உள்ளடக்கத்துக்குச் செல்

பாண்டவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாண்டவர் எனப்படுவர்கள் மகாபாரதத்தில் வரும் மன்னன் பாண்டுவின் ஐந்து மகன்கள் ஆவார்கள். இவர்களுள் முதல் மூவரான தர்மன், பீமன் மற்றும் அர்ஜூனன் ஆகியோர் குந்தி மூலமும் கடைசி இருவரான நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோர் மாத்ரி மூலமும் பிறந்தவர்கள் ஆவர். இவர்கள் ஐவர் என்பதால் பஞ்ச பாண்டவர் என்றும் அழைக்கப்படுவர். இவர்களுக்கும், இவர்கள் பெரியப்பா திருதராஷ்டிரனின் மகன்களான கௌரவர்களுக்கும் நடந்த போரான குருட்சேத்திரப் போரே மகாபாரத்தின் முக்கிய நிகழ்வாகும்.[1]

பாண்டவர்களின் பிறப்பு

[தொகு]

யமுனை நதிக்கரையில் யாதவ குழு ஒன்று செழிப்பான மதுரா எனும் நகரை அமைத்து யாதவகுழு ஆட்சி முறையை நடத்தி வந்தது.[1] சூரசேனரின் மகள் பிரதை (பிருதை,பிரீதா), பிரதையை குந்தி நாட்டு மன்னர் குந்தி போஜன் தத்தெடுத்து குந்தி எனப் பெயரிட்டு வளர்த்து வந்தார். மண வயதையடைந்த குந்திக்கு சுயம்வரம் நடந்தது, சுயம்வரத்தில் கூடியிருந்தவர்களில் பாண்டுவை தேர்ந்தெடுத்தாள்.

பீஷ்மர், இரண்டாவதாக மத்திர நாட்டின் மன்னன் சல்யனின் சகோதரி மாதுரியை பாண்டுவிற்கு மணம் முடித்து வைக்க விரும்பினார். சல்லியனுக்கு, அவரது தங்கையின் நிச்சயத்திற்கு மணியும், முத்தும், பவளமும் சீராகத் தந்தார் பீஷ்மர், அவற்றை ஏற்றுக்கொண்டு மாத்ரியை பாண்டுவிற்கு மணம் முடித்துத் தந்தார் சல்யர்.[2]

பல நாடுகளை வெற்றி கொண்டு கப்பத்தொகையைப் பெற்று வந்த பின் குந்தியாலும் மாத்ரியாலும் தூண்டப்பட்டு வனவாசத்தை நாடிச் சென்றார் பாண்டு.[2]

வேட்டையின் போது பாண்டுவின் அம்பு பெண்மானை முயங்கிக் கொண்டிருந்த ஆண் மானை தாக்கிவிடுகிறது. மானின் அருகில் சென்று பார்த்த போது பாண்டுவுக்கு உண்மை தெரிகிறது. கிண்டமா என்ற முனிவரும் அவரது மனைவியும் காட்டில் சுதந்திரமாக உலவி காதல் செய்யும் நோக்கில் தங்களது தவ வலிமையால் மான்களாக உருவம் மாறியிருந்தனர். இறக்கும் நேரத்தில் கிண்டமா முனிவர் "ஒரு ஆணும் பெண்ணும் காதல் புரிவதை ஆக்ரோசமாக தடுத்துவிட்டாய் உனக்கு காதல் சுகம் என்ன என்பது தெரியாமல் போகக் கடவது எந்த பெண்ணையும் காதல்கொண்டு தொட்டால் உடனே இறந்து போவாய்" என சாபமிட்டார். ஒரு குழந்தைக்கு தகப்பன் ஆக முடியாதவன் அரசன் ஆகமுடியாது என வருந்தி பாண்டு அத்தினாபுரம் செல்ல மறுத்து சதஸ்ருங்க வனத்தில் முனிவர்களுடன் தங்கிவிடுகிறான். இச்செய்தி அத்தினாபுரம் எட்டுகிறது. பாண்டு இல்லாத நிலையில் அத்தினாபுரத்தின் ஆட்சியை பீஷ்மர் திருதராட்டிரனுக்கு வழங்குகிறார். சில மாதங்களில் காந்தாரி கருத்தரித்தாள் என்ற செய்தி பாண்டுவுக்கு தெரியவே ஆட்சியும் போய், ஒரு குழந்தைக்கு தந்தையும் ஆகமுடியாத நிலையில் மனழுத்தமும், சோர்வும், விரக்தியும் அடைந்து பாண்டு ஒரு முடிவெடுத்தான். சுவேதகேது முனிவரின் நியதிப்படி ஒரு பெண்ணின் கணவர் அவர் விரும்பும் ஒரு ஆணுடன் சேர்ந்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம், அதன்படி தன்னுடன் இருந்த குந்தியை அழைத்து, யாராவது ஒரு முனிவரின் மூலமாக ஒரு குழந்தையை பெற்றுக்கொள் என வேண்டினான். தேவர்களையே அழைக்க முடியும் போது ஏன்? முனிவர்களை அழைக்க வேண்டும் என கூறி, தர்மத்தின் தலைவன் யமன் மூலம் யுதிஷ்டிரன் (தர்மன்), மிகுந்த சக்தி படைத்த வாயு பகவான் மூலம் பீமன், தேவர்களின் தலைவனான இந்திரன் மூலம் அருச்சுனன், என மூன்று குழந்தைகளை குந்தி பெற்றாள். பாண்டு வேறு ஒரு தேவனை அழைக்க சொன்ன போது " மாட்டேன் மூவருடன் இருந்தாயிற்று நான்காவதாக ஒருவருடன் இருந்தால் என்னை வேசி என்று பெசுவார்கள் அப்படித்தான் தர்மம் சொல்கிறது" என மறுத்துவிடுகிறாள். "நீ வேறு எந்த ஆணிடமும் செல்ல முடியாது" என்பதால் மாத்ரிக்காக ஒரு தேவனை அழைக்கச் சொன்னான். மாத்ரியிடம் கேட்ட போது காலை, மாலை நட்சத்திரங்களான அஸ்வினி தேவர்களை அழைக்கச் சொன்னாள். அஸ்வினி தேவர்கள் எனும் இரட்டையர்கள் மூலம் உலகத்திலேயே மிக அழகான நகுலனும், உலகத்திலேயே எல்லாம் அறிந்த அறிவாளியான சகாதேவனும் பிறந்தார்கள். இப்படியாக பிறந்தவர்களை பாண்டவர்கள் என்று அத்தினாபுரத்து மக்கள் அழைத்தனர்.

ஐந்து பாண்டவர்கள்

[தொகு]

சான்றாவணம்

[தொகு]
  1. 1.0 1.1 Jaya-An Illustrated Retelling of the MAHABHARATA-DEVDUTT PATTANAIK
  2. 2.0 2.1 ஸ்ரீமஹாபாரத ஸாரம்; ’அண்ணா’; ஸ்ரீராமகிருஷ்ண மடம்; சென்னை; பக்கம் 125,126
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Pandavas
என்பதில் ஊடகங்கள் உள்ளன.