல்தானுக்குக் கிறித்தவ மதம்பற்றி எடுத்துக் கூறினார். சுல்தானும் கிறித்தவக் கைதிகளைக் கொடுமைப்படுத்தப் போவதில்லை என்று உறுதிகூறினார். சுல்தான் பிரான்சிசுக்கு பரிசுகள் பல கொடுத்தார் என்றும், பிரான்சிசு மக்களைத் தொழுகைக்கு அழைக்கின்ற கொம்பு தவிர வேறொரு பரிசையும் ஏற்கவில்லை என்றும் சிலுவைப் போர் வீரர்களோடு இருந்த ழாக் தெ விட்ரி (Jacques de Vitry) என்பவர் சான்று கூறியுள்ளார்.
பிரான்சிசு தாம் நிறுவிய சபையின் பொறுப்பைத் துறத்தல்
[தொகு]சிலுவைப் போருக்குச் சென்ற பிரான்சிசு பாலஸ்தீனம் சென்று, அங்கே பிரான்சிஸ்கு சபைத் துறவியரின் இல்லம் ஒன்றை நிறுவ அனுமதி பெற்றார் என்று தெரிகிறது. இன்றுவரை பிரான்சிஸ்கு சபைத் துறவிகள் பாலஸ்தீனத்தில் இயேசுவின் வாழ்வோடு தொடர்புடைய திருநாட்டைச் சார்ந்த புனித இடங்களின் காவலர்களாகப் பணிபுரிகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.[15]
பிரான்சிசு எகிப்துக்குப் போயிருந்த காலத்தில் அவர் தொடங்கியிருந்த சபையில் பல சிக்கல்கள் எழுந்தன. அவர் பெயரால் சபையை நிர்வகித்தவர்கள் சபை உறுப்பினர் கடைப்பிடிக்க வேண்டிய ஏழ்மை வாழ்க்கையை மேலும் கடினமாக்க முயன்றனர். புனித கிளாரா சகோதரிகள் புனித பெனடிக்டின் ஒழுங்கு போன்ற வாழ்க்கைமுறையைத் தழுவ வேண்டும் என்ற கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டனர். தொழுநோயாளர்களை ஒன்றுசேர்த்து அவர்களுக்கென்று ஒரு தனிப் பிரிவைத் தொடங்க கப்பேல்லா யோவான் (John of Capella) முயன்றார். சிலுவைப் போருக்குப் போன பிரான்சிசு இறந்துபோனார் என்னும் வதந்தியைச் சிலர் பரப்பலாயினர்.
இப்பின்னணியில் பிரான்சிசும் சகோதரர் எலியாவும் வெனிசுத் துறைமுகத்தில் வந்திறங்கிய செய்தி கேட்டுப் பலரும் அதிர்ச்சியுற்றனர். தாம் இல்லாதபோது சபைக்கு நிகழ்ந்தவற்றை அறிந்த பிரான்சிசு கவலையடைந்தார். இதற்கிடையில் சபை உறுப்பினரின் எண்ணிக்கையும் வளர்ந்து கொண்டே சென்றது. தொடக்க நாள்களில் பிரான்சிசும் தோழரும் தழுவிய ஏழ்மை வாழ்வை அதே பாணியில் கடைப்பிடிப்பது நிர்வாக முறையில் கடினமானது. சபையின் நிர்வாகப் பொறுப்பில் உதவுவதற்காக நியமிக்கப்பட்ட கர்தினால் ஊகோலீனோ சில சீர்திருத்தங்களைக் கொணர விரும்பினார். இவர் இறுதிவரை பிரான்சிசுக்கு உற்ற துணையாகவும் நண்பராகவும் இருந்தார். பிற்காலத்தில் திருத்தந்தை ஒன்பதாம் கிரகோரி என்னும் பெயரில் திருச்சபையை ஆட்சி செய்த அவரே பிரான்சிசின் இறப்புக்குப் பிறகு அவரைப் புனிதர் நிலைக்கு உயர்த்தினார்.
சபையின் நிர்வாகப் பொறுப்பு அதிகரித்துக்கொண்டே போன நிலையில் பிரான்சிசு சபையின் பொதுத் தலைவர் பொறுப்பைத் துறந்தார்.[7] புதிதாகத் தலைமைப் பொறுப்பேற்ற பீட்டர் கத்தானெயோ ஓராண்டுக்குள் இறந்துவிடவே, 1221இல் சகோதரர் எலியா தலைவரானார். அவரே பிரான்சிசின் இறப்பு வரை பொறுப்பிலிருந்தவர்.
பிரான்சிசு கிறிஸ்து பிறப்பைப் புதுமுறையில் கொண்டாடுதல்
[தொகு]சபையின் தலைமைப் பொறுப்பைத் துறந்தபின்னர் பிரான்சிசு இத்தாலி முழுவதும் சென்று போதிக்கலானார். சபை ஒழுங்குகளையும் திருச்சபை அங்கீகாரத்துக்கு சமர்ப்பித்தார்.
1223ஆம் ஆண்டு கிறிஸ்து பிறப்பு விழாவைப் புதிய முறையில் கொண்டாடத் தீர்மானித்தார் பிரான்சிசு. பாலஸ்தீனத்துக்குச் சென்ற பிரான்சிசு அங்கே இயேசு பிறந்த குகையைப் பெத்லகேமில் கண்டிருந்தார். இயேசு பிறந்த குகை, அங்கே மாட்டுத் தொழுவம், மாடு, கழுதை, வைக்கோல் போன்றவற்றைக் கொண்டு தத்ரூபமாக ஒரு காட்சியை உருவாக்கி, இயேசுவின் பிறப்பைச் சிறப்பிக்க அவர் எண்ணினார். எனவே, உரோமையிலிருந்து அசிசிக்குப் போகும் வழியில் உள்ள கிரேச்சியோ (Greccio) என்னும் மலைப்பகுதி ஊரில் ஒரு குகையைத் தேர்ந்தெடுத்து அதை வைக்கோலால் நிரப்பினார் பிரான்சிசு. அப்பகுதியில் பிரான்சிஸ்கு சபை சகோதரர்கள் தங்கிப் பணிபுரிய இடம் கொடுத்தவர் யோவான் வெல்லீட்டா என்னும் புரவலர். பிரான்சிசின் வேண்டுகோளுக்கு இணங்க வெல்லீட்டா அக்குகையில் ஒரு தொழுவத்தை உருவாக்கினார். ஒரு மாடும் கழுதையும் கொண்டுவரப்பட்டன.
செய்தியறிந்த ஊர் மக்கள் தீவட்டிகளை ஏந்தி, குகையில் வந்துகூடினர். நள்ளிரவில் அக்குகையில் கிறிஸ்து பிறப்பு விழாத் திருப்பலி கொண்டாடப்பட்டது. பிரான்சிசு இயேசு பிறப்பு பற்றிய நற்செய்தியை வாசித்து மறையுரை ஆற்றினார். மாட்டுத் தொழுவத்தில் தீவனத் தொட்டியில் கிடத்தப்பட்டிருந்த குழந்தை இயேசுவின் சொரூபத்தை எடுத்து அன்போடு முத்தி செய்தார். அப்போது அச்சொரூபம் உயிருள்ள ஒரு குழந்தைபோலத் தோன்றியதாம். மகிழ்ச்சியால் நிறைந்த பிரான்சிசு மெய்ம்மறந்து நின்றார் என்று அவர்தம் வரலாற்றாசிரியர் சகோதரர் செலானோ கூறுகிறார்.
கிறிஸ்து பிறப்பு விழாவைக் கொண்டாட இன்று உலகெங்கும் குடில் கட்டப்படும் வழக்கம் உள்ளது. இவ்வழக்கத்தைப் பரப்பியதில் பிரான்சிசு பெரும்பங்காற்றினார்.[16]
பிரான்சிசு தம் உடலில் ஐந்து காயங்கள் பெற்ற வரலாறு
[தொகு].
1224ஆம் ஆண்டு ஆகத்து மாதத் தொடக்கத்தில் பிரான்சிசு மற்றும் மூன்று சகோதரர்களோடு டைபர் ஆற்றுக்கும் ஆர்ணோ ஆற்றுக்கும் இடையிலான ஒரு மலைப்பகுதியில் லா வேர்னா (La Verna, இலத்தீனில் Alverna) என்னும் இடத்துக்குச் சென்றார். அங்கு புனித மிக்கேல் விழாவுக்கு (செப்டம்பர் 29) முன்னால் நாற்பது நாள்கள் நோன்பிருக்கும்படி அப்பயணத்தை மேற்கொண்டார்.
லா வேர்னாவில் தியானத்தில் ஈடுபட்டிருந்தபோது, செப்டம்பர் 14ஆம் நாள் அளவில் (திருச்சிலுவை உயர்த்தப்பட்ட திருநாள்) ஒரு காட்சி கண்டார். துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் உயிர்துறந்த இயேசுவின் கைகளும் கால்களும் ஆணிகளால் துளைக்கப்பட்டு, விலா ஈட்டியால் குத்திக் கிழிக்கப்பட்டதால் இயேசுவுக்கு ஐந்து காயங்கள் ஏற்பட்டிருந்தன. பிரான்சிசு சிலுவையில் உயிர்துறந்த இயேசுவை முழுமையாகப் பின்பற்றிச் செல்ல விரும்பினார். எனவே இயேசுவின் துன்பங்களில் தாமும் பங்கேற்க வேண்டும் என்று உளமார விரும்பி இறைவேண்டல் செய்தார். அவரது வேண்டுதல் கேட்கப்பட்டது[17]. அவரது உள்ளங்கைகளிலும், உள்ளங்கால்களிலும், விலாவிலும் இயேசுவின் காயங்கள் போன்ற காயங்கள் தோன்றின[4] என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர் .[18]
அப்போது பிரான்சிசின் கூடவே இருந்த சகோதரர் லியோ அந்நிகழ்ச்சி குறித்துத் தெளிவான, சுருக்கமான குறிப்பை விட்டுச் சென்றுள்ளார். அக்குறிப்பு எழுதப்பட்டுள்ள தோல் ஏட்டின் (parchment) பின்புறத்தில் பிரான்சிசு தம் கையால் எழுதிய ஆசி உள்ளது.[19] சகோதரர் லியோ எழுதிய குறிப்பு:
“ | ஆண்டவரின் கை பிரான்சிசின் மேல் வைக்கப்பட்டது. ஒரு வானதூதர் காட்சியில் தோன்றி பிரான்சிசிடம் பேசினார். அப்போது பிரான்சிசின் உடல்மீது இயேசுவின் திருக்காயங்களை வானதூதர் பதித்தார். அதன் பின் பிரான்சிசு இத்தோல் ஏட்டின் மறுபுறத்தில் இறைபுகழைத் தம் சொந்தக் கையால் எழுதினார். தம்மீது கடவுள் பொழிந்த எல்லா நன்மைகளுக்கும் அவர் ஆண்டவருக்கு நன்றி செலுத்தினார். | ” |
பிரான்சிசு பெற்ற இயேசுவின் ஐந்து காயங்கள்பற்றி அவருடைய வரலாற்றை எழுதியோர் பல தகவல்கள் தந்துள்ளனர்.[1][18] "Suddenly he saw a vision of a seraph, a six-winged angel on a cross. This angel gave him the gift of the five wounds of Christ."[18] உடலில் இயேசுவின் காயங்களைக் கண்கூடாகப் பெறுவதற்கு முன்னரே பிரான்சிசின் உள்ளத்தில் இயேசுவின் காயங்கள் கணகூடா விதத்தில் பதிந்துவிட்டிருந்தன.
விலாவில் இருந்த காயம் ஒரு ஈட்டியால் ஏற்பட்ட புண்போல இருந்தது. கைகளிலும் கால்களிலும் ஏற்பட்ட காயங்கள் கருப்பு நிறத்தில் தசையால் ஆன ஆணிகள்போல வெளியே புறப்பட்டாற்போல் பின்னோக்கி வளைந்து தோற்றமளித்தன. பிரான்சிசின் உடலில் இயேசுவின் காயங்கள் பதிந்தபின் அவர் பெரும் வேதனை அனுபவித்தார். ஏற்கெனவே நோன்பினாலும் உபவாசத்தினாலும் மெலிந்து தளர்ந்துபோய் இருந்த அவருடைய உடல் மேலதிகமாக வலிமை இழந்தது.
பிறருடைய வேதனையைக் கண்டு எப்போதும் இரக்கம் கொண்ட பிரான்சிசு தம் உடலை ஒறுப்பதில் ஒருபோதும் தயங்கவில்லை. "சகோதரன் கழுதை" (Brother Ass) என்றுதான் அவர் தம் உடலுக்குப் பெயர் வைத்திருந்தார். அந்தச் சகோதரனை அளவுக்கு அதிகமாகவே வருத்தி விட்டதற்காக அவர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். அவருடைய கண்பார்வையும் படிப்படியாக மங்கலாயிற்று.
பிரான்சிசு இயற்றிய "கதிரவன் கவிதை" (Canticle of the Sun)
[தொகு]உடலின் துன்பம் மிகுந்த வேளையில் பிரான்சிசு கடைசி முறையாகத் தமியானோ கோவில் அருகே குடியிருந்த கிளராவையும் பிற துறவற சகோதரிகளையும் சந்திக்கச் சென்றார். அங்கே 1225ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பிரான்சிசு அசிசியின் புனித தமியானோ கோவில் அருகே ஒரு குடிசையில் தங்கியிருந்தபோது "கதிரவன் கவிதை" என்றும் "படைப்புகளின் கவிதை" (Canticle of the Creatures) என்றும் அழைக்கப்படுகின்ற அழகிய பாடலை உருவாக்கினார். அன்று அம்ப்ரியா பகுதியில் பேச்சு வழக்கிலிருந்த இத்தாலி மொழியில் உருவாக்கப்பட்ட முதல் இலக்கியப் படைப்பு இது என்று கருதப்படுகிறது.
அக்கவிதையில் பிரான்சிசு கடவுளின் புகழைப் பாடுகின்றார். கடவுள் படைத்த சூரியனை "சகோதரன்" என்றும் சந்திரனை "சகோதரி" என்றும் அழைக்கின்றார்.
இத்தாலிய (இலத்தீன்) மொழியில் சூரியன் ஆண்பால், சந்திரன் பெண்பாலென வரும். அவ்வாறே பிற படைப்புப் பொருள்களையும் பிரான்சிசு சகோதரன், சகோதரி என்று அழைத்தார். படைப்புலகில் உள்ள அனைத்தோடும் மனிதர் ஒரு குடும்பம்போல உறவு கொண்டுள்ளனர். எனவே, படைப்புலகை மனிதர் தம் விருப்பம்போலச் சுரண்டி அழிக்காமல், பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்னும் செய்தி பிரான்சிசின் "கதிரவன் கவிதையில்" அழகாகத் துலங்குகிறது.
பிரான்சிசு உருவாக்கிய கவிதையின் சுருக்கம்:
"உலகில் உள்ள அனைத்தையும் படைத்த கடவுளைச் சகோதரன் சூரியனும், சகோதரி சந்திரனும் போற்றுகின்றனர். வானத்தில் கண்சிமிட்டும் எண்ணிறந்த விண்மீன்களும் இறைபுகழ் பாடுகின்றன."
"சகோதரன் காற்றும் சகோதரி பூமியும், சகோதரன் நெருப்பும் சகோதரி தண்ணீரும் தம்மைப் படைத்த கடவுளை வாழ்த்துகின்றனர்."
"உலகில் வாழ்கின்ற உயிர்களெல்லாம் உன்னதன் புகழ் பாடுகின்றன. ஏன், சகோதரி சாவும் கூட இறைபுகழ் சாற்றுகிறது."
பிரான்சிசின் இறுதி சாசனம்
[தொகு]பிரான்சிசின் கண்பார்வை மிகவும் மோசமானது. சிகிச்சையும் பயனளிக்கவில்லை. 1225-1226 ஆண்டின்போது பிரான்சிசு சியேன்னா நகரில் இருந்தார். அங்கிருந்து 1226 ஏப்ரல் மாதம் அவரைக் கொர்ட்டோனா நகருக்குக் கொண்டு சென்றார்கள். அங்கு ஒரு சிற்றறையில் தங்கியிருந்தபோது அவர் தம் இறுதி சாசனத்தை உருவாக்கியதாகத் தெரிகிறது. அதில் பிரான்சிசு, சபைக்குத் தாம் வழங்கிய ஒழுங்கைப் பிரமாணிக்கமாகக் கடைப்பிடித்தல் பற்றி, "நினைவூட்டல், எச்சரிக்கை, வேண்டுகோள்" ஆகிய கோரிக்கைகளை முன்வைக்கின்றார். துன்புற்ற இயேசுவைப் பின்செல்வதில் ஒருநாளும் தயக்கம் காட்டலாகாது என்றும் தம் சகோதரர்களுக்கு அறிவுரை கூறுகிறார்.
இவ்வுலகில் ஆற்றுவதற்காகக் கடவுள் தமக்கு அளித்த பணி நிறைவுறும் வேளையில், சபைச் சகோதரர்கள் தமக்கு அளிக்கப்பட்ட பணியைப் பொறுப்போடு ஆற்ற வேண்டும் என்று கேட்கிறார்.
பிரான்சிசின் இறுதி நாள்கள் நெருங்கி வந்ததால் சகோதரர்கள் அவர் அசிசியில் இறக்க வேண்டும் என்று அவரை அவர் பிறந்த நகருக்குக் கொண்டு செல்ல அணியமானார்கள். அசிசியின் பரம எதிரியான பெரூஜியா நகரத்தின் வழியே சென்றால் ஒருவேளை அந்நகர மக்கள் பிரான்சிசு தம் நகரில் இறக்கட்டும், புனிதர் என்று போற்றப்படும் அவருடைய உடலைத் தம் நகரிலேயே வைத்துக்கொள்ளலாம் என்று எங்கே நிறுத்திவிடுவார்களோ என்று அஞ்சி, சகோதரர்கள் பிரான்சிசுக்குப் பலத்த பாதுகாப்பு அளித்து, அவரை ஒரு சுற்று வழியாக அசிசி கொண்டு சேர்த்தனர்.
அசிசியில் பிரான்சிசு அந்நகர் ஆயரின் இல்லத்திற்கு மக்களின் மகிழ்ச்சி ஆரவாரத்துக்கு நடுவே கொண்டு செல்லப்பட்டார். 1226 இலையுதிர் காலம் வந்ததும் பிரான்சிசு இறக்கும் நேரமும் நெருங்கியது. எனவே, பிரான்சிசு மனமாற்றம் அடைந்து, இயேசுவின் ஏழ்மையை முற்றிலும் தழுவி வாழ முடிவுசெய்த புனித தமயானோ கோவில் அருகே தம்மைக் கொண்டுபோகக் கேட்டார். அங்கே "போர்சியுங்குலா" (Portiuncula) என்ற "சிறுநிலம்" அருகே, ஒரு குடிசையில் தங்கினார். அங்கு போகும் வழியில் தம் அன்புக்குரிய அசிசி நகருக்குப் பிரியாவிடை கூறி, ஆசி வழங்கினார்.
இறப்பு
[தொகு]தாம் இறப்பதற்கு முந்தின நாள் மாலை நேரம் பிரான்சிசு தம் சகோதரர்களிடம் அப்பம் கொண்டுவரச் சொன்னார். அவரோடு கூட இருந்த சகோதரர்கள் ஒவ்வொருவருக்கும் அப்பத்திலிருந்து ஒரு சிறு துண்டைப் பிட்டுக் கொடுத்தார். இயேசு, தாம் துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் அறையுண்டு உயிர்துறந்தற்கு முந்தின நாள் தம் சீடர்களோடு பந்தியமர்ந்து, அவர்களோடு அப்பத்தைப் பகிர்ந்துகொண்டது போலவே பிரான்சிசும் செய்ய விரும்பினார். அப்பத்தைப் பகிர்ந்துகொண்டதும் பிரான்சிசு தம் சகோதரர்கள் ஒவ்வொருவருக்கும் இறுதி ஆசி வழங்கினார். "உலகில் நான் செய்ய வேண்டிய பணி முடிந்தது. நீங்கள் ஆற்ற வேண்டிய பணி யாதென்று உங்களுக்கு இயேசு கிறிஸ்து கற்பிப்பாராக" என்று கூறினார்.
ஏழ்மையைத் தம் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொண்ட பிரான்சிசு தமக்கென்று தாம் உடுத்த எளிய மேலாடையைக் கூட வைத்திருக்க விரும்பவில்லை. எனவே தம் ஆடையை அகற்றச் சொன்னார். பின்னர் தரையில் தம்மைக் கிடத்தச் சொன்னார். கடன் வாங்கிய ஒரு துணியால் அவரது உடலை மறைத்தனர். அனைத்தையும் துறந்த மனிதராக, ஏழையாக இவ்வுலகை விட்டுப் பிரிய விரும்பினார் பிரான்சிசு.
பின்னர் பிரான்சிசு தம் சகோதரர்களிடம் யோவான் நற்செய்தியிலிருந்து இயேசுவின் இறுதி இராவுணவு, துன்பங்கள் மற்றும் பிரியாவிடை பற்றிய பகுதியை (யோவான் 13:1-17) வாசிக்கச் சொன்னார். நற்செய்தி வாசகத்தைக் கவனமாகக் கேட்டுத் தியானித்தவராய், திருப்பாடல்கள் நூலிலிருந்து 141 (142)ஆம் திருப்பாடலை அவரே தளர்ந்த குரலில் பாடித் தொடங்கிவைத்தார். அப்பாடலின் இறுதி வசனத்தில் "சிறையினின்று என்னை விடுவித்தருளும்" (திபா 142:7) என்னும் சொற்றொடரைச் சகோதரர்கள் பாடினார்கள். அன்று சனிக்கிழமை, 1226ஆம் ஆண்டு, அக்டோபர் 3ஆம் நாள் இரவு. சூரியன் சாய்ந்தபின் மறுநாள் தொடங்குவதாகக் கணக்கிடுவதால் பிரான்சிசு அக்டோபர் 4ஆம் நாள் இறந்தார் என்று கணிப்பர். அப்போது பிரான்சிசுக்கு வயது 45. அவர் இயேசுவின் குரலுக்குச் செவிமடுத்து, இயேசுவை முற்றிலுமாகப் பின்சென்று வாழ்ந்திட முடிவு செய்து, மனமாற்றம் அடைந்த 12ஆம் ஆண்டு. அந்த நாளில் பிரான்சிசு இறந்தார்.
பிரான்சிசு இறந்த இரண்டே ஆண்டுகளில் அவர்தம் நெருங்கிய நண்பராயிருந்த திருத்தந்தை ஒன்பதாம் கிரகோரி இவருக்குப் புனிதர் பட்டம் வழங்கினார் (சூலை 16, 1228)[20]. இன்று, புனித அசிசி பிரான்சிசு உலகெங்கிலும் போற்றப்படுகின்ற சமயத் தலைவர்களுள் சிறப்பிடம் பெறும் ஒருவராகத் திகழ்கின்றார்[7].
பிரான்சிசுக்குப் புனிதர் பட்டம் வழங்கப்படுதல்
[தொகு]அக்டோபர் 4ஆம் நாளன்று பிரான்சிசின் உடலைப் பவனியாக அசிசி நகர் முழுவதும் கொண்டு சென்றார்கள். வழியில் புனித தமியானோ கோவிலில் அவ்வுடலைச் சிறிது நேரம் இறக்கிவைத்தார்கள். இவ்வாறு புனித கிளாராவும் அவருடைய சபைச் சகோதரிகளும் பிரான்சிசின் ஐந்துகாயங்கள் பதிந்த உடலுக்கு இறுதி வணக்கம் செலுத்தும் வாய்ப்புக் கிடைத்தது.
பின்னர் பிரான்சிசின் உடல் புனித ஜோர்ஜ் கோவிலில் தற்காலிகமாக அடக்கம் செய்யப்பட்டது. அக்கோவிலில்தான் பிரான்சிசு எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டார்; பலமுறை மறையுரைகள் ஆற்றியிருந்தார். இன்று அக்கோவில் புனித கிளாராவின் மடத்துக்குள் இணைக்கப்பட்டு அதன் ஒரு பகுதியாக விளங்குகிறது. அவரது உடல் வைக்கப்பட்ட இடத்தில் பல புதுமைகள் நிகழ்ந்ததாகத் தெரிகிறது.
பிரான்சிசு இறந்து இரண்டு ஆண்டுகள் முடிவதற்கு முன்னரே அவருக்குப் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. அப்பட்டத்தை அளித்தவர் திருத்தந்தை ஒன்பதாம் கிரகோரி ஆவார். அவர் கர்தினாலாக இருக்கும்போதே பிரான்சிசின் நெருங்கிய நண்பராக இருந்ததோடு, பிரான்சிஸ்கு சபையின் மேற்பார்வையாளராகவும் செயல்பட்டார்.
1228, அக்டோபர் 16ஆம் நாள் பிரான்சிசுக்குப் புனிதர் பட்டம் அளிக்கப்பட்டது. அதற்கு ஓராண்டுக்கு முன்னரே, பிரான்சிசுக்கு வணக்கம் செலுத்துவதற்காக ஒரு பெரிய கோவில் கட்டப்போவதாகவும், அதற்குக் கிறித்தவர்கள் நன்கொடை அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து, திருத்தந்தை மடல் எழுதினார். பிரான்சிசுக்குப் புனிதர் பட்டம் அளித்த மறுநாள் அவருக்காகக் கட்டப்படவிருந்த கோவிலுக்குத் திருத்தந்தை அடிக்கல் நாட்டினார்.
1228இல் தொடங்கிய கோவில் கட்டடம் 1253இல் நிறைவுபெற்று, கோவில் அர்ச்சிக்கப்பட்டு, அசிசியின் புனித பிரான்சிசுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
புனித பிரான்சிசின் உடல் மாற்றப்பட்டது
[தொகு]கோவில் வேலை நடந்துகொண்டிருந்தபோதே, பிரான்சிஸ்கு சபைத் தலைவர் சகோதரர் எலியா அசிசி நகர் மக்கள் சிலரோடு சேர்ந்து, புனித பிரான்சிசுவின் உடலை அவர் அடக்கம் செய்யப்பட்ட புனித ஜோர்ஜ் கோவிலிலிருந்து எடுத்து, புதிய கோவிலின் அடித்தளத்தில் பூமிக்குக் கீழே ஆழத்தில், பெரிய பீடத்துக்குக் கீழே இரகசியமாகக் கொண்டு வைத்துவிட்டார். இது 1230, மே மாதம் 25ஆம் நாள் நடந்தது.
அசிசிக்கு அருகிலிருந்த பெரூஜியா நகர மக்கள் பிரான்சிசின் புனித உடலைத் தங்கள் நகருக்குக் கொண்டு செல்ல விரும்பி, அவ்வுடலைக் கவர்ந்து விடுவார்களோ என்ற அச்சத்தால்தான் அவர் இவ்வாறு செய்தார். அக்காலத்தில், புனிதர் ஒருவரின் உடல் ஒரு நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டு, அவருடைய மீபொருள்கள் (relics) நகரத்தில் பாதுகாக்கப்பட்டால் அந்நகரம் ஆபத்துகளிலிருந்து காக்கப்படும் என்னும் நம்பிக்கை மக்களிடையே இருந்தது.
பிரான்சிசின் கல்லறை கோவிலின் பெரிய பீடத்தின் கீழே அமைக்கப்பட்டது. மேலும் கல்லறைமீது ஒரு பெருங்கல் வைக்கப்பட்டது. எனவே, புதிய கோவிலில் மிக ஆழத்தில் அமைக்கப்பட்ட புனித பிரான்சிசு கல்லறை பல நூற்றாண்டுகளாக மக்களால் அணுகமுடியாத ஆழத்தில் இருந்தது. 1818ஆம்.ஆண்டு திசம்பர் 12ஆம் நாள் புனித பிரான்சிசின் கல்லறை மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. கல்லறையைக் கண்டுபிடிப்பதற்காக அகழ்வாய்வு வல்லுநர்கள் 52 நாள் உழைக்க வேண்டியிருந்தது.
சர்ச்சை
[தொகு]பிரான்சிசின் உடலைப் புனித ஜோர்ஜ் கோவிலிலிருந்து எல்லாருக்கும் தெரியும் வண்ணம் மாற்றிடத்துக்குக் கொண்டு செலவதற்கான திட்டம் வகுக்கப்பட்டிருந்த நிலையில்தான் சகோதரர் எலியா தம் இரகசியத் திட்டத்தைச் செயல்படுத்திவிட்டார். அசிசி நகரின் ஆயரின் அனுமதி இல்லாமல் அந்த உடல் மாற்றம் நிகழ்ந்ததற்குத் தண்டனையாக அசிசி நகர மக்கள், சபைநீக்கம் செய்யப்பட்டனர். புனித பிரான்சிசு கோவிலில் பொது வழிபாடு நிகழ்த்தவும் தடைவிதிக்கப்பட்டது. பின்னர் இத்தடைகள் விலக்கப்பட்டன.
புனித பிரான்சிசுவிடம் துலங்கிய நற்பண்புகள்
[தொகு]புனித பிரான்சிசு கடந்த எட்டு நூற்றாண்டுகளாக எல்லாச் சமயங்களையும் சார்ந்த மக்களுக்கும், சமய நம்பிக்கை இல்லாதவர்களுக்கும், ஒரு சிறந்த முன்மாதிரியாக விளங்கிவந்துள்ளார். அதற்கான காரணங்கள் கீழ்வருவன:
- பிரான்சிசு தாம் வாழ்ந்த காலத்தில் நிலவிய சமூக மதிப்பீடுகளைக் கேள்விக்கு உட்படுத்தி, ஒரு புதிய வாழ்க்கை முறையை நடைமுறையில் காட்டினார். செல்வமும் புகழும் வீர சாகசமும் மதிக்கப்பட்ட சமூகத்தில் அவர் வறுமையையும் ஏழ்மையையும் தம் வாழ்க்கைத் துணையாகக் கொண்டார். போரும் வன்முறையும் பகைமையை வளர்க்கும் கருவிகள் என்று உணர்ந்த அவர், தம் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று தெரிந்தபிறகும், அமைதியின் தூதுவராக எகிப்திய சுல்தானைச் சென்று சந்தித்தார்.
- உலக அமைதிக்காகச் சமயங்கள் ஒத்துழைக்க முடியும் என்று அவர் அறிவித்த செய்தியைத் தொடர்ந்து, இன்று, உலக அமைதிக்கான "பல்சமய உரையாடல்" அசிசி நகரில் நடைபெறுகிறது.[21]
- பிரான்சிசு இயற்கையில் இறைவனைக் கண்டார். உலகமும் உலகில் உள்ள நீர், காற்று, மண், நெருப்பு மற்றும் இயற்கை வளங்களும், மரஞ்செடிகொடிகளும் பறவைகளும் விலங்கினங்களும் அன்புக் கடவுளின் படைப்புகள். அவற்றை மனிதர் சுரண்டாமலும் அழிக்காமலும் அனைவரின் நலனுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்பது பிரான்சிசின் செய்தி. இது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வளர்ந்துவரும் நம் காலத்தவர்க்கு உகந்த ஒன்று.
- தொழுநோயாளர் ஒருவரைத் தழுவி அணைத்து முத்தமிட்ட பிரான்சிசு, சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டோர் யாராயினும் அவர்களிடத்தில் இறைவனின் சாயலைக் காண்பதின் தேவையை இன்றைய உலகுக்கு உணர்த்துகிறார்.
திருத்தந்தை பிரான்சிசு அசிசி நகருக்குத் திருப்பயணம் செல்லல்
[தொகு]வரலாற்றிலேயே முதன்முதலாக ஒரு திருத்தந்தை "பிரான்சிசு" என்னும் பெயரைத் தேர்ந்தெடுத்துள்ளார். 2013, மார்ச்சு 13ஆம் நாள் கத்தோலிக்க திருச்சபையின் 266ஆம் திருத்தந்தையாகப் பொறுப்பேற்ற அர்செந்தீனிய நாட்டவரான பெர்கோலியோ, பிரான்சிசு என்னும் பெயரைத் தம் பெயராக ஏற்று, புனித பிரான்சிசைப் போன்று எளிய வாழ்வை மேற்கொண்டு, திருச்சபையும் ஏழ்மையைத் தழுவி ஏழைகளுக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றார்.
திருத்தந்தை பிரான்சிசு தமது பெயர்கொண்ட புனிதரான அசிசியின் பிரான்சிசு பிறந்து, வளர்ந்து, பணி செய்து, இறந்த இடமாகிய அசிசி நகருக்கு, அப்புனிதரின் திருவிழாவான அக்டோபர் 4ஆம் நாள் திருப்பயணமாகச் சென்றார். அங்கு, திருத்தந்தை தம் புனிதரின் வாழ்வோடு தொடர்புடைய அனைத்து இடங்களுக்கும் சென்று, மக்களைச் சந்தித்து உரையாடி, திருப்பலி நிகழ்த்தி, இறைவேண்டல் செய்து, மறையுரைகள் ஆற்றினார்.
புனித பிரான்சிசு தொழுநோயாளர் ஒருவரை அரவணைத்தது போன்று திருத்தந்தை பிரான்சிசும் உடல்-உள ஊனமுற்ற இளையோரை சந்தித்து, ஒருவர் ஒருவராகக் கட்டித் தழுவி, ஆசி வழங்கினார். கத்தோலிக்க அறநிலையம் நடத்துகின்ற ஏழையர் உணவகம் சென்று, அங்கு ஏழைகளோடு அமர்ந்து திருத்தந்தை உணவு உட்கொண்டார். பின்னர், புனித பிரான்சிசு தாம் உடுத்தியிருந்த ஆடையைகூட கழற்றிக் கொடுத்துவிட்டு இயேசுவைப் பின்செல்ல முடிவெடுத்த இடத்தில் திருத்தந்தை உரையாற்றியபோது, புனித பிரான்சிசைப் போன்று திருச்சபையும் ஏழ்மையைக் கடைப்பிடித்து, ஏழைகளுக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Paschal Robinson (1913). "St. Francis of Assisi". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.
- ↑ 2.0 2.1 Englebert, Omer (1951). The Lives of the Saints. New York: Barnes & Noble. p. 529. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1566195164.
- ↑ 4.0 4.1 4.2 "Francis of Assisi." Cross, F. L., ed. The Oxford dictionary of the Christian church. New York: Oxford University Press. 2005
- ↑ G. K. Chesterton (1924). St. Francis of Assisi (14 ). Garden City, New York: Image Books. பக். 158
- ↑ 6.0 6.1 Chesterton(1924), pp. 54–56
- ↑ 7.0 7.1 7.2 7.3 7.4 Brady, Ignatius Charles. "Saint Francis of Assisi." Encyclopædia Britannica Online.
- ↑ பீட்டர் வால்டோ,
- ↑ வால்டேன்சியர் இயக்கம்
- ↑ 10.0 10.1 Chesterton(1924), pp. 110–111
- ↑ 11.0 11.1 சாரசீனியர்
- ↑ புனித சாமிநாதர்
- ↑ பிரான்சிஸ்கன் மூன்றாம் சபை
- ↑ நான்காம் இலாத்தரன் பொதுச்சங்கம்
- ↑ திருநாட்டுக் காவலர்கள்
- ↑ கிறிஸ்து பிறப்பு விழாக் குடில்
- ↑ "stigmatization." Cross, F. L., ed. The Oxford dictionary of the Christian church. New York: Oxford University Press. 2005
- ↑ 18.0 18.1 18.2 Chesterton(1924), p.131
- ↑ பிரான்சிசு தம் கையால் தோல் ஏட்டில் எழுதிய ஆசியுரை.
- ↑ இன்றைய புனிதர்: அசிசியின் புனித பிரான்சிஸ், வத்திக்கான் வானொலி
- ↑ அசிசி நகரில் பல்சமய உரையாடல் - 2011, அக்டோபர் 27
ஆதாரங்கள்
[தொகு]- Bonaventure; Cardinal Manning (1867). The Life of St. Francis of Assisi (from the Legenda Sancti Francisci) (1988 ed.). Rockford, Illinois: TAN Books & Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0895553430
- Chesterton, Gilbert Keith (1924). St. Francis of Assisi (14 ed.). Garden City, New York: Image Books.
- Englebert, Omer (1951). The Lives of the Saints. New York: Barnes & Noble.
- Karrer, Otto, ed., St. Francis, The Little Flowers, Legends, and Lauds, trans. N. Wydenbruck, (London: Sheed and Ward, 1979)
- Robinson, Paschal (1913). "St. Francis of Assisi". Catholic Encyclopedia. New York: Robert Appleton Company. "St._Francis_of_Assisi". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.
ஊடகங்களில் பிரான்சிசு
[தொகு]- The Flowers of St. Francis, a 1950 film directed by Roberto Rossellini and co-written by Federico Fellini
- Francis of Assisi, a 1961 film directed by Michael Curtiz, based on the novel The Joyful Beggar by Louis de Wohl
- Brother Sun, Sister Moon, a 1972 film by Franco Zeffirelli
- Francesco, a 1989 film by Liliana Cavani, contemplatively paced, follows Francis of Assisi's evolution from rich man's son to religious humanitarian, and eventually to full-fledged self-tortured saint. Saint Francis is played by Mickey Rourke, and the woman who later became Saint Clare, is played by Helena Bonham Carter
- St. Francis, a 2002 film directed by Michele Soavi, starring Raoul Bova and Amélie Daure.
- Clare and Francis, a 2007 film directed by Fabrizio Costa, starring Mary Petruolo and Ettore Bassi.